பக்கம் -65-

அல்அஹ்ஜாப் போர்

அஹ்ஜாப் என்று அறியப்படும் இப்போர் ஹிஜ்ரி 5, ஷவ்வால் மாதத்தில் நடைபெற்றது.

ஓராண்டு காலமாக நபியவர்கள் எடுத்த ராணுவ நடவடிக்கைகளால் மதீனாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிம்மதியான சூழ்நிலை முழுமையாக நிலவியது. இந்த நடவடிக்கைகளில் பெரிதும் இழிவையும் கேவலத்தையும் அடைந்தவர்கள் யூதர்களே! அதற்குக் காரணம், அவர்கள் செய்த மோசடி, துரோகம், சதித்திட்டம் மற்றும் சூழ்ச்சிகள்தான். இவ்வாறு கேவலப்பட்டும் அவர்கள் படிப்பினை பெறவில்லை. தங்களது விஷமத்தனங்களை விட்டும் முற்றிலும் விலகிக் கொள்ளவுமில்லை. கைபருக்குக் கடத்தப்பட்ட அந்த நழீர் இன யூதர்கள் முஸ்லிம்களுக்கும் இணைவைப்பவர்களுக்கும் நடைபெரும் போர்களில் முஸ்லிம்களின் நிலை என்னவாகும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வெற்றி முஸ்லிம்களுக்குக் கிட்டி முஸ்லிம்களின் ஆதிக்கம் நிலை பெற்றிடவே, அதைத் தாங்க இயலாமல் அந்த யூதர்கள் எரிச்சலைடைந்தனர் நெருப்பாய் எரிந்தனர்.

அப்போது, முஸ்லிம்களுக்கு எதிராகப் புதிய திட்டம் ஒன்று தீட்டினர். முஸ்லிம்களை முற்றிலும் அழிக்கும் ஒரு போரைத் தூண்டிவிட ஏற்பாடு செய்தனர். தங்களால் முஸ்லிம்களை நேரடியாக தாக்க ஆற்றல் இல்லை என்பதை உணர்ந்த அவர்கள் இதற்காக ஒரு சூழ்ச்சி செய்தனர்.

அதாவது, நழீர் கோத்திரத்தின் தலைவர்கள் மற்றும் சிறப்புமிக்கவர்களில் 20 யூதர்கள் மக்கா குறைஷிகளிடம் வந்தனர். அவர்களை நபியவர்களுக்கு எதிராக போர் புரிய தூண்டி, அதற்கு உதவியும் செய்வதாக வாக்களித்தனர். பத்ர் மைதானத்திற்கு அடுத்த ஆண்டு வருகிறோம் என்று உஹுத் போர்க்களத்தில் சொல்லிச் சென்று, அதை நிறைவேற்றாமல் வாக்கை மீறிவிட்ட அந்த குறைஷிகள் தற்போது தங்களது பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பி யூதர்களின் தூண்டுகோலுக்கு இரையானார்கள்.

பின்பு இக்குழுவினர் அங்கிருந்து கத்ஃபான் கிளையினரிடம் சென்றனர். அவர்களிடமும் குறைஷிகளிடம் கூறியதுபோல் கூறியதும், உடனே அவர்களும் போருக்கு ஆயத்தமாயினர். மேலும், இக்குழு பல அரபு கோத்திரத்தினரை நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக போர் புரிய தூண்டிவிட்டனர். பல சமுதாயத்தவர் இதை ஏற்று போருக்கு ஆயத்தமானார்கள். இறுதியாக இந்த யூத அரசியல் தலைவர்கள், நபியவர்களுக்கு எதிராக அனைத்து அரபுகளையும் ஒன்று திரட்டுவதில் வெற்றி கண்டனர்.

இந்த முயற்சிக்குப் பின், மேற்கிலிருந்து குறைஷிகளும், திஹாமாவைச் சேர்ந்த கினானா மற்றும் அவர்களின் நட்புக் கிளையினர் என மொத்தம் 4000 நபர்கள் அபூஸுஃப்யானின் தலைமையில் புறப்பட்டனர். ‘மர்ருள் ளஹ்ரான்’ என்ற இடத்திற்கு இப்படை வந்தடைந்த போது அங்குள்ள ஸுலைம் கோத்திரத்தினர் இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பின்பு மதீனாவிற்குக் கிழக்கில் கத்ஃபான், ஃபஜாரா கிளையினர் உயைனா இப்னு ஸ்னு தலைமையில் புறப்பட்டனர். மேலும், ஹாரிஸ் இப்னு அவ்ஃப் என்பவனின் தலைமையின் கீழ் முர்ரா கிளையினரும் மிஸ்அர் இப்னு ருஹைலாவின் தலைமையின் கீழ் அஷ்ஜஃ கிளையினரும், இதைத் தவிர அஸத் மற்றும் பல கோத்திரத்தினரும் ஒன்றுசேர்ந்து புறப்பட்டனர்.

இந்தப் படையினர் அனைவரும் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கிணங்க குறிப்பிட்ட தவணையில் அனைவரும் மதீனா சென்று ஒன்றுகூடினர். இவர்கள் 10,000 வீரர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை மதீனாவிலுள்ள பெண்கள், சிறுவர்கள், வாலிபர்கள், வயோதிகர்கள் என அனைவரின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது.

எதிரிகளின் இந்த ராணுவங்கள் அனைத்தும் திடீரென மதீனாவைத் தாக்கினால் நிச்சயம் முஸ்லிம்களில் ஒருவர்கூட மிஞ்சாமல் அழிந்துவிடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், மதீனா நகரத்தின் தலைமைத்துவமோ முற்றிலும் விழித்த நிலையிலேயே இருந்தது. மதீனாவின் செய்தி சேகரிப்பாளர்கள் பல இடங்களில் தங்கி மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட்டு, அங்குள்ள செய்திகளை மதீனாவுக்கு அனுப்பியபடி இருந்தார்கள். எனவே, எதிரிகளின் இவ்வளவு பெரிய படை புறப்பட்டதும் முஸ்லிம் ஒற்றர்கள் இப்படையைப் பற்றிய விவரங்களைத் தங்களின் தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்செய்திகள் கிடைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உடனடியாக ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவைக் கூட்டினார்கள். மதீனாவையும் முஸ்லிம்களையும் எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு மத்தியிலும் தளபதிகளுக்கு மத்தியிலும் ஏற்பட்ட பல கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் சங்கைக்குரிய நபித்தோழராகிய ஸல்மான் ஃபார்ஸி (ரழி) முன் வைத்த கருத்து முடிவாக ஏற்கப்பட்டது.

“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பாரசீக நாட்டில் இருந்த போது எங்களை எதிரிகள் தாக்க வருவதாக இருந்தால் எங்களைச் சுற்றி அகழ் தோண்டிக் கொள்வோம். அவ்வாறே இங்கும் செய்யலாம்” என ஸல்மான் ஃபார்ஸி (ரழி) கூறினார்கள். இதற்கு முன் இது அரபியர்களுக்குத் தெரியாத ஒரு புதிய திட்டமாக இருந்தது.

இத்திட்டத்தை கேட்டவுடன் இதை அங்கீகரித்து, அதை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் ஆர்வம் காட்டினார்கள். “ஒவ்வொரு 10 நபர்கள் கொண்ட குழு 40 முழம் அகழ் தோண்ட வேண்டும்” என்று நபியவர்கள் பணித்தார்கள். முஸ்லிம்கள் மிகுந்த உற்சாகத்துடன் அகழ் தோண்டுவதில் ஈடுபட்டார்கள். நபியவர்கள் முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டி வந்தார்கள்.

ஸஹ்லு இப்னு ஸஅது (ரழி) கூறுகிறார்: நாங்கள் நபியவர்களுடன் அகழியில் இருந்தோம். பலர் குழி தோண்டுவதில் ஈடுபட்டிருந்தார்கள். நாங்கள் மண்ணைத் தோளில் சுமந்து சென்று வெளியில் போட்டுக் கொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ்வே! மறுமை வாழ்வைத் தவிர வேறு வாழ்வு இல்லை!

முஹாஜிர்கள் அன்சாரிகளை மன்னித்து அருள்வாயாக!” (ஸஹீஹுல் புகாரி)

அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: ஒரு நாள் காலை நபி (ஸல்) அவர்கள் அகழ் தோன்றும் இடத்திற்கு வந்தார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் கடினமான குளிரில் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் இக்காரியத்தைச் செய்வதற்கு அவர்களுக்குச் சொந்தமான அடிமைகள் இருக்கவில்லை. தங்களின் தோழர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தையும் பசியையும் பார்த்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ்வே! நிச்சயமாக வாழ்க்கை என்பது மறு உலக வாழ்க்கையே!
அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் நீ மன்னித்தருள்வாயாக!”
இதற்கு நபித்தோழர்கள் பதில் கூறும் விதமாக கூறினார்கள்:
“நாங்கள் வாழும் காலமெல்லாம் அறப்போர்
புரிவோமென்று முஹம்மது (ஸல்) அவர்களிடம்
வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள்.” (ஸஹீஹுல் புகாரி)

பரா இப்னு ஆஜிப் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அகழியிலிருந்து மண்ணை சுமந்து சென்று வெளியில் போட்டுக் கொண்டிருந்தார்கள். புழுதி அவர்களது வயிற்றை மறைத்திருந்தது. அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவின் கவி ஒன்றை அதிகம் சொல்லிக் கொண்டே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வே! நீ இல்லையென்றால்
நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்,
தர்மம் செய்திருக்க மாட்டோம்,
தொழுதும் இருக்க மாட்டோம்.
எங்கள் மீது நீ அருள் பொழிவாயாக!
எதிரிகளை நாங்கள் சந்திக்கும்போது
பாதங்களை நிலைபெறச் செய்வாயாக!
இவர்கள் (குறைஷிகள்) எங்கள் மீது
அக்கிரமம் புரிந்துள்ளார்கள். இவர்கள்
எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால்
அதற்கு நாங்கள் இடம்தர மாட்டோம். (ஸஹீஹுல் புகாரி)

இக்கவிதைகளைக் கூறிவிட்டு கடைசி வரியை மட்டும் சப்தத்துடன் மீண்டும் ஒரு முறை கூறுவார்கள்.

கடுமையான பசி பட்டினிக்கு ஆளாகி இருந்தும் முஸ்லிம்கள் சுறுசுறுப்பாக அகழ் தோண்டுவதில் ஈடுபட்டிருந்தனர்.

இதைப் பற்றி அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: அகழ் தோண்டிக் கொண்டிருந்தவர்கள் தங்கள் இரு கை நிரம்ப தொலி கோதுமையை எடுத்து வருவார்கள். அது பழைய எண்ணெயைக் கொண்டு சமைக்கப்பட்டு, தோழர்களுக்கு முன் வைக்கப்படும். அதனை எளிதில் உண்ண முடியாமல் தொண்டையில் சிக்கிக் கொள்ளும். அதிலிருந்து மனதிற்கு ஒவ்வாத வாடையும் வீசும். (ஸஹீஹுல் புகாரி)

அபூ தல்ஹா (ரழி) கூறுகிறார்கள்: எங்களின் பசியைப் பற்றி நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டோம். எங்களது வயிற்றில் ஒரு கல்லைக் கட்டி இருந்ததைக் காட்டினோம். நபி (ஸல்) அவர்களோ தங்களது வயிற்றில் இரண்டு கற்கள் கட்டி இருந்ததைக் காட்டினார்கள். (ஸுனனுத் திர்மிதி, மிஷ்காத்)

மேலும், நபித்துவத்தின் பல அத்தாட்சிகளும் அகழ் தோண்டிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்டன. நபி (ஸல்) அவர்கள் கடுமையான பசியில் இருப்பதைப் பார்த்த ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ஒரு சிறிய ஆட்டை அறுத்தார்கள். அவன் மனைவி ஒரு படி தொலி கோதுமையை அரைத்து ரொட்டி சுட்டார்கள். பின்பு ஜாபிர் நபியவர்களைச் சுந்தித்து தங்களின் சில தோழர்களுடன் உணவருந்த வருமாறு கூறினார்கள். ஆனால், நபியவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட தோழர்களுடன் ஜாபின் வீட்டுக்கு வருகை தந்தார்கள். அனைவரும் உணவருந்திச் சென்றனர். ஆனால், சமைக்கப்பட்ட சட்டியில் இருந்த ஆணமும் குறையவில்லை, சுட்ட ரொட்டியும் குறையவில்லை. (ஸஹீஹுல் புகாரி)

நுஃமான் இப்னு பஷீன் சகோதரி சிறிதளவு பேரீத்தம் பழத்தைத் தனது தந்தைக்காகவும் தாய்மாமாவுக்காகவும் எடுத்து வந்தார். அவர் நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றபோது, நபியவர்கள் அவரைத் தன்னருகில் அழைத்து அவரிடம் இருந்த பேரீத்தம் பழத்தை வாங்கி ஒரு துணிக்குமேல் பரத்தினார்கள். பின்பு அகழ் தோண்டிக் கொண்டிருந்தவர்களை அழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தார்கள். பேரீத்தம் பழம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அனைவரும் சாப்பிட்டு சென்று விட்ட பின்பும் அது குறைவின்றி இருந்தது. (இப்னு ஹிஷாம்)

மேற்கூறப்பட்ட இரண்டு சம்பவங்களைவிட ஜாபிர் (ரழி) அறிவிக்கும் மகத்தான ஒரு சம்பவத்தை இமாம் புகாரி (ரஹ்) பதிவு செய்துள்ளார்கள். “நாங்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்த போது கடுமையான, இறுக்கமான ஒரு பாறை குறுக்கிட்டது. அப்போது மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நபியே! ஒரு பாறை அகழில் குறுக்கிட்டுள்ளது” என்றார்கள். நபியவர்கள் “நான் இறங்குகிறேன்” என்று கூறி பாறை இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். பசியின் காரணமாக அவர்களுடைய வயிற்றில் கல்லைக் கட்டியிருந்தார்கள். நாங்கள் மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருந்தோம். நபியவர்கள் கடப்பாறையால் வேகமாக அதை அடிக்கவே அது தூள் தூளாகியது. (ஸஹீஹுல் புகாரி)

பரா இப்னு ஆஜிப் (ரழி) கூறுகிறார்கள்: அகழ் தோண்டும்போது ஒரு பகுதியில் எந்த கடப்பாறையாலும் உடைக்க முடியாத ஒரு பாறை குறுக்கிட்டது. அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் முறையிட்டோம். நபியவர்கள் கடப்பாறையால் ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி ஓர் அடி அடித்துவிட்டு “அல்லாஹ் மிகப்பெரியவன்! ஷாம் தேசப் பொக்கிஷங்கள் எனக்கு அருளப்பட்டன. நான் இப்போது அங்குள்ள செந்நிறக் கோட்டைகளைப் பார்க்கிறேன்” என்றார்கள். பின்பு இரண்டாவது முறையாக அப்பாறையை அடித்தார்கள். “அல்லாஹ் மிகப் பெரியவன்! பாரசீகத்தின் பொக்கிஷங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அங்குள்ள மதாயின் நகரத்தின் வெள்ளை மாளிகையை இப்போது பார்க்கின்றேன்” என்றார்கள். பின்பு மூன்றாவது முறையாக ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி அடித்தார்கள். மீதமுண்டான கல்லும் உடைக்கப்பட்டது. அப்போது நபியவர்கள் “அல்லாஹ் மிகப் பெரியவன்! எனக்கு யமன் தேசத்து பொக்கிஷங்கள் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனது இந்த இடத்திலிருந்து ஸன்ஆ நகரத்தின் தலைவாயில்களைப் பார்க்கின்றேன்” என்றார்கள். (ஸுனன் நஸாம், முஸ்னது அஹ்மது)

இதுபோன்ற சம்பவம் ஸல்மான் ஃபார்ஸி (ரழி) அவர்கள் மூலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (இப்னு ஹிஷாம்)

மதீனாவைச் சுற்றி மலைகளும், பேரீத்த மரத்தோட்டங்களும், விவசாய அறுவடைகளை உலர வைக்கத் தேவையான களங்களும் சூழ்ந்திருந்தன. ஆனால், மதீனாவின் வடக்குப் பகுதி மட்டும் போக்குவரத்திற்குரிய வழியாக இருந்தது. எனவே, இதுபோன்ற பெரும் படை வருவதற்கு வடக்குப் பகுதி மட்டும் வழியாக அமைய முடியும் என்பதால் அகழை வடக்குப் பகுதியில் தோண்டுமாறு கூறியிருந்தார்கள். (இப்னு ஹிஷாம்)

முஸ்லிம்கள் தொடர்ந்து அகழ் தோண்டுவதில் மும்முரமாக ஈடுபட்டனர். பகலெல்லாம் அகழ் தோண்டி மாலையில் வீடு திரும்புவார்கள். முடிவு செய்யப்பட்ட திட்டத்திற்கேற்ப அகழ் தோண்டும் பணி எதிரிகளின் படை வருவதற்கு முன்பதாகவே முடிவடைந்தது. குறைஷிகள் 4000 நபர்களுடன் ‘ஜுர்ஃப்’ மற்றும் ‘ஜகாபா“விற்கு மத்தியிலுள்ள ‘ரூமா’ என்ற இடத்தில் ஓடைகள் ஒன்று சேரும் பகுதியில் தங்கினர். கத்ஃபான் மற்றும் நஜ்து பகுதியைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 6000 நபர்கள் உஹுதிற்கு அருகிலுள்ள ‘தனப் நக்மா’ என்ற இடத்தில் தங்கினர்.

நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவத்தைக் கண்டபோது “(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்” என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் வழிபாட்டையும் அன்றி வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்தி விடவில்லை. (அல்குர்ஆன் 33:22)

நயவஞ்சகர்களும் பலவீனமான உள்ளம் உள்ளவர்களும் இந்த படையைப் பார்த்து அஞ்சி நடுங்கினர். இவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:

“அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே (வெற்றி நமக்கே கிடைக்குமென்று) வாக்களித்தார்கள்” என்று எவர்களுடைய உள்ளங்களில் நோயிருந்ததோ அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதையும் நினைத்துப் பாருங்கள். (அல்குர்ஆன் 33:12)