அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ் என் மீது புரிந்த அருட்கொடைகளில் ஒன்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில், என்னுடைய (முறை) நாளில், என் மார்புக்கும் கழுத்துக்கும் இடையில் (என் மடியில் சாய்ந்திருந்த நிலையில்) உயிர் நீத்ததும், அவர்களின் மரணத்தின்போது அல்லாஹ் என் உமிழ்நீரையும் அவர்களின் உமிழ்நீரையும் ஒன்று சேர்த்ததுமாகும்.
(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் தம் கையில் பல் துலக்கும் குச்சியுடன் (மிஸ்வாக்) என்னிடம் வந்தார். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (என் மீது) சாய்த்துப் பிடித்துக் கொண்டிருந்தேன். நபியவர்கள் அந்தப் பல்குச்சியைப் பார்ப்பதை நான் கவனித்தேன். அவர்களுக்குப் பல் துலக்குவது மிகவும் பிடிக்கும் என்பதை நான் அறிந்திருந்ததால், "அதை உங்களுக்காக நான் வாங்கட்டுமா?" என்று கேட்டேன். அவர்கள் "ஆம்" என்று தம் தலையசைத்தார்கள்.
நான் அதை வாங்கி (அவர்களிடம் கொடுத்தேன். ஆனால், அது) அவர்களுக்குக் கடினமாக இருந்தது. "அதை உங்களுக்காக நான் மென்மையாக்கட்டுமா?" என்று கேட்டேன். அவர்கள் "ஆம்" என்று தலையசைத்தார்கள். உடனே நான் அதை (என் வாயிலிட்டு மென்று) மென்மையாக்கிக் கொடுத்தேன்.
நபியவர்களுக்கு முன்னால் தண்ணீர் உள்ள ஒரு தோல் பை - அல்லது மரக்குவளை - இருந்தது. (அறிவிப்பாளர் உமர் என்பவருக்கு இதில் சந்தேகம்). நபியவர்கள் அந்தத் தண்ணீரில் தம் இரு கைகளையும் நுழைத்து, அவற்றால் தம் முகத்தைத் துடைத்தவாறு, "லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை). நிச்சயமாக மரணத்திற்குப் பல வேதனைகள் உள்ளன" என்று கூறலானார்கள்.
பின்னர், தம் கையை உயர்த்தி, "உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்துவிடுவாயாக!)" என்று கூறலானார்கள். இறுதியில் அவர்களின் உயிர் கைப்பற்றப்பட்டது; அவர்களின் கை சாய்ந்தது.