பக்கம் -44-

நழுவுகிறான் இப்லீஸ்

சுராகா இப்னு மாலிகின் உருவத்தில் போருக்கு வந்திருந்த இப்லீஸ் இணைவைப்பவர்களை வானவர்கள் வெட்டுவதைப் பார்த்தவுடன் போர் களத்திலிருந்து நழுவினான். அவனை உண்மையிலேயே சுராகா என்று எண்ணியிருந்த ஹாரிஸ் இப்னு ஹிஷாம் அவனை தப்ப விடாமல் இருக்க பிடித்துக் கொண்டார். ஹாரிஸின் நெஞ்சில் அடித்து அவரைக் கீழே தள்ளி விட்டு இப்லீஸ் ஓடினான். மற்றவர்கள் “சுராகாவே! எங்கே ஓடுகிறீர்? எங்களை விட்டுப் பிரியாமல் கடைசி வரை எங்களுடன் துணையாக இருப்பேன் என்று கூறியிருந்தீரே?” என்றனர். அதற்கு ஷைத்தான்,

“நிச்சயமாக நான் உங்களைவிட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்க முடியாத ஒன்றை நான் பார்க்கின்றேன் நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றேன் வேதனை செய்வதில் அல்லாஹ் மிகக் கடுமையானவன்” (அல்குர்ஆன்:48)

என்று கூறிக் கொண்டே, வெருண்டோடி கடலில் குதித்தான்.

பெரும் தோல்வி

எதிரிகளின் அணியில் சலசலப்பும், தோல்வியின் அடையாளங்களும் வெளிப்பட்டன. முஸ்லிம்களின் கடுமையானத் தாக்குதலுக்கு முன் இணைவைப்போரின் அணி சின்னா பின்னமாகியது போர் முடிவை நெருங்கியது. எதிரிகள் நாலா பக்கங்களிலும் விரைந்தோடித் தப்பிக்க முயன்றனர். முஸ்லிம்கள் அவர்களைப் பின்தொடர்ந்து பணிந்தவரை கைது செய்து பணியாதவரை வெட்டி வீழ்த்தினர். இவ்வாறு இணைவைக்கும் எதிரிகள் போரில் பெரும் தோல்வியடைந்தனர்.

அபூஜஹ்லின் வீம்பு

வம்பன் அபூஜஹ்ல் தனது அணியில் சலசலப்பைப் பார்த்தவுடன் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் படையை உற்சாகப்படுத்த முயன்றான். பெருமையுடனும் திமிருடனும் அவன் தனது படையைப் பார்த்து “சுராகா உங்களை விட்டுப் பிரிந்து சென்றதால் நீங்கள் தோற்றுவிட வேண்டாம். ஏனெனில், அவன் முஹம்மதுக்கு இவ்வாறுதான் (படையை விட்டுப் பிரிந்து செல்வதாக) வாக்குக் கொடுத்திருந்தான். உத்பா, ஷைபா, வலீத் கொல்லப்பட்டதால் நீங்கள் பயந்துவிட வேண்டாம். அவர்கள் அவசரப்பட்டு விட்டார்கள். லாத், உஜ்ஜாவின் மீது சத்தியமாக! இந்த முஸ்லிம்களை கயிற்றில் பிணைத்துக் கட்டாதவரை நாம் திரும்ப மாட்டோம். நீங்கள் முஸ்லிம்களில் எவரையும் கொன்றுவிட வேண்டாம். மாறாக, அவர்களைப் பிடித்து கைதிகளாக்கிக் கொண்டு வாருங்கள். அவர்கள் செய்த தீய செயலை அவர்களுக்குப் புரிய வைப்போம்.”

இப்படி திமிராகப் பேசிய அபூஜஹ்லுக்குத் தனது அகம்பாவத்தின் எதார்த்தம் புரியத் தொடங்கியது. அவனைச் சுற்றி இணைவைப்போரின் பெரிய கூட்டமொன்று, தங்களது வாட்களாலும் ஈட்டிகளாலும் பாதுகாப்பு அரணை அமைத்திருந்தார்கள். இருந்தாலும் முஸ்லிம்களின் புயலுக்கு முன் அவை இருந்த இடம் தெரியாமல் ஆயின. அப்போது அபூஜஹ்ல் குதிரையின் மீது சுற்றிக் கொண்டிருப்பதைப் முஸ்லிம்கள் பார்த்தார்கள். இரு அன்சாரி சிறுவர்களின் கையினால் மரணம் அவனது இரத்தத்தைக் குடிக்க எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

கொல்லப்பட்டான் அபூஜஹ்ல்

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) கூறுகிறார்கள்: நான் பத்ர் போர் அன்று அணியில் நின்று கொண்டு, திரும்பிப் பார்த்த போது என் வலப்பக்கமும் இடப்பக்கமும் குறைந்த வயதுடைய இரு வாலிபர்களே இருந்தனர். அவர்கள் இருப்பது எனக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்நிலையில் இருவரில் ஒருவர் மற்றவருக்குத் தெரியாமல் “என் சிறிய தந்தையே! எனக்கு அபூஜஹ்லை காட்டுங்கள்” என்றார். “நீ அவனை என்ன செய்வாய்?” என்று நான் கேட்டேன். அதற்கவர் “அவன் நபியை ஏசுவதாக நான் கேள்விப்பட்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் இன்று அவனைப் பார்த்தால் நான் அல்லது அவன் மரணிக்கும் வரை அவனை விட்டும் பிரியமாட்டேன்” என்றார். இப்பேச்சு எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது. இதற்கிடையில் மற்றவரும் இவ்வாறே, என்னைச் சீண்டி முந்தியவர் கூறியதைப் போன்றே கூறினார். அது சமயம் அபூஜஹ்ல் மக்களுக்கு மத்தியில் உலாவுவதைப் பார்த்தேன். அவ்விரு வாலிபர்களிடம் “நீங்கள் கேட்டவன் இதோ இவன் தான்!” என்றேன்.. இருவரும் அவனை நோக்கிப் பாய்ந்தனர். சிறிது நேரத்தில் அவன் கதையை முடித்து நபி (ஸல்) அவர்களிடம் திரும்பினர். “உங்கள் இருவரில் யார் அவனைக் கொன்றது?” என்று நபி (ஸல்) கேட்க ஒவ்வொருவரும் “நானே கொன்றேன்” என்றார். “உங்கள் வாட்களை துடைத்து விட்டீர்களா?” என்று நபி (ஸல்) கேட்க இல்லை! எனக் கூறி தங்கள் வாட்களை காண்பிக்கவே “நீங்கள் இருவருமே அவனைக் கொன்றீர்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள். பிறகு அபூஜஹ்லின் உடைமைகளை அவர்களில் ஒருவரான முஆத் இப்னு அம்ரு இப்னு ஜமூஹ்விற்கு வழங்கினார்கள். அபூஜஹ்லைக் கொன்ற இரண்டாமவர் முஅவ்விது இப்னு அஃப்ரா (ரழி) ஆவார். அவர் இப்போரில் வீரமரணம் எய்தினார். (ஸஹீஹுல் புகாரி)

முஆது இப்னு அம்ர் இப்னு அல் ஜமூஹ் (ரழி) கூறுகிறார்கள்: “அபூஜஹ்ல் அடர்ந்த மரங்களுக்கு நடுவிலுள்ள ஒரு மரத்தைப் போல் அவனை சென்றடைய முடியாத அளவிற்கு பாதுகாப்பில் இருக்கிறான். அவனிடம் யாரும் செல்ல முடியாது” என்று மக்கள் கூறுவதை நான் கேட்டேன். எனவே, நானே அவனைக் கொலை செய்ய வேண்டுமென்று முடிவு செய்தேன். நான் அவனைப் பார்த்துவிட்டபோது ஓடிச்சென்று அவனது கரண்டைக் கால்களைத் துண்டித்தேன். திருகையிலிருந்து அரைபடாத கொட்டை நசுங்கினால் பறக்குமே,,, அது போன்று அவனது கால்கள் பறந்து விழுந்தன. இதைப் பார்த்த அவனது மகன் இக்மா எனது தோள் மீது பாய்ந்து வெட்டினார். அதனால் எனது கை வெட்டப்பட்டு உடம்பில் தோலுடன் தொங்கிக் கொண்டிருந்தது. அன்றைய தினம் முழுக்க அதை என் முதுகுக்குப் பின்னால் போட்டுக் கொண்டு போர் செய்தேன். அது எனக்கு மிகவும் நோவினை அளித்த போது அதை என் பாதத்தின் கீழ் வைத்து பிய்த்துத் தூக்கி எறிந்து விட்டேன். பின்பு காயப்பட்டுக் கிடந்த அபூஜஹ்லுக்கு அருகில் சென்ற முஅவ்விது இப்னு அஃப்ரா (ரழி) அவனை வெட்டிச் சாய்த்தார். ஆனால், அபூஜஹ்ல் குற்றுயிராகக் கிடந்தான். இப்போரில் முஅவ்விது (ரழி) இறுதியில் வீரமரணம் எய்தினார்கள்.

போர் முடிந்த போது நபி (ஸல்) “அபூஜஹ்லுக்கு என்னவானது என யார் பார்த்து வருவீர்கள்?” என்று கேட்டார்கள். அப்போது அவனைத் தேடிப் பார்ப்பதற்குத் தோழர்கள் பல திசைகளிலும் பிரிந்து சென்றார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அபூஜஹ்லைப் பார்த்து விட்டார்கள். அவன் தனது இறுதி மூச்சை வாங்கிக் கொண்டிருந்தான். இப்னு மஸ்ஊது (ரழி) தனது காலை அவனது கழுத்தின் மீது வைத்து அவன் தலையைத் தனியாக அறுத்தெடுப்பதற்காக அவன் தாடியைப் பிடித்து “அல்லாஹ்வின் எதிரியே! அல்லாஹ் உன்னைக் கேவலப்படுத்தி விட்டானா?” என்று கேட்டார்கள். அதற்கவன் “என்னை அல்லாஹ் எப்படி கேவலப்படுத்துவான்? நீங்கள் கொன்றிருக்கும் மனிதர்களில் என்னை விட உயர்ந்தவர் யார் இருக்க முடியும்? அல்லது நீங்கள் கொன்றிருக்கும் மனிதர்களில் என்னை விட மேலானவர் யார் இருக்க முடியும்?” என்று கேட்டுவிட்டு, “கேவலம்! சாதாரண விவசாயிகளைத் தவிர்த்து வேறு யாராவது (என் இனத்தவர்) என்னை கொன்றிருக்க வேண்டுமே என்று கூறி, சரி இன்றைய தினத்தில் வெற்றி யாருக்கு என்று சொல்?” என்றான். அதற்கு இப்னு மஸ்ஊது (ரழி) “அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும்தான் கிடைத்தது” என்று கூறினார்கள். பின்பு அவனது கழுத்தின் மீது காலை வைத்திருந்த இப்னு மஸ்ஊதிடம் “ஏ... ஆடு மேய்த்த பொடியனே!” நீ மிகுந்த சிரமமான ஓர் இடத்தின் மேல் நிற்கிறாய் என்பதைத் தெரிந்துகொள்” என்று கூறினான்.

இதற்குப் பிறகு இப்னு மஸ்ஊது (ரழி) அவர்கள் அபூஜஹ்லின் தலையைத் தனியாக வெட்டியெடுத்து நபி (ஸல்) அவர்களிடம் சென்று “அல்லாஹ்வின் தூதரே! இதோ அல்லாஹ்வின் எதிரி அபூஜஹ்லின் தலை!” என்று கூறினார்கள். நபி (ஸல்) “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை” என்று மூன்று முறை கூறிவிட்டு “அல்லாஹ் மிகப் பெரியவன்! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் தனது வாக்கை உண்மைப்படுத்தினான். தனது அடியாருக்கு உதவி செய்தான். எதிரி படைகள் அனைத்தையும் தோற்கடித்தான்” என்று கூறி, என்னை அழைத்துச் சென்று அவனை எனக்குக் காட்டு என்றார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரழி) கூறுகிறார்கள்: நாங்கள் அவன் இருந்த இடத்திற்குச் சென்றோம். அவனைக் கண்ட நபி (ஸல்) “இவன்தான் இந்த சமுதாயத்தின் ஃபிர்அவ்ன்”” என்றார்கள்.

இறைநம்பிக்கை நிகழ்த்திய அதிசயங்கள்

உமைர் இப்னு ஹுமாம் (ரழி) மற்றும் அவ்ஃப் இப்னு ஹாரிஸ் (ரழி) ஆகிய இருவரின் அற்புதமான முன் உதாரணங்களை இதற்கு முன் கூறினோம். அதுமட்டுமல்லாமல், மேலும் பல அதிசயமான நிகழ்ச்சிகள் இப்போரில் நடந்தன. கொள்கையில் அவர்களுக்கிருந்த உறுதியையும் நிலைத்தன்மையையும் அந்நிகழ்ச்சிகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.

இப்போரில் தந்தை பிள்ளைக்கு எதிராகவும், பிள்ளை தந்தைக்கு எதிராகவும், சகோதரர்கள் சகோதரர்களுக்கு எதிராகவும் போரிட்டனர். இவர்களுக்கு மத்தியில் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு வாட்கள் தீர்ப்பளித்தன. மக்காவில் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் தம்மைக் கொடுமைப்படுத்தியவர்களைக் கொன்று தங்களுடைய சினத்தை ஆற்றிக் கொண்டனர்.

1) இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) தங்களது தோழர்களிடம் “ஹாஷிம் கிளையைச் சேர்ந்த சிலரையும் மற்றும் சிலரையும் நான் அறிவேன். அவர்கள் நிர்பந்தமாக போருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நம்மிடம் சண்டை செய்ய வேண்டுமென்று அவர்களுக்கு எவ்வித விருப்பமும் இல்லை. எனவே, ஹாஷிம் கிளையைச் சேர்ந்த எவரையும் நீங்கள் கொன்றுவிட வேண்டாம். மேலும், அபுல் பக்த இப்னு ஷாமையும் கொன்றுவிட வேண்டாம். அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபையும் கொன்றுவிட வேண்டாம். அவர் நிர்ப்பந்தமாகத்தான் அழைத்து வரப்பட்டிருக்கிறார்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் இவ்வார்த்தையைக் கேள்விப்பட்ட உத்பாவின் மகன் அபூஹுதைஃபா “என்ன! எங்களது பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு அப்பாஸை மட்டும் விட்டுவிட வேண்டுமா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அவரைச் சந்தித்தால் வாளால் அவருக்கும் கடிவாளமிடுவேன்” என்றார். இவ்வார்த்தையை நபி (ஸல்) கேள்விப்பட்டபோது உமரிடம் “அபூஹப்ஸே! அல்லாஹ்வின் தூதருடைய சிறிய தந்தையின் முகத்தை வாளால் வெட்டுவது நியாயமாகுமா?” என்று வருத்தப்பட்டார்கள். உமர் (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! என்னை அனுமதியுங்கள். அபூ ஹுதைஃபாவின் கழுத்தை வாளால் வெட்டி வீசிகிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் நயவஞ்சகராகி விட்டார்” என்றார்கள்.

தான் கூறிய சொல்லை நினைத்து அபூஹுதைஃபா எப்போதும் கவலைப்படுவார். “இந்த வார்த்தையைக் கூறிய அன்றிலிருந்து நான் நிம்மதியாக இல்லை. இந்த வார்த்தையின் விளைவை எண்ணி பயந்துகொண்டே இருக்கிறேன், அல்லாஹ்வே இறைவன் என்று நான் சாட்சியம் கூறுவதுதான் அந்தக் குற்றம் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக ஆகலாம்” என்று அபூஹுதைஃபா (ரழி) ஆதரவு வைப்பார்.

அபூஹுதைஃபா (ரழி) அபூபக்ர் (ரழி) அவர்களின் ஆட்சியின் போது யமாமாவில் நடந்த போரில் வீரமரணம் எய்தினார்.

2) மேலும் நபி (ஸல்), அபுல் பக்தயைக் கொலை செய்யக் கூடாதென்று தடுத்திருந்தார்கள். ஏனெனில், அவர் மக்காவில் நபி (ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பளித்தவர் அவர் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினை அளித்ததில்லை நபி (ஸல்) வெறுக்கும்படியான எந்தவொரு காரியத்தையும் அவர் செய்ததில்லை. மேலும் ஹாஷிம், முத்தலிப் கிளையினரை ஒதுக்கி வைக்க வேண்டுமென்று எழுதப்பட்ட ஒப்பந்தப் பத்திரத்தை கிழிப்பதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்தார்.

இவ்வாறிருந்தும் அபுல் பக்த போரில் கொல்லப்பட்டார். அதற்குக் காரணம், முஜத்தர் இப்னு ஜியாது (ரழி) என்ற நபித்தோழர் அபுல் பக்தயையும் அவன் நண்பரையும் போல் சந்தித்தார். இவ்விருவரும் ஒன்றாக சேர்ந்து முஸ்லிம்களுடன் போர் செய்து கொண்டிருந்தனர். அப்போது முஜத்தர் “அபுல் பக்தயே! உன்னைக் கொல்லக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் தடுத்திருக்கிறார்கள், எனவே, நீங்கள் விலகிவிடுங்கள்” என்றார். அதற்கு “எனது தோழரையும் கொல்லக் கூடாதென்று அவர் கூறியிருக்கிறாரா?” என்றார். அதற்கு முஜத்தர் “இல்லை. உன் நண்பரைக் கொல்லாமல் நாங்கள் விடமாட்டோம்” என்றார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் ஒன்றாகவே சாவோம்” என்று அபுல் பக்த கூறினார். பின்பு முஜத்தருடன் அவர் சண்டையிடவே முஜத்தர் அவரைக் கொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்.

3) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) கூறுகிறார்கள்: நானும் உமையா இப்னு கலஃபும் மக்காவில் இஸ்லாம் வருவதற்கு முன்பே நண்பர்களாக இருதோம். பத்ர் போர் அன்று போரில் எனக்குக் கிடைத்த கவச ஆடைகளுடன் உமையாவுக்கு அருகே சென்று கொண்டிருந்தேன். அப்போது உமையா தனது மகன் அலீ இப்னு உமையாவின் கையை பிடித்தவனாக சரணடைவதற்காக நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்த உமையா “என்னை நீ கைதியாக்கிக் கொள்ள வேண்டாமா? உன்னிடமுள்ள இந்த கவச ஆடைகளைவிட நான் சிறந்தவனல்லவா? இன்றைய தினத்தைப் போல் ஒரு நாளை நான் பார்த்ததில்லை. உங்களுக்கு பால் கொடுக்கும் ஒட்டகங்கள் வேண்டாமா? என்னை யாராவது சிறைப் பிடித்தால் நிறைய பால் கொடுக்கும் ஒட்டகங்களை பிணையாக நான் தருவேன்” என்று கூறினான். இந்த வார்த்தையைக் கேட்டவுடன் உருக்குச் சட்டைகளைக் கீழே போட்டுவிட்டு அவ்விருவரையும் இரு கைகளில் பிடித்துக் கொண்டேன். அப்போது உமையா, “தீக்கோழியின் இறகை தன் நெஞ்சில் சொருகியிருக்கும் அந்த மனிதர் யார்?” என்று கேட்டான். “அவர்தான் ஹம்ஜா” என்றேன். அதைக் கேட்ட உமய்யா “அவர்தான் எங்களுக்கு இப்போரில் நிறைய அழிவுகளை ஏற்படுத்தியவர்” என்றான்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) தொடர்ந்து கூறுகிறார்கள்: நான் உமையாவையும் அவனது மகனையும் இழுத்துச் சென்ற போது உமையா என்னுடன் இருப்பதை பிலால் (ரழி) பார்த்து விட்டார். (இந்த உமையாதான் மக்காவில் பிலால் (ரழி) அவர்களுக்கு அதிகம் வேதனை தந்தவன்.) அவனைப் பார்த்த பிலால் (ரழி) “இதோ... இறைநிராகரிப்பாளர்களின் தலைவன் உமையா! இவன் இன்று தப்பித்தால் என்னால் இனி தப்பிக்க முடியாது” என்று சப்தமிட்டார். அதற்கு நான் “பிலாலே சும்மா இரும். இவன் இப்போது எனது கைதி” என்று கூறினேன். மீண்டும் பிலால் (ரழி) “இவன் தப்பித்தால் நான் தப்பிக்க முடியாது” என்று அலறினார். அதற்கு நான் “ஓ கருப்பியின் மகனே! நான் சொல்வது உனக்குக் கேட்கவில்லையா?” என்றேன். அதற்கு மீண்டும் பிலால் (ரழி) “இவன் தப்பித்தால் நான் இனி தப்பிக்கவே முடியாது” என்று கூறிவிட்டு, மிக உயர்ந்த சப்தத்தில் “அல்லாஹ்வின் உதவியாளர்களே! இதோ இறைநிராகரிப்பாளர்களின் தலைவன் உமையா இப்னு கலஃப்! இவன் தப்பித்தால் என்னால் தப்பிக்க முடியாது” என்று கூறினார். முஸ்லிம்கள் இதைக் கேட்டவுடன் வளையத்தைப் போன்று எங்களைச் சூழ்ந்துகொண்டனர். நான் உமையாவைக் காப்பாற்ற முயன்றேன். அப்போது ஒருவர் உமையாவின் மகனை பின்புறத்திலிருந்து வெட்டவே அவன் தரையில் விழுந்தான். இதைப் பார்த்த உமையா உரத்த குரலில் கத்தினான். அதுபோன்ற சப்தத்தை நான் கேட்டதே இல்லை. உடனே நான் “உமையாவே உன்னை நீயே காப்பாற்றிக்கொள்! இன்று என்னால் உன்னைக் காப்பாற்ற முடியாது. உனக்கு எந்தப் பாதுகாப்பும் கொடுக்க முடியாது. உனக்கு எந்தப் பலனையும் என்னால் செய்ய முடியாது” என்றேன். அதற்குப் பின் முஸ்லிம்கள் அவ்விருவரையும் தங்கள் வாட்களால் வெட்டி அவர்கள் கதையை முடித்தனர். இதற்குப் பின் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) “அல்லாஹ் பிலாலின் மீது கருணை காட்டட்டும்! போரில் எனக்குக் கிடைத்த கவச ஆடைகளும் போயின் அவர் எனது கைதிகளையும் கொன்றார்” என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி)

4) இப்போரில் உமர் இப்னு கத்தாப் (ரழி) தனது நெருங்கிய உறவினர் என்றும் பார்க்காமல் தனது தாய்மாமன் ‘ஆஸ் இப்னு ஹிஷாம் இப்னு முகீரா“வைக் கொன்றார்கள். போர் முடிந்து மதீனாவிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் கைதிகளில் ஒருவராக இருந்த அப்பாஸிடம் “அப்பாஸே! நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது தந்தை கத்தாப் முஸ்லிமாகுதைவிட நீங்கள் முஸ்லிமாவதுதான் எனக்கு விருப்பமானது. அதற்குக் காரணம் நீங்கள் முஸ்லிமாவது நபி (ஸல்) அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்” என்று கூறினார்கள்.

5) அபூபக்ர் (ரழி), இணைவைப்போருடன் வந்திருந்த தமது மகன் அப்துர்ரஹ்மானைக் கூவி அழைத்தார்கள். “ஏ... கெட்டவனே! எனது செல்வங்கள் எங்கே?” என்றார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான்,

ஆயுதமும் வேகமாக ஓடும் குதிரையும்...
வழிகெட்ட வயோதிகர்களைக் கொல்லும் வாளும்...
இவற்றைத் தவிர வேறொன்றும் என்னிடம் இல்லை என பதிலளித்தார்.

6) நபி (ஸல்) தங்களது கூடாரத்திலிருந்து நிலைமைகளைக் கவனித்தார்கள். முஸ்லிம்கள் எதிரிகளைக் கைது செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வாசலில் வாளேந்தி காவல் புரிந்த ஸஅது இப்னு முஆது (ரழி) முஸ்லிம்களின் இச்செயலைப் பார்த்து வெறுப்படைந்தார். ஸஅதின் முகத்தில் வெறுப்பைப் கண்ட நபி (ஸல்) “ஸஅதே! இம்மக்கள் செய்வதை நீர் வெறுக்கிறீர் போலும்” என்றார்கள். அதற்கு ஸஅது (ரழி) “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! இது அல்லாஹ் இணைவைப்பவர்களுக்குக் கொடுத்த முதல் சேதமாகும். எனவே, அவர்களிலுள்ள ஆண்களை உயிரோடு விடுவதைவிட அதிகமாக அவர்களைக் கொன்று குவிப்பதே எனக்கு மிக விருப்பமானது” என்றார்.

7) இப்போரில் உக்காஷா இப்னு மிஹ்ஸன் அல்அஸதி (ரழி) அவர்களின் வாள் ஒடிந்து விடவே, அவருக்கு நபி (ஸல்) மரக்கிளை ஒன்றைக் கொடுத்து “உக்காஷாவே! இதன் மூலம் நீர் போரிடுவீராக” என்றார்கள். உக்காஷா நபி (ஸல்) அவர்களிடமிருந்து தனது கையில் வாளை வாங்கியவுடன் அந்த மரக்கிளை உறுதிமிக்க நீண்ட ஒரு வாளாக மாறியது. அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றி கொடுக்கும் வரை அவ்வாளால் உக்காஷா போரிட்டார். அவ்வாளுக்கு ‘அல்அவ்ன்’ (உதவி) என்று பெயர் கூறப்பட்டது. இந்த வாளை மற்றும் பல போர்களில் உக்காஷா (ரழி) பயன்படுத்தினார்கள். இறுதியாக அபூபக்ர் (ரழி) அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் முஸைலமாவுடன் நடந்த போரில் உக்காஷா வீரமரணம் எய்தினார்கள்.

8) போர் முடிந்ததற்குப் பின்பு முஸ்அப் இப்னு உமைர் (ரழி) தனது சகோதரர் அபூஅஜீஸ் இப்னு உமைரைப் பார்த்தார்கள். இவர் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர்க்களத்தில் கலந்திருந்தார். மதீனாவாசிகளில் ஒருவர் அவரது இரு கைகளையும் கட்டிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த முஸ்அப் அவரிடம் “நீங்கள் அவரை நன்றாகப் பிடித்துக்கொள்ளுங்கள். இவரது தாய் மிகுந்த செல்வமுடையவர். உங்களிடமிருந்து இவரை அதிக கிரயம் கொடுத்து விடுவிப்பார்” என்றார்கள். இதைக் கேட்ட அவரது சகோதரர் “எனது சகோதரனே! இதுதான் நீ எனக்காக செய்யும் பரிந்துரையா?” என்றார். அதற்கு முஸ்அப் “இவர்தான் எனது சகோதரர் நீ அல்ல!” என்றார்கள்.

9) இணைவைப்பவர்களின் பிணங்கள் கிணற்றில் போடப்பட்டன. உத்பா இப்னு ரபீஆவின் பிணத்தைக் கிணற்றில் போடுவதற்காக இழுத்து வரும்போது, அதைப் பார்த்த அவனது மகனார் அபூஹுதைஃபா (ரழி) மிகுந்த கவலையடைந்தார். அதனால் அவரது முகமே மாறியது. அதை கவனித்த நபி (ஸல்), “உமது தகப்பனுக்காக நீ கவலைக் கொள்கிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கவர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அப்படி இல்லை. அல்லாஹ்வின் தூதரே! எனது தகப்பனின் விஷயத்திலும் அவர் கொலை செய்யப்பட்டதிலும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், எனது தந்தை நல்ல அறிவும், புத்தியும், சிறப்பும் உடையவர். அவருக்கு இஸ்லாமின் நேர்வழி கிடைத்துவிடும் என்று ஆதரவு வைத்திருந்தேன். ஆனால், அப்படி கிடைக்கவில்லை. எனது இந்த ஆதரவுக்குப் பின் அவர் நிராகரிப்பில் மரணித்ததை நினைத்தே நான் கவலை அடைந்தேன்” என்றார். நபி (ஸல்) அபூ ஹுதைஃபவை உயர்வாக பேசி, அவருக்காக பிரார்த்தனையும் செய்தார்கள்.