உபய் இப்னு கஅப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஃபஜ்ரு தொழுகையைத் தொழுவித்தார்கள். (பிறகு) "இன்னார் வந்திருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (மக்கள்) "இல்லை" என்றனர். "இன்னார் வந்திருக்கிறாரா?" என்று (மீண்டும்) கேட்டார்கள். அதற்கு அவர்கள் "இல்லை" என்றனர்.
பிறகு அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக இந்த இரண்டு தொழுகைகள்தாம் நயவஞ்சகர்களுக்கு மிகவும் பாரமானவையாகும். அவற்றில் உள்ள (நன்மைகளை) நீங்கள் அறிந்திருந்தால், உங்கள் முழங்கால்களில் தவழ்ந்தாவது அவற்றுக்கு வந்திருப்பீர்கள். நிச்சயமாக முதல் வரிசை வானவர்களின் வரிசையைப் போன்றதாகும். அதன் சிறப்பை நீங்கள் அறிந்திருந்தால், அதற்காக நீங்கள் முந்திக்கொள்வீர்கள். ஒரு மனிதர் தனியாகத் தொழுவதை விட, (மற்றொரு) மனிதருடன் சேர்ந்து தொழுவது மிகவும் சிறந்ததாகும். அவர் இருவருடன் சேர்ந்து தொழுவது, ஒருவருடன் சேர்ந்து தொழுவதை விடச் சிறந்ததாகும். (எண்ணிக்கை) எவ்வளவுக்கு அதிகமாகிறதோ, அது அல்லாஹ்விடத்தில் மிகவும் விருப்பத்திற்குரியதாகும்."