நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எனக்கு முன்னிருந்த எவருக்கும் வழங்கப்படாத ஐந்து விடயங்கள் எனக்கு வழங்கப்பட்டுள்ளன:
1. ஒரு மாதப் பயணத் தொலைவிலிருந்தே (எதிரிகளின் உள்ளங்களில் ஏற்படும்) நடுக்கத்தின் மூலம் நான் உதவி செய்யப்பட்டுள்ளேன்.
2. பூமி எனக்குத் தொழுமிடமாகவும், தூய்மையாக்கக்கூடியதாகவும் ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே, என் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவருக்குத் தொழுகையின் நேரம் வந்துவிட்டால் அவர் (இருக்கும் இடத்திலேயே) தொழுதுகொள்ளட்டும்.
3. போர்ச் செல்வங்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன; எனக்கு முன்னிருந்த எவருக்கும் அவை அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
4. எனக்குப் பரிந்துரை செய்யும் (ஷஃபாஅத்) உரிமை வழங்கப்பட்டுள்ளது.
5. (முற்காலத்தில்) இறைத்தூதர் அவருடைய சமுதாயத்திற்கு மட்டுமே அனுப்பப்படுவார்; நானோ மனிதகுலம் முழுமைக்கும் (பொதுவானவராக) அனுப்பப்பட்டுள்ளேன்.”
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு முன்னர் வேறு எவருக்கும் வழங்கப்படாத ஐந்து (சிறப்புகள்) எனக்கு வழங்கப்பட்டுள்ளன: (அவையாவன) ஒவ்வொரு தூதரும் தத்தமது சமூகத்தாருக்கு மாத்திரம் குறிப்பாக அனுப்பப்பட்டார்கள்; நானோ சிவப்பு நிறத்தவர், கறுப்பு நிறத்தவர் (என மனித இனத்தவர்) அனைவருக்கும் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன். போர்ச்செல்வங்கள் எனக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன; எனக்கு முன்னர் வேறு எவருக்கும் அவை ஆகுமாக்கப்படவில்லை. பூமி எனக்குத் தூய்மையானதாகவும், தூய்மைப்படுத்தும் பொருளாகவும் (தஹூரன்), தொழுமிடமாகவும் (மஸ்ஜிதன்) ஆக்கப்பட்டுள்ளது; ஆகவே, எவருக்குத் தொழுகை நேரம் வந்துவிட்டதோ, அவர் எங்கிருந்தாலும் (அங்கேயே) தொழுதுகொள்ளட்டும். ஒரு மாத காலப் பயண தூரத்திலிருந்தே (எதிரிகளின் உள்ளங்களில் ஏற்படும்) அச்சத்தின் மூலம் நான் உதவி செய்யப்பட்டுள்ளேன். மேலும், எனக்குப் பரிந்துரை (ஷஃபாஅத்) வழங்கப்பட்டுள்ளது.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எனக்கு முன்பு எவருக்கும் வழங்கப்படாத ஐந்து (சிறப்புத்) தன்மைகள் எனக்கு வழங்கப்பட்டுள்ளன: ஒரு மாதப் பயணத் தொலைவிலிருந்தே (எதிரிகளின் உள்ளத்தில்) அச்சம் ஏற்படுத்தப்பட்டு நான் உதவி செய்யப்பட்டுள்ளேன்; பூமி எனக்குத் தொழுமிடமாகவும் (மஸ்ஜித்), தூய்மையாக்கும் கருவியாகவும் (தஹூர்) ஆக்கப்பட்டுள்ளது; ஆகவே, என் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவருக்குத் தொழுகை நேரம் எங்கு வந்தடைகிறதோ அவர் (அங்கேயே) தொழுதுகொள்ளட்டும்; எனக்குப் பரிந்துரை (ஷஃபாஅத்) செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது; எனக்கு முன்பு எந்த நபிக்கும் இது வழங்கப்படவில்லை; மேலும் நான் மக்கள் யாவருக்கும் (பொதுவானத் தூதராக) அனுப்பப்பட்டுள்ளேன். (இதற்கு முன்) இறைத்தூதர் தன் சமுதாயத்திற்கு மட்டுமே அனுப்பப்படுபவராக இருந்தார்.”