பக்கம் -68-

அல்லாஹ் தனது தூதரின் வேண்டுதலையும் முஸ்லிம்களின் இறைஞ்சுதலையும் ஏற்றுக் கொண்டான். எதிரிகளின் அணிகளில் பிரிவினை ஏற்பட்டு அவர்கள் தங்களுக்குள் உதவி செய்வதைக் கைவிட்டனர். அத்துடன் அல்லாஹ் அவர்களை விரட்ட பலத்த காற்றை அனுப்பினான். அக்காற்று அவர்களின் கூடாரங்களைக் கழற்றி வீசியது. அவர்களின் பாத்திரங்களை தலைகீழாகப் புரட்டியது. கூடாரத்தின் கயிறுகளை அறுத்தது. எதிரிகள் நிலை தடுமாறினர். அல்லாஹ் வானவர்களின் படையை இறக்கினான். அவர்கள் எதிரிகளின் உள்ளங்களில் பயத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி, அவர்களை நிலை குலைய வைத்தனர்.

நபி (ஸல்) அவர்கள் இந்தக் கடுமையான குளிர் நிறைந்த இரவில் தோழர் ஹுதைஃபாவை எதிரிகளின் செய்திகளைத் தெரிந்து வர அனுப்பினார்கள். எதிரிகள் மக்கா திரும்ப ஆயத்தமாகி இருந்தனர். இச்செய்தியை நபியவர்களிடம் ஹுதைஃபா (ரழி) கூறினார். அல்லாஹ்வின் உதவியால் எதிரிகள் காலை விடிவதற்குள் தங்களின் இடங்களைக் காலி செய்து கொண்டு ஓடி விட்டனர். அவர்கள் இப்போரின் மூலம் தாங்கள் விரும்பிய எந்த நோக்கத்தையும் அடைய முடியவில்லை. அல்லாஹ் நபியவர்களைப் பாதுகாத்தான். அவனது வாக்கை உண்மைப் படுத்தினான். தனது இஸ்லாமியப் படைக்குக் கண்ணியத்தையும் வெற்றியையும் வழங்கினான். தனது அடியாருக்கு உதவி செய்தான். எதிரி ராணுவங்களை அவனே தோற்கடித்தான். நபியவர்கள் தங்களது படையுடன் மதீனா திரும்பினார்கள்.

இந்த அகழ் யுத்தம் ஹிஜ்ரி 5, ஷவ்வால் மாதம் நடைபெற்றது. இதுவே மிகச் சரியான கூற்றாகும். எதிரிகள் நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் முற்றுகையிட்ட காலம் ஏறக்குறைய ஒரு மாதமாகும். பல மூலநூல்களின் கருத்துகளை ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது இப்போர் ஷவ்வால் மாதம் தொடங்கி துல்கஅதா மாதத்தில் முடிவுற்றது எனத் தெரிய வருகிறது. அறிஞர் இப்னு ஸஅது, “நபியவர்கள் அகழ் போர் முடிந்து துல்கஅதா பிறை 23 புதன்கிழமை மதீனா திரும்பினார்கள்” என்று கூறுகிறார்:

இந்த அகழ்ப்போல் பெரும் நஷ்டங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதில் கடுமையான மோதலும், சேதங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் இது இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான போராக விளங்குகிறது. இப்போரின் இறுதியில் இணைவைப்பவர்கள் நிராசையாகி, தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பி விட்டனர். இணைவைப்பவர்கள் எவ்வளவு பெரிய பலமுல்ல ராணுவங்களை ஒன்று திரட்டி மதீனாவில் வளர்ந்து வரும் இந்த சிறிய இஸ்லாமிய ராணுவத்தை அழித்துவிட முயன்றாலும் அது ஒருக்காலும் முடியாது என்பது இப்போரிலிருருந்து நன்கு தெரியவந்தது. இம்முறை இப்போருக்கு அரபிகள் ஒன்றுதிரட்டி வந்த படைகளைப் போல் இனி ஒருக்காலும் அவர்களால் ஒன்று திரட்டிவர முடியாது. ஆகவேதான் எதிரிகளை அல்லாஹ் வெளியேற்றிய பின் “இனிமேல் நாமே அவர்கள் மீது போர் தொடுப்போம். அவர்கள் நம்மீது போர் தொடுக்க முடியாது. நாமே அவர்களிடம் செல்வோம்” என்று நபி (ஸல்) அவர்கள் “கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

பனூ குரைளா போர்

பனூ குரைளா என்று அறியப்படும் இப்போர் ஹிஜ்ரி 5, துல்கஅதா மாதத்தில் நடைபெற்றது.

அகழ்ப்போர் முடிந்து நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குத் திரும்பினார்கள். அன்று அவர்கள் தனது மனைவி உம்மு ஸலமாவின் வீட்டில் மதிய வேளையில் குளித்துக் கொண்டிருந்த போது வானவர் ஜிப்ரீல் (அலை) நபியவர்களை சந்தித்து “என்ன நீங்கள் உங்களது ஆயுதத்தைக் கீழே வைத்து விட்டீர்களா? நிச்சயமாக வானவர்கள் தங்களின் ஆயுதங்களை இன்னும் கீழே வைக்கவில்லை. நான் இப்போதுதான் எதிரிகளை விரட்டிவிட்டு வருகிறேன். நீங்கள் உங்கள் தோழர்களுடன் குரைளாவினர்களை நோக்கிப் புறப்படுங்கள். உங்களுக்கு முன் நான் சென்று அவர்களுடைய கோட்டைகளை அசைக்கிறேன். அவர்களின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துகிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து வானவர்களின் ஒரு கூட்டத்துடன் புறப்பட்டார்.

நபி (ஸல்) அவர்கள் ஒருவரை அனுப்பி மக்களுக்கு மத்தியில் அறிவிக்கக் கூறினார்கள்:

“யார் கட்டளையைக் கேட்டு கீழ்ப்படிந்து நடக்கிறாரோ அவர் அஸ்ர் தொழுகையை குரைளாவனரிடம் சென்றுதான் தொழ வேண்டும்” (அதாவது உடனடியாக இங்கிருந்து குரைளாவினரை நோக்கி புறப்பட வேண்டும்) என்று கூறினார்கள். மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமை பொறுப்பாளராக நியமித்துவிட்டு நபியவர்கள் புறப்பட்டார்கள். போர்க் கொடியை அலீயிடம் வழங்கி அவரை அவசரமாக முன்கூட்டி அனுப்பி வைத்தார்கள். அலீ (ரழி) படையுடன் குரைழாவினன் கோட்டையைச் சென்றடைந்தார்கள். அங்கிருந்த யூதர்கள், அலீ (ரழி) காதில் படும்படியாக நபி (ஸல்) அவர்களைக் கடுமையாக ஏசினர்.

நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகளின் சில குறிப்பிட்ட நபர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு குரைளாவினன் ஒரு கிணற்றுக்கு அருகில் வந்து இறங்கினார்கள். அக்கிணற்றுக்கு ‘அன்னா கிணறு’ என்று கூறப்படும்.

மீதமுள்ள முஸ்லிம்கள் உடனடியாக குரைளாவினரை நோக்கிப் புறப்பட்டார்கள். வழியில் அஸ்ர் தொழுகையின் நேரம் வந்தவுடன்: “அஸ்ர் தொழுகையை நேரம் தவறுவதற்குள் வழியிலேயே தொழுது விடுவதா அல்லது நேரம் தவறினாலும் குரைளா சென்று தொழுவதா” என அவர்களுக்கு மத்தியில் இரு கருத்துகள் நிலவின. மதீனாவிலேயே அஸ்ர் தொழுது விட்டு புறப்படலாமென யாரும் தாமதித்துவிடக் கூடாது என்ற கருத்தில்தான் நபி (ஸல்) அவர்கள் குரைளா சென்று அஸ்ர் தொழ வேண்டுமென கூறினார்கள். தொழுகை நேரத்தைத் தவறவிடுவது நபியவர்களின் நோக்கமல்ல என்று கூறிவிட்டு சிலர் வழியிலேயே அஸ்ர் தொழுகையை நிறைவேற்றினர். இவர்களைத் தவிர மற்றவர்கள் நபியவர்கள் கூறியபடி குரைளா சென்று அஸ்ர் தொழுகையை நிறைவேற்றினர். அப்போது மக்ப் நேரமாக இருந்தது. இன்னும் தாமதமாக வந்து சேர்ந்த சிலர் இஷா நேரத்தில் அஸ்ர் தொழுதனர்.

நபி (ஸல்) அவர்கள் இரு கூட்டத்தார்களின் செயல்களைப் பற்றி ஏதும் கடிந்துகொள்ள வில்லை. இவ்வாறு இஸ்லாமியப் படை ஒன்றன்பின் ஒன்றாக மதீனாவிலிருந்து புறப்பட்டு நபியவர்கள் தங்கியிருந்த இடத்தை வந்தடைந்தது. இஸ்லாமியப் படையில் மொத்தம் மூவாயிரம் வீரர்களும், முப்பது குதிரைகளும் இருந்தன. குரைளாவினன் கோட்டைகளைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். முஸ்லிம்களின் முற்றுகை கடுமையாக இருந்ததைக் கண்ட குரைளாவினன் தலைவன் கஅப் இப்னு அஸது தனது மக்களிடம் மூன்று கருத்துகளை முன் வைத்தான்.

1) அனைவரும் முஸ்லிமாகி முஹம்மதுடைய மார்க்கத்தில் சேர்வது. அப்படி சேர்ந்தால் நாம் நமது உயிர், பொருள், பிள்ளைகள், பெண்கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்ளலாம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹம்மது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதர் என்பதும், அவரைப் பற்றி தவ்றாத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பதும் உங்களுக்கு தௌ;ளத் தெளிவாக தெரியும்.

2) நமது பிள்ளைகளையும் பெண்களையும் நாமே நமது கரத்தால் கொன்றுவிடவேண்டும். பிறகு வாளை உருவி முஹம்மதுடன் போர் புரிவோம் நாம் அவர்களை வெற்றி கொள்வோம் அல்லது நாம் அனைவரும் மரணமாகும் வரை அவருடன் போர் புரிவோம்.

3) சனிக்கிழமை வருவதை எதிர்பார்ப்போம். அன்று நாம் போர் புரியமாட்டோம் என்று முஸ்லிம்கள் எண்ணிக் கொண்டிருப்பார்கள். அந்நேரத்தில் அவர்களைத் திடீரெனத் தாக்குவோம்.

இவ்வாறு மூன்று கருத்துகளை கஅப் முன்வைத்தும் அதில் எந்த ஒன்றையும் யூதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கஅப் கடும் கோபமடைந்து, “உங்களில் ஒருவர் கூட வாழ்நாளில் ஒரு நாளும் உறுதியுடன் வாழந்ததில்லை” என்று கடுகடுத்தார். குரைளாவினர் இவ்வாறு தங்களது தலைவர் கஅபுடைய எந்த ஆலோசனையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியாக நபியவர்கள் கூறும் தீர்ப்பையே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர்.

இருப்பினும் சரணடைவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு என்ன தீர்ப்பளிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள தங்களுக்கு நண்பர்களாக இருந்த சில முஸ்லிம்களுடன் தொடர்பு கொண்டு அறிய விரும்பினர். ஆகவே, நபியவர்களிடம் தூதனுப்பி அபூலுபாபாவை தங்களிடம் அனுப்பும்படி கேட்டுக் கொண்டனர். அபூலுபாபா யூதர்களின் நட்புரீதியான ஒப்பந்தக்காரராக இருந்தார். இவருடைய பொருட்களும், பிள்ளைகளும் யூதர்களின் பகுதியில் இருந்தன. அபூலுபாபா யூதர்களைச் சந்தித்தவுடன் அவரிடம் பெண்களும், சிறுவர்களும் எழுந்து வந்து அழுதனர். இதைப் பார்த்து அவரது உள்ளம் இளகிவிட்டது. அவர்கள் “அபூலுபாபாவே! நாங்கள் நபியவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் நபியவர்கள் எங்களுக்கு என்ன தீர்ப்பளிப்பார்கள்?” என்றனர். அப்போது அபூலுபாபா “தனது கழுத்தைச் சீவுவது போல் செய்து காட்டி, அந்தத் தீர்ப்பு கொலை!” என்று சூசகமாகக் கூறினார்.

நபி (ஸல்) அவர்களின் இந்த இரகசிய முடிவை வெளிப்படுத்தி தவறு செய்து விட்டோம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மோசடி செய்து விட்டோம் என்று அபூலுபாபா உணர்ந்தார் வருந்தினார். எனவே, நபியவர்களைச் சந்திக்கச் செல்லாமல் மஸ்ஜிதுந் நபவிக்குச் சென்று தன்னை ஒரு தூணுடன் கயிற்றால் பிணைத்துக் கொண்டார். நபியவர்கள்தான் தன்னை அவிழ்த்துவிட வேண்டும், இனி ஒருக்காலும் குரைளாவினன் பூமிக்கு செல்லவே மாட்டேன் என்று சத்தியம் செய்து கொண்டார். நபியவர்கள் அபூலுபாபாவின் வருகையை எதிர்பார்த்திருந்தார்கள். இவன் செய்தி நபியவர்களுக்கு கிடைத்தவுடன் “அபூலுபாபா என்னிடம் நேரடியாக வந்து விஷயத்தை கூறியிருந்தால் நான் அவருக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டிருப்பேன். ஆனால், எப்போது அவர் அவருடைய விருப்பப்படி நடந்து கொண்டாரோ அல்லாஹ் அவரது பிழை பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வரை நான் அவரை அவிழ்த்துவிட முடியாது” என்றார்கள்.

அபூலுபாபா தெளிவாகக் கூறிய பின்பும் வேறு வழியின்றி நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு யூதர்கள் வந்தனர். யூதர்கள் பெருமளவு உணவுகளையும் தேவையான பொருட்களையும் சேகரித்து வைத்திருந்தனர். கிணறுகளும் பலமிக்க கோட்டைகளும் அவர்களிடம் இருந்தன. ஆனால், முஸ்லிம்களோ யூதர்களின் கோட்டைக்கு வெளியே திறந்த வெளியில் கடுங்குளிரால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். உணவுப் பற்றாக்குறையால் கடுமையானப் பசிக்கு ஆளாகி, துன்பத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். போரில் தொடர்ந்து ஈடுபட்டிருந்ததால் அதிகமான களைப்புற்றிருந்தனர். ஆக, இந்த சூழ்நிலையில் முஸ்லிம்களின் மீது முற்றுகையை நீடித்தாலும் அதைத் தாங்கும் சக்தி யூதர்களிடம் இருந்தும் அவர்கள் அதற்குத் துணியவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் அல்லாஹ் பயத்தை ஏற்படுத்தினான். அவர்கள் நிலைகுலைந்தனர். அலீ இப்னு அபூதாலிப், ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) இருவரும் முஸ்லிம்களுக்கு முன் நின்று வீரமூட்டினர். அலீ (ரழி) முஸ்லிம்களைப் பார்த்து “அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட படைகளே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஹம்ஜாவுக்கு ஏற்பட்டதை நானும் அனுபவிப்பேன் அல்லது அவர்களது கோட்டையை வெற்றி கொள்வேன்” என்று சபதமிட்டார்கள்.

முஸ்லிம்களின் உணர்வுகளையும் வீரத்தையும் ஆவேசத்தையும் யூதர்கள் புரிந்துகொண்டனர். இனியும் காலதாமதம் செய்வது உசிதமல்ல என்பதை உணர்ந்தனர். ஆகையால் நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதற்கு தீவிரம் காட்டினர். தங்களது கோட்டைகளிலிருந்து வெளியேறி நபியவர்களுக்கு முன் சரணடைந்தனர். நபியவர்கள் ஆண்களைக் கைது செய்யுமாறு கட்டளையிட்டார்கள். முஹம்மது இப்னு மஸ்லமாவின் தலைமையின் கீழ் ஆண்கள் அனைவரும் விலங்கிடப்பட்டனர். பெண்களும் சிறுவர்களும் ஆண்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஓரமான இடத்தில் அமர்த்தி வைக்கப்பட்டனர். அப்போது அவ்ஸ் கூட்டத்தினர் நபியவர்களை சந்தித்து “அல்லாஹ்வின் தூதரே! கைனுகா இன யூதர்கள் விஷயத்தில் நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் எங்கள் சகோதரர்களாகிய கஸ்ரஜ் இனத்தவன் நண்பர்களாவர். இந்த குரைளா இன யூதர்கள் (அவ்ஸ்களாகிய) எங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள். நீங்கள் இவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்” என்றார்கள். அதற்கு நபியவர்கள் “உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இவர்கள் விஷயத்தில் தீர்ப்பளித்தால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள் “நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம்” என்றனர். நபியவர்கள் “இவர்கள் குறித்து தீர்ப்பளிக்கும் உரிமையை ஸஅது இப்னு முஆதிடம் ஒப்படைக்கிறேன்” என்றவுடன் அவ்ஸ் கூட்டத்தினர் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டனர்.

நபி (ஸல்) அவர்கள் ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களை அழைத்து வர ஆளனுப்பினார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி) அகழ்ப்போல் காலில் அம்பு தைத்துவிட்டதின் காரணமாக நபியவர்களுடன் வர முடியாமல் மதீனாவில் தங்கிவிட்டார்கள். அவர்கள் ஒரு கழுதையில் நபியவர்களிடம் அழைத்து வரப்பட்டார்கள். அவர் வந்து கொண்டிருக்கும் போதே அங்கிருந்தவர்கள் அவரைச் சுற்றி “ஸஅதே! உம்மிடம் ஒப்பந்தம் செய்திருந்த இந்த யூதர்கள் விஷயத்தில் அழகிய தீர்ப்பைக் கூறுவாயாக! அவர்களுக்கு உதவி புரிவாயாக! நீ அவர்களுக்கு ஏற்ற தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் நபியவர்கள் உன்னை தீர்ப்பளிக்கும்படி அழைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். ஆனால், ஸஅது (ரழி) அவர்களின் எந்த பேச்சுக்கும் பதிலளிக்கவில்லை. குழுமியிருந்த மக்கள் ஸஅதை மிக அதிகமாகத் தொந்தரவு செய்தவுடன் ஸஅது (ரழி) “இப்போதுதான் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிப்பை பொருட் படுத்தாமல் இருக்க இந்த ஸஅதுக்கு நேரம் வந்துள்ளது” என்றார். ஸஅத் (ரழி) அவர்களின் இந்த துணிவுமிக்க சொல்லால் குழுமியிருந்த மக்கள் யூதர்களின் விஷயத்தில் ஸஅது (ரழி) அவர்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டனர். அதாவது, யூதர்களை கொல்ல வேண்டும் என்ற உறுதியில் ஸஅது (ரழி) இருக்கிறார் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிய வந்தது. இதனால் ஸஅது (ரழி) தங்களது தீர்ப்பை வெளிப்படையாக கூறுவதற்கு முன்பாகவே யூதர்கள் கொல்லப்படப் போகிறார்கள் என்ற செய்தியை மக்கள் மதீனாவாசிகளுக்குத் தெரிவித்தனர்.