ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. இரவில் அதை அவர்கள் தடுப்பாக வைத்துக்கொண்டு அதில் தொழுவார்கள். மக்களும் அவர்களது தொழுகையைப் பின்பற்றித் தொழலானார்கள். பகல் நேரத்தில் அதை விரித்துவிடுவார்கள்.
ஒரு நாள் இரவு மக்கள் (திரண்டு) கூடிவிட்டனர். அப்போது நபியவர்கள் கூறினார்கள்:
"மக்களே! உங்களால் இயன்ற (நற்)செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். ஏனெனில், நீங்கள் சோர்வடையும் வரை அல்லாஹ் சோர்வடைவதில்லை. அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல், குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்யப்படுவதே ஆகும்."
மேலும் முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் ஒரு செயலைச் செய்தால், அதைத் தொடர்ந்து உறுதியாகச் செய்வார்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்:
அது சிறியதாக இருந்தாலும், தொடர்ந்து செய்யப்படும் செயல்.
ஆயிஷா (ரழி) அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: உங்களால் இயன்ற செயல்களையே நீங்கள் மேற்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் சோர்வடையும் வரை அல்லாஹ் சோர்வடைவதில்லை. அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல், குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்யப்படும் செயலே ஆகும். அவர்கள் (ஸல்) ஒரு செயலைச் செய்தால், அதைத் தொடர்ந்து செய்வார்கள்.