“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மிம்பர் (மேடை) பற்றியும், அது எதனால் செய்யப்பட்டது என்பது குறித்தும் மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, அவர்கள் ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரழி) அவர்களிடம் வந்து (அது குறித்துக்) கேட்டார்கள். அவர் கூறினார்கள்: ‘அது பற்றி என்னை விட அதிகமாக அறிந்தவர் (இப்போது) யாரும் இல்லை. அது ஃகாபா எனும் இடத்திலுள்ள அஃதா மரத்தால் (ஒரு வகை மரம்) செய்யப்பட்டது. அதை இன்னாருடைய (ஒரு பெண்) உரிமை விடப்பட்ட அடிமையான இன்னார்தான் செய்தார்; (அவர்) ஒரு தச்சர். அவர் அதைக் கொண்டு வந்தார். அது (அதற்குரிய இடத்தில்) வைக்கப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் அதன் மீது நின்றார்கள். அவர்கள் கிப்லாவை முன்னோக்கினார்கள், மக்கள் அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள். அவர்கள் குர்ஆனை ஓதினார்கள், பிறகு ருகூஃ செய்து, தம் தலையை உயர்த்தினார்கள். பிறகு, அவர்கள் பின்னோக்கி நகர்ந்து தரையில் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர், அவர்கள் மீண்டும் மிம்பருக்குச் சென்று குர்ஆனை ஓதினார்கள், பிறகு ருகூஃ செய்து, தம் தலையை உயர்த்தி, பிறகு பின்னோக்கி நகர்ந்து தரையில் ஸஜ்தாச் செய்தார்கள்.”