மைமூனா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களுக்கு குளிப்பதற்காக தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தங்களின் வலது கையால் இடது கையின் மீது தண்ணீர் ஊற்றி அவ்விரண்டையும் கழுவினார்கள். பின்னர் தங்களின் மறைவான உறுப்பைக் கழுவினார்கள். பிறகு தங்களின் கையைத் தரையில் அடித்து, அதை மண்ணால் தேய்த்து, பின் அதைக் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்பளித்து, மூக்கினுள் தண்ணீர் செலுத்தி, தங்களின் முகத்தைக் கழுவினார்கள். மேலும் தங்களின் தலையில் தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர் அவர்கள் அந்த இடத்திலிருந்து நகர்ந்து (சுத்தமான இடத்திற்குச் சென்று) தங்களின் பாதங்களைக் கழுவினார்கள். அவர்களுக்கு ஒரு துண்டு கொண்டுவரப்பட்டது; ஆனால் அவர்கள் அதைக் கொண்டு (தங்களை) துடைக்கவில்லை.
மைமூனா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜனாபத்திற்காக (குளிப்பதற்குத் தேவையான) தண்ணீர் வைத்தார்கள். அவர்கள் தங்கள் வலது கையால் இடது கையின் மீது இரண்டு அல்லது மூன்று முறை (தண்ணீரை) ஊற்றினார்கள். பிறகு தங்கள் மறைவுறுப்பைக் கழுவினார்கள். பிறகு தங்கள் கையை பூமியிலோ அல்லது சுவரிலோ இரண்டு அல்லது மூன்று முறை அடித்தார்கள் (கழுவினார்கள்). பிறகு வாய் கொப்பளித்து, நாசியில் நீர் செலுத்தினார்கள்; தங்கள் முகத்தையும், இரு முழங்கைகளையும் கழுவினார்கள். பிறகு தங்கள் தலையின் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பிறகு தங்கள் உடலைக் கழுவினார்கள். பிறகு (குளித்த இடத்திலிருந்து) சற்று நகர்ந்து தங்கள் இரு கால்களையும் கழுவினார்கள். (குளித்து முடித்ததும்) நான் அவர்களிடம் ஒரு துணியைக் கொண்டு வந்தேன். ஆனால், அவர்கள் அதை விரும்பவில்லை. தங்கள் கைகளால் (உடலில் இருந்த நீரை) உதறலானார்கள்."