பக்கம் -95-

கஅபாவின் மேல் பிலால் அதான் கூறுகிறார்

தொழுகை நேரம் வந்ததும் பிலாலுக்கு (பாங்கு) அதான் ஒலிக்கும்படி நபி (ஸல்) கட்டளை இட்டார்கள். கஅபாவின் முற்றத்தில் அபூஸுஃப்யான் இப்னு ஹர்ஃப், அத்தாபு இப்னு உஸைது, ஹாரிஸ் இப்னு ஹிஷாம் ஆகிய பெருந்தலைவர்கள் வீற்றிருந்தனர். அதனைக் கேட்ட அத்தாபு “திண்ணமாக அல்லாஹ் எனது தந்தை உஸைதைக் கண்ணியப்படுத்தி காப்பாற்றி விட்டான். இதுபோன்ற சப்தத்தை அவர் கேட்கவில்லை. அப்படிக் கேட்டிருந்தால் அவர் கடுங்கோபம் கொண்டிருப்பார்” எனக் கூறினார். அதற்கு ஹாரிஸ், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த அதானில் சொல்லப்படும் விஷயம் உண்மை என்று நான் அறிந்திருந்தால் அதனைப் பின்பற்றி இருப்பேன்.” இதனையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அபூஸுஃப்யான் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இது விஷயமாக நான் ஏதும் பேசமாட்டேன். அப்படி ஏதேனும் நான் பேசிவிட்டால் இந்தப் பொடிக் கற்கள் கூட என்னைப் பற்றிய செய்தியைத் தெரிவித்து விடும்.” இவர்களின் இவ்வுரையாடலுக்குப் பின் அவர்களிடம் சென்ற நபி (ஸல்) “நீங்கள் பேசியது எனக்கு நன்கு தெரியும்” என்று கூறிவிட்டு, அவர்கள் பேசியவற்றை அவர்களிடமே விவரமாகக் கூறினார்கள்.

இதனைக் கேட்ட ஹாஸும் அத்தாபும் (ரழி) “அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்களுடன் இருந்த வேறு யாருக்கும் இவ்விஷயம் தெரியவே தெரியாது. அவ்வாறிருக்க யாராவது உங்களுக்கு இதனைப் பற்றி சொல்லியிருக்கலாம் என்று எங்ஙனம் நாங்கள் கூற இயலும்? எனவே நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என சாட்சிக் கூறுகிறோம்” என்றனர்.

‘ஸலாத்துல் ஃபத்ஹ்’ அல்லது ‘ஸலாத்துஷ் ஷுக்ர்“

அன்றைய தினம் நபி (ஸல்) உம்மு ஹானி பின்த் அபூதாலிப் (ரழி) அவர்களின் வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு எட்டு ரகஅத்துகள் தொழுதார்கள். அல்லாஹ் அவர்களுக்களித்த வெற்றியை முன்னிட்டு நன்றி செலுத்தும் பொருட்டு தொழுத தொழுகை என்பதால் இந்தத் தொழுகையை ‘ஸலாத்துல் ஃபத்ஹ்’ (வெற்றிக்கான தொழுகை) அல்லது ‘ஸலாத்துஷ் ஷுக்ர்’ (நன்றி தொழுகை) என்று கூறலாம். ஆனால் சிலர், நபி (ஸல்) இத்தொழுகையைத் தொழுத நேரம் ‘ழுஹா’ (முற்பகல்) நேரமாக இருந்ததால் இதனை ‘ஸலாத்துழ் ழுஹா’ என எண்ணிக் கொள்கின்றனர்.

உம்மு ஹானி (ரழி) தனது கணவன் இரண்டு சகோதரர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு வழங்கியிருந்தார். இவ்விருவரையும் கொன்றுவிட அலீ (ரழி) விரும்பினார்கள். ஆனால், இவ்விருவரையும் வீட்டிற்குள் வைத்துக் கொண்டே உம்மு ஹானி (ரழி) வீட்டைத் தாழிட்டு விட்டார்கள். நபி (ஸல்) வீடு வந்தவுடன் அவ்விருவருக்காக பாதுகாப்புக் கோரினார்கள். அதற்கு நபி (ஸல்) “உம்மு ஹானியே! நீங்கள் பாதுகாப்புத் தந்தவர்களுக்கு நாமும் பாதுகாப்பை வழங்குகிறோம்” என்று கூறினார்கள்.

பெருங்குற்றவாளிகளைக் கொல்ல கட்டளையிடுதல்

நபி (ஸல்) இன்றைய தினம் ஒன்பது கொடுங்காஃபிர்களை அவர்கள் கஅபாவின் திரைக்குள் நுழைந்தாலும் கொல்லப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். அவர்களின் பெயர்கள்: 1) அப்துல் உஜ்ஜா இப்னு கதல், 2) அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபூ சரஹ், 3) இக்மா இப்னு அபூஜஹ்ல், 4) ஹாரிஸ் இப்னு நுஃபைசல் இப்னு துஹப், 5) மகீஸ் இப்னு சுபாபஹ், 6) ஹபார் இப்னு அல் அஸ்வத், 7, 8) இப்னு கத்தலின் இரண்டு அடிமைப் பாடகிகள், 9) அப்துல் முத்தலிப் வம்சத்திற்குச் சொந்தமான ‘சாரா’ எனும் அடிமை. இப்பெண்ணிடம்தான் ஹாதிப் அனுப்பிய ராணுவ இரகசிய கடிதம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களைப் பற்றியுள்ள குறிப்புகள் அடுத்து வருகின்றன.

அப்துல்லாஹ் இப்னு ஸஅதை உஸ்மான் (ரழி) அழைத்து வந்து சிபாரிசு செய்ய நபி (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். எனவே, அவர் உயிர் பாதுகாக்கப்பட்டது. இவர் இதற்கு முன் ஒருமுறை இஸ்லாமை ஏற்று ஹிஜ்ரத் செய்து மதீனா வந்திருந்தார். சில காலங்கள் அங்கு தங்கிய பின் இஸ்லாமை விட்டு வெளியேறி மக்கா வந்துவிட்டார். இவர் நபியின் அவையில் தான் இப்போது முஸ்லிமாகி விடுவதாக அறிவித்தார். ஆனால், தங்களது தோழர்களில் யாராவது ஒருவர் அவரை கொன்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நபி (ஸல்) இருந்ததால் அவரது இஸ்லாமை ஏற்க தயக்கம் காட்டினார்கள். பின்பு சிறிது நேரம் கழித்து அவரது இஸ்லாமை நபி (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். அப்துல் உஜ்ஜா இப்னு கத்தல் கஅபாவின் திரையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டான். நபித்தோழர் ஒருவர் நபியிடம் வந்து “என்ன செய்வது?” என்று கேட்டார். “அவனைக் கொன்று விடவேண்டியதுதான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியவுடன் அவர் அவனைக் கொன்று விட்டார்.

மகீஸ் இப்னு சபாபா- இவன் ஏற்கனவே முஸ்லிமாக இருந்தான். ஓர் அன்சாரித் தோழரை கொன்றுவிட்டு மதம் மாறி முஷ்ரிக்குகளுடன் சேர்ந்து கொண்டான். இவனை நுபைலா இப்னு அப்துல்லாஹ் (ரழி) என்பவர் கொன்றொழித்தார்.

ஹாரிஸ் இப்னு நுஃபைல்- இவன் மக்காவில் நபியவர்களை அதிகம் துன்புறுத்திக் கொண்டிருந்தான். இவனை அலீ (ரழி) கொன்றார்கள்.

ஹப்பார் இப்னு அஸ்வத்- இவர்தான் நபி (ஸல்) அவர்களின் மகள் ஜைனப் (ரழி) ஹிஜ்ரத் செய்து மதீனா சென்றபோது வழிமறித்து தனது ஈட்டியால் குத்தினார் இதனால் அவர்கள் அமர்ந்திருந்த (கஜாவா) ஒட்டகத் தொட்டியிலிருந்து கீழே விழுந்தார்கள் அவர்களது வயிற்றில் காயமேற்பட்டு கரு கலைந்துவிட்டது. இவர் மக்கா வெற்றியின் போது அங்கிருந்து தப்பி ஓடினார் பின்பு சில காலம் கழித்து இஸ்லாமை ஏற்றார்.

மற்ற இப்னு கத்லுடைய இரு அடிமைப் பாடகிகளில் ஒருத்தி கொலையுண்டாள். மற்றவள் முஸ்லிம் ஒருவரால் அடைக்கலம் தரப்பட்டு பின்னர் இஸ்லாமை ஏற்றார். அவ்வாறே ‘சாரா’ என்ற அடிமைப் பெண்ணும் அடைக்கலமாகி இஸ்லாமைத் தழுவினார்.

அறிஞர் இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: ஹாரிஸ் இப்னு துலாத்தில் அல்குஸாயீ என்பவனையும் கொல்லும்படி நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். எனவே, அவனை அலீ (ரழி) கொன்றொழித்தார்கள் என அபூ மஃஷக் (ரழி) கூறுகிறார்.

பிரபல கவிஞர் கஅப் இப்னு ஜுஹைரையும் கொல்லும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள். ஆனால், இவர் நபி (ஸல்) அவர்கள் சமூகம் வந்து இஸ்லாமை ஏற்று தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டார். இவரைப் பற்றிய விரிவான செய்தி பின்னால் வரவிருக்கின்றது.

இவ்வாறே ஹம்ஜா (ரழி) அவர்களைக் கொலை செய்த வஹ்ஷியையும் கொன்றுவிட கட்டளையிடப்பட்டது. பின்னர் இஸ்லாமைத் தழுவியதால் மன்னிக்கப்பட்டது. அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பாவும் கொலைப் பட்டியலில் இருந்தார். அவரும் இஸ்லாமை ஏற்றதால் மன்னிக்கப்பட்டார். இப்னு கதலின் அடிமைப் பெண் அர்னப் என்பவளும் கொலையுண்டாள் என இமாம் ஹாகிம் (ரஹ்) குறிப்பிடுகின்றார். கொலையுண்டவர்களில் உம்மு ஸஅத் என்பவரும் உண்டு என இப்னு இஸ்ஹாக் (ரஹ்) குறிப்பிடுகின்றார். இந்த கணக்கின்படி எட்டு ஆண்களும் ஆறு பெண்களும் இப்பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். ஆனால், இங்கு கூறப்பட்ட அர்னப், உம்மு ஸஅத் இருவரும் இப்னு கத்தலின் இரண்டு பாடகிகளாக இருக்கலாம். அவ்விருவருடைய பெயர்கள் அல்லது புனைப் பெயர்களில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் தனித் தனியாகக் கூறப்பட்டிருக்கலாம். (இப்னு ஹஜர் (ரஹ்) கூற்று முடிவுற்றது.) (ஃபத்ஹுல் பாரி)

ஸஃப்வான் இப்னு உமய்யா, ஃபழாலா இப்னு உமைய்யா இஸ்லாமைத் தழுவுதல்

ஸஃப்வான் குறைஷிகளின் பெருந்தலைவர்களில் ஒருவராக இருந்தும் அவரைக் கொல்ல வேண்டுமென்று நபி (ஸல்) கட்டளையிடவில்லை. இருப்பினும் அவர் பயந்து மக்காவிலிருந்து ஓட்டம் பிடித்தார். அவருடைய முன்னாள் நண்பர் உமைர் இப்னு வஹப் அல் ஜும நபியிடம் அவருக்காக (பாதுகாப்பு) அபயம் தேடினார். நபி (ஸல்) அதனை ஏற்று மக்காவுக்குள் வரும் போது தாம் அணிந்திருந்த தலைப்பாகையைக் கொடுத்தனுப்பினார்கள். உமைர் (ரழி) அதனை பெற்றுக் கொண்டு ஸஃப்வானைத் தேடிப் புறப்பட்டார். ‘ஜுத்தா’ எனும் கடற்கரையில் யமன் நோக்கிய பயணத்திற்கு ஸஃப்வான் ஆயத்தமான போது உமைர் (ரழி) அவரைச் சந்தித்து நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார். ஸஃப்வான் நபியிடம் தனக்கு இரண்டு மாத கால அவகாசம் வேண்டுமெனக் கோரினார். அதற்கு நபி (ஸல்) நான்கு மாத கால அவகாசம் தருவதாக மொழிந்தார்கள். சில நாட்களுக்கு பின் ஸஃப்வான் இஸ்லாமைத் தழுவினார். இவருடைய மனைவியோ இவருக்கு முன்பே இஸ்லாமை ஏற்றிருந்தார். நபி (ஸல்) இருவரையும் பழைய திருமண உறவைக் கொண்டே சேர்த்து வைத்தார்கள்.

ஃபழாலா- இவர் மிக்க துணிச்சலானவர். நபி (ஸல்) அவர்களைக் கொல்வதற்காகக் கிளம்பினார். நபியவர்களின் அருகில் வந்தவுடன் இவர் என்ன எண்ணத்தில் வந்துள்ளார் என்பதை வெளிச்சமாக்கிக் காட்டினார்கள். இதைச் செவிமடுத்த ஃபழாலா இவர் உண்மையான திருத்தூதர்தான் என விளங்கி இஸ்லாமை ஏற்றார்.

நபியவர்களின் சொற்பொழிவு

மக்கா வெற்றி கொண்ட இரண்டாம் நாள் மக்களுக்கு நபி (ஸல்) சொற்பொழிவாற்றினார்கள். அல்லாஹ்வை அவனுக்குரிய சிறப்புகள், தன்மைகள் ஆகியவற்றால் புகழ்ந்து மேன்மைப்படுத்திய பின் உரை நிகழ்த்தத் தொடங்கினார்கள். “மக்களே! நிச்சயமாக அல்லாஹ் வானங்கள், பூமியை படைத்த அன்றே மக்காவுக்கு அளப்பெரும் கண்ணியம் வழங்கியிருப்பதால் மறுமை நாள் வரை கண்ணியம் பொருந்தியதாகவே கருதப்பட வேண்டும். அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பிக்கை கொண்டுள்ள யாரும் அங்குக் கொலை புரிவதோ, மரம் செடி கொடிகளை அகற்றுவதோ கூடாது. நபி இங்கு போர் புரிந்தார்கள் என்று முன்னுதாரணம் காட்டினால் நீங்கள் அவருக்குச் சொல்லுங்கள், நிச்சயமாக அல்லாஹ் அவனது தூதருக்குத்தான் இந்த சிறப்புத் தகுதியை வழங்கியிருக்கின்றான் உங்களுக்கு அந்த உரிமையோ தகுதியோ அவன் வழங்க வில்லை மேலும் எனக்குப் பகல்பொழுதின் ஒரு குறிப்பிட்ட குறுகிய நேரத்திற்குத்தான் அனுமதிக்கப்பட்டது. அதன்பின் அதற்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியம் நேற்று அதற்குரிய கண்ணியத்தைப் போன்றே இன்று முதல் மீண்டும் திரும்பிவிட்டது. இங்குள்ளவர்கள் இங்கு வராதவர்களுக்குத் தெரிவித்து விடட்டும்”.

நபி (ஸல்) அவர்களின் உரையைப் பற்றி வரும் மற்றொரு அறிவிப்பில் பின்வரும் அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

“அங்குள்ள முட்களை ஒடிக்கவோ, அங்குள்ள வேட்டைப் பிராணிகளை அங்கிருந்து விரட்டவோ, அங்கு கீழே கிடக்கும் பொருட்களை எடுக்கவோ கூடாது. ஆயினும், அதை உரியவரிடம் சேர்த்து வைக்கவும் மக்களிடம் தெரிவிக்கவும் எடுக்க அனுமதி உண்டு. இங்குள்ள புற்களைக்களையக் கூடாது.” அப்பொழுது அப்பாஸ் (ரழி) அவர்கள் ‘இத்கிர்’ என்ற செடியை களைந்து கொள்ள அனுமதி தாருங்கள். இது எங்கள் கொல்லர்களுக்கும் மற்ற வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது” எனக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) இத்கிர் செடியை எடுத்து பயன்படுத்த அனுமதி அளித்தார்கள்.

குஜாஆ கிளையினர் மக்கா வெற்றியின் போது லைஸ் கிளையைச் சேர்ந்த ஒருவரைக் கொன்று விட்டனர். இதற்கு முன் அறியாமைக் காலத்தில் லைஸ் கிளையினர் குஜாஆ கிளையினரில் ஒருவரைக் கொன்றிருக்கின்றனர். அதற்குப் பழிவாங்கும் முகமாக இச்சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். இது தொடர்பாக நபி (ஸல்) இவ்வுரையில் குறிப்பிட்டுக் கூறினார்கள்:

“குஜாஆ சமூகத்தினரே! கொலை புதலைக் கைவிடுங்கள். கொலை புரிவது பயன்தக்கதாக இருந்தால் இதற்கு முன்னர் புரிந்த கொலைகளே உங்களுக்குப் போதும். இதற்குப் பிறகு அந்த மாபாதகச் செயலை செய்யாதீர்கள். நீங்கள் கொன்று விட்டவர்களுக்குரிய தியத்தை (கொலைக்கான நஷ்டஈட்டை) இன்று நான் நிறைவேற்றுகிறேன். இதற்குப் பின் யாராவது கொலை செய்யப்பட்டால் கொலையுண்டவன் உறவினர் இரண்டு வாய்ப்புகளில் ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒன்று, கொலையாளியைப் பழிக்குப் பழி கொல்வது அல்லது அவரிடமிருந்து தியத் வசூல் செய்து கொள்வது.” யமன் வாசியான ‘அபூ ஷாஹ்’ என்பவர் “அல்லாஹ்வின் தூதரே! இதனை எனக்கு எழுதிக் கொடுங்கள்” என்றார். “இதனை இவருக்கு எழுதி வழங்குங்கள்” என நபி (ஸல்) தோழர்களுக்குக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஸுனன் அபூதாவூது, இப்னு ஹிஷாம்)

நபியவர்களைப் பற்றி அன்சாரிகள் அஞ்சுதல்

அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு மக்காவில் வெற்றி அளித்தான். இப்புனித நகரம் அவர்களது சொந்த ஊர் அவர்கள் பிறந்த ஊர் அவர்களுக்கு பிடித்தமான ஊர் என்பது தெரிந்ததே! நபியவர்கள் ஸஃபா மலையில் தங்களது கைகளை உயர்த்தி துஆச் செய்து கொண்டிருந்தார்கள். அந்நேரத்தில் அல்லாஹ் தனது இந்த ஊரை நபியவர்களுக்கு கைவசப் படுத்தித் தந்தான். எனவே, அவர்கள் இங்கேயே தங்கி விடுவார்களோ? என அன்சாரிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

தங்களது பிரார்த்தனையை முடித்த பின்பு “நீங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?” என நபி (ஸல்) அன்சாரிகளிடம் வினவினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஒன்றுமில்லை” என அவர்கள் கூறினர். நபி (ஸல்) மீண்டும் மீண்டும் கேட்கவே இறுதியில் தங்களிடையே என்ன பேசினோம் என்பதை தெரிவித்தனர். அதற்கு நபி (ஸல்) “அல்லாஹ் காப்பாற்றுவானாக! நான் வாழ்ந்தால் உங்களுடன் வாழ்வேன். மரணித்தால் உங்களுடனே மரணிப்பேன்” என்று கூறினார்கள்.

பைஆ வாங்குதல்

அல்லாஹ் இஸ்லாமை ஓங்கச் செய்து, நபியும் முஸ்லிம்களும் மக்காவை வெற்றி கொள்ளும்படி செய்தான். இதைப் பார்த்த மக்காவாசிகள் இஸ்லாமே உண்மை மார்க்கம். வெற்றி பெற இஸ்லாமைத் தவிர வேறு வழியில்லை என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொண்டனர். எனவே, இஸ்லாமை ஏற்று நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்வதற்கு ஒன்று கூடினர். நபி (ஸல்) ஸஃபா மலைக் குன்றுக்கு மேல் அமர்ந்து கொண்டு இதற்காக தயாரானார்கள். கீழே உமர் (ரழி) அமர்ந்து கொண்டார்கள். நபியவர்கள் மக்களிடமிருந்து இஸ்லாமிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். தங்களால் இயன்ற அளவு செவிமடுப்போம் கட்டுப்படுவோம் என மக்கள் பைஆ செய்தனர்.

‘அல்மதாக்’ என்ற நூலில் வருவதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆண்களிடம் பைஆ பெற்ற பின்பு பெண்களிடம் வாங்கினார்கள். அப்போது நபி (ஸல்) ஸஃபாவின் மீதும், அதற்குக் கீழே உமரும் அமர்ந்திருந்தனர். நபி (ஸல்) ஒவ்வொரு விஷயமாகக் கூற அதனை உமர் (ரழி) அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். இந்நேரத்தில் அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா நபியவர்களிடம் வந்தார். உஹுத் போரில் வீரமரணம் எய்திய ஹம்ஜாவுடைய உடலைச் சின்னாபின்னமாக்கிய தனது செயலுக்கு நபி (ஸல்) என்ன செய்வார்களோ என்று அஞ்சியதால் தன்னை முழுதும் மறைத்துக் கொண்டு வந்தார். நபி (ஸல்) “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டீர்கள் என்று எனக்கு வாக்குத் தர வேண்டும்” என்று கூற, உமர் (ரழி) பெண்களுக்கு அதை எடுத்துரைத்தார்கள். அடுத்து, “நீங்கள் திருடக் கூடாது” என்றார்கள். அதற்கு, “அபூஸுஃப்யான் ஒரு கஞ்சன். நான் அவருடைய பொருளில் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாமா?” என ஹிந்த் வினவினார். “நீ எதனை எடுத்துக் கொண்டாயோ அது உனக்கு ஆகுமானதே” என்று அபூஸுஃப்யான் கூறினார்.

நபி (ஸல்) இவர்களின் உரையாடலைக் கேட்டு புன்னகை புரிந்து “கண்டிப்பாக நீ ஹிந்த் தானே” என்றார்கள். அதற்கவர் “ஆம்! நான் ஹிந்த்தான். சென்று போன என்னுடைய பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வும் தங்களை பொறுத்தருள்வான்!!” என்று கூறினார்.

“நீங்கள் விபசாரம் செய்யக் கூடாது” என்று நபி (ஸல்) கூறினார்கள். “ஒரு சுதந்திரமானவள் விபச்சாரம் புரிவாளா?” என ஹிந்த் ஆச்சரியப்பட்டார்.

“உங்களின் பிள்ளைகளை நீங்கள் கொல்லக் கூடாது” என நபி (ஸல்) கூறினார்கள். அதற்கு ஹிந்து, “நாங்கள் எங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்த்தோம் அவர்கள் பெரியவர்களானதும் நீங்கள் அவர்களைக் கொன்று குவித்தீர்களே! என்ன நடந்தது என்று உங்களுக்கும் அவர்களுக்கும்தான் தெரியும்” என்று கூறினார். உமர் (ரழி) சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து சிரித்து மல்லாந்து விழுந்தார். அதைக் கண்டு நபி (ஸல்) புன்னகைத்தார்கள். ஹிந்த் இவ்வாறு கூறக் காரணம்: பத்ரு படைக்களத்தில் அவருடைய மகன் ஹன்ளலா இப்னு அபூ ஸுஃப்யான் கொல்லப்பட்டிருந்தார். அடுத்து, “நீங்கள் அவதூறு கூறலாகாது” என நபி (ஸல்) கூறவே, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவதூறு கூறுதல் மிகக் கெட்ட பண்பாகும். நீங்கள் நல்லவற்றையும், நற்குணங்களையுமே எங்களுக்கு கூறுகிறீர்கள்!” என ஹிந்த் பதிலுரைத்தார்.

“நீங்கள் நல்ல விஷயங்களில் எனக்கு மாறு செய்யக் கூடாது” என நபி (ஸல்) கூறவே, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! தங்களுக்கு மாறுபுரியும் எண்ணத்தில் நாங்கள் இங்கு அமர்ந்திருக்கவில்லை” என்று ஹிந்த் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின் வீடு திரும்பிய ஹிந்த் வீட்டினுள் வைத்திருந்த சிலைகளைப் பார்த்து “நாங்கள் இதுவரை உங்களால் ஏமாற்றப்பட்டிருந்தோம்” எனக் கூறியவாறு அவற்றை உடைத்தெறிந்தார். (மதாக்குத் தன்ஜீல்)

ஹிந்த்தை பற்றி ஸஹீஹுல் புகாரியிலும் ஒரு நிகழ்ச்சி பதியப்பட்டுள்ளது. “ஹிந்த் நபியவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! இவ்வுலகில் யாருமே பெற்றிராத கேவலத்தை உங்களைச் சார்ந்தவர்கள் பெற வேண்டும் என நான் ஒரு காலத்தில் பிரியப்பட்டேன். இன்று, இவ்வுலகில் யாருமே கண்டிராத கண்ணியத்தை தாங்கள் அடைய வேண்டும் என மிக ஆசைப்படுகிறேன்” என்று கூறினார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்னும் என்ன சொல்லப் போகிறாய்?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். அவர் “அல்லாஹ்வின் தூதரே! அபூ ஸுஃப்யான் கஞ்சராக உள்ளார். அவருடைய செல்வத்திலிருந்து என் பிள்ளைகளுக்கு உணவளித்தல் குற்றமாகுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) “அதனை நன்மையாகவே கருதுகிறேன்” என்று கூறினார்கள்.