பக்கம் -67-

நபி (ஸல்) அவர்களின் மாமி ஸஃபிய்யா (ரழி) அவர்கள் செய்த இந்த வீரச்செயலினால் பெண்களும், சிறுவர்களும் பாதுகாக்கப்பட்டார்கள். அதாவது, கோட்டைகளை வேவு பார்ப்பதற்காக சென்ற யூதன் திரும்ப வரவில்லை என்பதை அறிந்த மற்ற யூதர்கள் மதீனாவில் உள்ள கோட்டைகள் அனைத்தும் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளன என்று எண்ணினர். ஆகையால் மற்றொரு முறை இதுபோன்று துணிவு கொள்ள அவர்கள் முன்வரவில்லை. இருப்பினும் யூதர்கள் போரில் ஈடுபட்டுள்ள இணைவைப்பவர்களுக்கு உணவுகள் அனுப்பி வைத்தனர். இது யூதர்கள் முஸ்லிம்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிராக இணைவைப்பவர்களுடன் இணைந்து கொண்டனர் என்பதற்கு ஆதாரமாக இருந்தது. இவ்வாறு அனுப்பப்பட்ட உணவுகளில் இருபது ஒட்டகங்களை முஸ்லிம்கள் பறிமுதல் செய்தனர்.

யூதர்கள் இணைவைப்பவர்களுடன் இணைந்துவிட்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கிடைத்தது. இதனால் அவர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்காக இச்செய்தியை உறுதி செய்து கொள்ள நபியவர்கள் தீவிரம் காட்டினார்கள். ஸஅது இப்னு முஆத், ஸஅது இப்னு உபாதா, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, கவ்வாத் இப்னு ஜுபைர் (ரழி) ஆகியோரை உண்மை நிலையை அறிந்து வர நபியவர்கள் அனுப்பினார்கள். நபி (ஸல்) தங்கள் தோழர்களிடம், “நீங்கள் அவர்களிடம் செல்லுங்கள். அவர்களைப் பற்றி நமக்குக் கிடைத்த செய்தி உண்மைதானா? என்று பாருங்கள். நாம் கேள்விப்பட்டது உண்மையாக இருப்பின் என்னிடம் நான் அறிந்து கொள்ளும் விதமாக சைகை மட்டும் செய்யுங்கள். மக்களிடம் அந்தச் செய்தியை பரப்பி விடாதீர்கள். அவர்கள் வாக்குறுதி மாறாமல் இருந்தால் அதை மக்கள் அனைவருக்கும் தெரியும் படி சொல்லுங்கள்” என்றார்கள்.

இதற்குப் பின் நபித்தோழர்கள் யூதர்களிடம் வந்தனர். யூதர்கள் இவர்களுக்கு மிகக் கெட்ட பதிலைக் கூறியதுடன் நபி (ஸல்) அவர்களை வசைபாடினர். “அல்லாஹ்வின் தூதர் என்றால் யார் அவர்? எங்களுக்கும் முஹம்மதுக்கும் எவ்வித உடன்படிக்கையும் ஒப்பந்தமும் இல்லை” என்றனர். இந்தப் பதிலைக் கேட்டு நபியவர்களிடம் திரும்பிய தோழர்கள் ‘அழல், காரா’ என்றனர். (அதாவது ‘ரஜீஃ’ என்னும் இடத்தில் நபித்தோழர்களை அழல், காரா கிளையினர் வஞ்சகமாகக் கொன்றது போல் யூதர்களும் நம்முடன் வஞ்சகம் செய்கின்றனர் என்று பொருள்.)

நபி (ஸல்) அவர்களைத் தவிர இந்த உண்மை பிறமக்களுக்குத் தெரியாமல் இருக்க நபித்தோழர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் இல்லை. யூதர்களின் மோசடி உண்மைதான் என்பதை மக்களும் அறிந்து கொண்டனர். இதனால் தங்களுக்கு முன் பெரும் ஆபத்து வந்து விட்டதை மக்கள் உணர்ந்து கொண்டனர்.

முஸ்லிம்களுக்கு இது மிக இக்கட்டான நிலையாக இருந்தது. குரைளா யூதர்கள் பின்புறத்திலிருந்து தாக்குதல் நடத்தினால் அதைத் தடுக்கவும் முடியாது. எதிர் திசையிலோ மிகப் பெரிய படை. அதை விட்டு எங்கும் செல்லவும் முடியாது. துரோகம் இழைத்த யூதர்களுக்கு அருகில்தான் முஸ்லிம்களின் பெண்களும் சிறுவர்களும் எவ்வித உரிய பாதுகாப்புமின்றி இருந்தனர். இவர்களது நிலை அல்லாஹ் குர்ஆனில் கூறியது போன்றே இருந்தது.

உங்களுக்கு மேற்புறமிருந்தும் கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்துகொண்டு) அவர்கள் வந்த சமயத்தில் உங்களுடைய திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து உங்களுடைய உள்ளங்கள் உங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து (நீங்கள் திக்குமுக்காடி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் (தவறாகப்) பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்குள்ளாகி மிக்க பலமாக அசைக்கப்பட்டனர். (அல்குர்ஆன் 33:10,11)

முஸ்லிம்களுடன் இருந்த சில நயவஞ்சகர்களின் வஞ்சகத்தனம் அப்போது வெளிப்பட்டது. “நாங்கள் கிஸ்ரா, கைஸருடைய கஜானாக்களை அடைவோம் என்று முஹம்மது எங்களுக்கு வாக்குக் கொடுக்கிறார். ஆனால், இன்று எங்களால் சுயதேவையை நிறைவேற்றுவதற்குக் கூட செல்ல முடியவில்லை. அந்த அளவு பயத்தில் இருக்கிறோம்” என்று சிலர் கூறினர். “எங்களின் வீடு பாதுகாப்பின்றி இருக்கின்றது. எனவே, நாங்கள் போரிலிருந்து திரும்பி விடுகிறோம். எங்களது வீடுகள் மதீனாவிற்கு வெளியில் இருக்கின்றன” என்று சிலர் கூறினர். ஸலமா கிளையினர் கூட போரிலிருந்து திரும்பிட எண்ணினர். இவர்களைப் பற்றியே பின்வரும் குர்ஆன் வசனம் இறக்கப்பட்டது.

நயவஞ்சகர்களும் உள்ளங்களில் நோய் உள்ளவர்களும் “அல்லாஹ்வும் அவனது தூதரும் எங்களுக்கு ஏமாற்றத்தைத் தவிர வேறொன்றையும் வாக்களிக்கவில்லை.” என்று கூறுகின்றனர். அவர்களில் ஒரு கூட்டத்தினர் (மதீனாவாசிகளை நோக்கி) “யஸ்ப் வாசிகளே! (எதிரிகள் முன்) உங்களால் நிற்க முடியாது. ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்” என்று கூறியதையும், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவர்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இல்லாமல் இருந்தும் “நிச்சயமாக எங்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இருக்கின்றன” என்று கூறி (போர்க்களத்திலிருந்து சென்றுவிட நமது) நபியிடம் அனுமதி கோரியதையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் (போரிலிருந்து) தப்பி ஓடிவிடுவதைத் தவிர (வேறொன்றையும்) விரும்பவில்லை. (அல்குர்ஆன் 33:13)

குரைளா யூதர்கள் தங்களுக்கு மோசடி செய்து விட்டனர் என்ற செய்தி கிடைத்ததும் நபி (ஸல்) அவர்கள் தங்களது முகத்தை போர்வையால் மூடிக்கொண்டு நீண்ட நேரம் சாய்ந்து படுத்து சிந்தனையில் ஆழ்ந்தார்கள். இங்கு முஸ்லிம்கள் கடும் சோதனைக்கும், துன்பத்திற்கும் ஆளாகினர். பிறகு நபியவர்கள் எழுந்து “அல்லாஹ் மிகப் பெரியவன். முஸ்லிம்களே! அல்லாஹ் வுடைய வெற்றியும் உதவியும் உங்களுக்குண்டென நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்கள். இதற்குப் பின் நிலைமையைச் சமாளிப்பதற்கு நபியவர்கள் திட்டங்களைத் தீட்டினார்கள். அதில் முதல் கட்டமாக மதீனாவிலுள்ள பெண்களும் சிறுவர்களும் தாக்கப்படாமல் இருப்பதற்காக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட உடனடியாக சில வீரர்களை அனுப்பினார்கள்.

இது மட்டுமல்லாமல், எதிர்த்தரப்பு படையில் இருக்கும் குறைஷி அல்லாத கூட்டத்தனரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டால் அவர்களைப் போர்முனையிலிருந்து திருப்பி விடலாம். பிறகு முஸ்லிம்களின் பரம எதிரியான குறைஷிகளைப் போர்க்களத்தில் ஒரு கை பார்த்துவிடலாம் என்று எண்ணி, இது குறித்து அன்சாரிகளின் தலைவர்களான ஸஅது இப்னு முஆத், ஸஅது இப்னு உபாதா (ரழி) ஆகிய இருவரிடமும் நபி (ஸல்) அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். “எதிரிப் படையிலுள்ள கத்ஃபான் குலத் தலைவர்களான உயைனா இப்னு ஹிஸ்ன், ஹாரிஸ் இப்னு அவ்ஃப் ஆகியோருக்கு தூதனுப்பி மதீனாவின் விளைச்சல்களில் மூன்றில் ஒரு பகுதியை உங்களுக்குத் தருகிறோம், நீங்கள் எங்களுடன் சண்டையிடுவதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென கேட்போமா? என்று நபி (ஸல்) ஆலோசனை கேட்டார்கள். அதற்கு அவ்விருவரும் “நபியே! நீங்கள் கூறும் இந்த ஆலோசனை அல்லாஹ்வின் கட்டளையாக இருந்தால் நாங்கள் அதற்குக் கட்டுப்படுகிறோம். அதே சமயம் இது எங்களின் நலனுக்காக நீங்கள் செய்வதாக இருந்தால் நிச்சயம் நாங்கள் அதனை விரும்பவில்லை. காரணம், மதீனாவில் விளையும் பழங்களை நாங்கள் விற்றாலோ அல்லது விருந்தளித்தாலோ மட்டுமே கத்ஃபான் குலத்தினர் உண்ண முடியும். இதைத் தவிர வேறு வழியில் மதீனாவின் பழங்களை அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. நாங்கள் இஸ்லாமை ஏற்பதற்கு முன்பே இந்நிலையென்றால், இன்று அல்லாஹ் எங்களை இஸ்லாமின் மூலம் கண்ணியப்படுத்தி எங்களுக்கு நேர்வழியையும் தந்துவிட்டான். இப்போது பணிந்து நாங்கள் எங்களது செல்வங்களை அவர்களுக்குக் கொடுப்பதா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! வாளைத் தவிர வேறு எதையும் நாங்கள் அவர்களுக்குக் கொடுக்க மாட்டோம். (அதாவது பணிய மாட்டோம்) இறுதிவரை போரிடுவோம்” என்று அவ்விருவரும் கூறினார்கள். இவ்விருவரின் கருத்தையும் ஏற்றுக் கொண்ட நபியவர்கள் “அரபிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து உங்களைத் தாக்குகிறார்களே என்ற நிலை கருதி உங்களின் நன்மைக்காக இந்த ஆலோசனையை முன் வைத்தேன்” என்று விளக்கினார்கள்.

அன்சாரிகளின் இந்த உறுதி, நிலை குலையாமை, துணிவு, மற்ற எல்லாத் தோழர்களின் பொறுமை, தியாகம் - இவை அனைத்தும் அல்லாஹ்விற்கு பிடித்துவிட்டது. அல்லாஹுத் தஆலா தன் புறத்திலிருந்து உதவியை இறக்கினான். எதிரிகளைத் தோற்கடித்து அவர்களது ராணுவங்களை புறமுதுகு காட்டி ஓடச் செய்தான். இதற்காக அல்லாஹ் செய்த ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சியும் ஒன்றாகும். கத்ஃபான் கோத்திரத்தில் நுஅய்ம் இப்னு மஸ்வூத் இப்னு ஆமிர் என்பவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து “அல்லாஹ்வின் தூதரே! நான் முஸ்லிமாகி விட்டேன். ஆனால், நான் முஸ்லிமானது எனது கூட்டத்தினருக்குத் தெரியாது. எனவே, நீங்கள் முஸ்லிம்களுக்குச் சாதகமாக ஏதாவது செய்யச் சொன்னால், நான் அதன்படி செய்கிறேன்” என்றார். அதற்கு நபியவர்கள் “நீ தனியாக என்ன செய்து விட முடியும்? உன்னால் முடிந்தால் எங்களை விட்டும் எதிரிகளைத் திசை திருப்பும் தந்திரம் எதையாவது செய். ஏனெனில், போர் என்பதே ஒரு சூழ்ச்சிதான்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றுக்கினங்க அவர் குரைளாவனரிடம் சென்றார். இவர் குரைளாவினன் நண்பராக இருந்ததால், அவர்களிடம் சென்று “நான் உங்களை எந்தளவு விரும்புகிறேன் என்பதையும் எனக்கும் உங்களுக்குமிடையிலுள்ள வலுவான தொடர்பையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்தானே?” என்றார். அதற்கவர்கள் “ஆம்! என்றனர். இந்த ஊர் உங்களுடைய ஊராகும். இதில்தான் உங்களுடைய சொத்துகளும், பிள்ளைகளும், பெண்களும் இருக்கின்றனர். நீங்கள் இந்த ஊரைவிட்டு வேறு எங்கும் தப்பித்துச் செல்ல முடியாது. ஆனால், குறைஷிகள் உங்களைப் போன்றல்ல. அவர்களும் கத்ஃபான்களும் முஹம்மதிடம் போர் செய்வதற்காக இங்கு வந்திருக்கின்றனர். நீங்களும் முஹம்மதுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்கிறீர்கள். ஆனால், அவர்களது ஊர் இதுவல்ல. அவர்களது செல்வங்களும் பிள்ளைகளும் இங்கு இல்லை. அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படி வாய்ப்பு கிட்டவில்லை என்றாலோ அல்லது போரில் தோல்வியுற்றாலோ அவர்கள் தங்களது ஊர்களுக்குத் திரும்பச் சென்று தப்பித்துக் கொள்வார்கள். நீங்கள் முஹம்மதிடம் வசமாக மாட்டிக் கொள்வீர்கள். அவரோ உங்களிடம் பழிதீர்த்துக் கொள்வார். நீங்கள் என்ன செய்ய முடியும்” என்று கேட்டார். அதற்கு யூதர்கள் “நுஅய்மே! நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீ கூறுகிறாய்” எனக் கேட்டனர். அதற்கவர் “நீங்கள் அவர்களிடம் அவர்களின் சில நபர்களை உங்களிடம் அடைமானமாக வைத்துக்கொள்ள கேளுங்கள். அவர்கள் சிலரை ஒப்படைக்காத வரை நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக போர் புரியாதீர்கள்” என்று கூறினார். அதற்கு யூதர்கள் “நீ எங்களுக்குச் சரியான ஆலோசனை கூறிவிட்டாய்” என்று கூறினர்.

இதற்குப் பின் நேரடியாக நுஅய்ம் குறைஷிகளைச் சந்தித்தார். அவர்களிடம் “உங்களை நான் நேசிப்பதையும் உங்களுக்கு நான் நல்லதையே செய்வேன் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள் தானே” என்று கேட்டார். அதற்கு அவர்கள் “ஆம்!” அப்படித்தான் என்றனர். அப்போது குறைஷிகளிடம் நுஅய்ம், “யூதர்கள் முஹம்மதுக்கும் அவரது தோழர்களுக்கும் செய்து கொடுத்த உடன்படிக்கையை முறித்தது பற்றி மிகவும் கைதேசமடைந்துள்ளனர். அதனால் உங்களிடமிருந்து உங்களின் சில நபர்களை அடைமானமாக உங்களிடமிருந்து வாங்கி, அவர்களை முஹம்மதிடம் கொடுத்துத் தாங்கள் செய்த குற்றத்திற்கு பரிகாரம் தேடிக்கொள்ள எண்ணுகின்றனர். ஆகையால், அவர்கள் உங்களிடம் உங்களின் ஆட்களை அடைமானமாகக் கேட்டால் நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள்” என்று கூறினார். அவ்வாறே கத்ஃபானியரைச் சந்தித்து குறைஷிகளிடம் கூறியது போன்று கூறினார்.

ஹிஜ் 5, ஷவ்வால் மாதம் சனிக்கிழமை இரவு குறைஷிகள் யூதர்களிடம் ஒரு செய்தி அனுப்பினர். அதாவது “நாங்கள் இப்போது அந்நிய ஊருக்கு வந்திருக்கிறோம். எங்களின் குதிரைகளும், ஒட்டகங்களும் அழிந்துவிட்டன. நீங்களும் எங்களுடன் புறப்படுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்” என்பதுதான் அந்தச் செய்தியின் சுருக்கம்.

குறைஷிகளின் இக்கோரிக்கையை யூதர்கள் நிராகரித்ததுடன் “இன்று சனிக்கிழமை. இந்நாளில் நாங்கள் செய்த குற்றத்திற்காக எங்களுக்கு ஏற்பட்ட தண்டனை என்னவென்று உங்களுக்குத் தெரியும். எனவே, நீங்கள் உங்களின் ஆட்களை அடைமானமாக எங்களிடம் தரும் வரை நாங்கள் உங்களுக்கு ஆதரவாக சண்டையிட மாட்டோம்” என்று கூறினர். இச்செய்தியைத் தூதுக்குழு குறைஷிகளிடம் கூறியவுடன் “நுஅய்ம் உங்களுக்கு உண்மைதான் கூறியிருக்கிறார்” என்று குறைஷிகளும் கத்ஃபான்களும் கூறினர்.

இதற்குப் பின் இவர்கள் மீண்டும் யூதர்களிடம் தங்களின் குழுவை அனுப்பி “நாங்கள் உங்களிடம் எங்கள் ஆட்களில் எவரையும் அனுப்ப மாட்டோம். நீங்கள் எங்களிடம் வாருங்கள். நாம் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்” என்றனர். இதைக் கேட்ட யூதர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நுஅய்ம் நம்மிடம் உண்மையைத்தான் கூறினார்” என்று தங்களுக்குள் கூறி விட்டு வந்த குறைஷித் தூதர்களைத் திருப்பி அனுப்பி விட்டனர். இதன்மூலம் இரு தரப்பினருக்குமிடையில் பிரிவினை ஏற்பட்டது. யூதர்கள் குறைஷிகளுக்கு உதவுவதைக் கைவிட்டனர். இதனால் குறைஷிகளின் உறுதி குலைந்தது. முடிவு என்னவாகுமோ என அவர்கள் பயந்தனர்.

முஸ்லிம்கள் அல்லாஹ்விடம்,

“அல்லாஹ்வே! எங்களுடைய அவயங்களை மறைத்திடு எங்களின் பயங்களை போக்கி அபயம் அளி” என்று வேண்டினர்.

அடுத்து நபி (ஸல்) அவர்களும்,

வேதத்தை இறக்கியவனே! விரைவாக கணக்கு தீர்ப்பவனே! இப்படையினரைத் தோற்கடிப்பாயாக! இவர்களை ஆட்டம் காணச் செய்வாயாக! என அல்லாஹ்விடம் வேண்டினார்கள். (ஸஹீஹுல் புகாரி)