அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: '(மறுமை நாளில்) ஒட்டகங்கள், (இவ்வுலகில்) இருந்ததை விட மிகச் சிறந்த ஆரோக்கியமான நிலையில் தம் உரிமையாளரிடம் வரும். அவற்றுக்குரிய கடமையை அவர் நிறைவேற்றவில்லையென்றால், அவை தம் குளம்புகளால் அவரை மிதிக்கும். ஆடுகள், (இவ்வுலகில்) இருந்ததை விட மிகச் சிறந்த ஆரோக்கியமான நிலையில் தம் உரிமையாளரிடம் வரும். அவற்றுக்குரிய கடமையை அவர் நிறைவேற்றவில்லையென்றால், அவை தம் பிளவுபட்ட குளம்புகளால் அவரை மிதித்து, தம் கொம்புகளால் அவரை முட்டும். அவைகளுக்கு நீர் புகட்டும் இடத்திலேயே பால் கறக்கப்படுவதும் அவற்றின் உரிமைகளில் ஒன்றாகும். உங்களில் எவரும் மறுமை நாளில், கனைத்துக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தன் கழுத்தில் சுமந்தவராக, 'யா முஹம்மது' என்று கூறியவாறு வருவதை நான் விரும்பவில்லை. அப்போது நான் கூறுவேன்: "உனக்காக நான் எதுவும் செய்ய இயலாது; நான் (இறைச்செய்தியை) எடுத்துரைத்து விட்டேன்." உங்களில் எவரும் மறுமை நாளில், கத்திக் கொண்டிருக்கும் ஆட்டைத் தன் கழுத்தில் சுமந்தவராக, "யா முஹம்மது," என்று கூறியவாறு வருவதை நான் விரும்பவில்லை. அப்போது நான் கூறுவேன்: "உனக்காக நான் எதுவும் செய்ய இயலாது; நான் (இறைச்செய்தியை) எடுத்துரைத்து விட்டேன்." மேலும் மறுமை நாளில், உங்களில் ஒருவரின் பதுக்கப்பட்ட புதையல், வழுக்கைத் தலையுடைய ஷுஜா1 பாம்பாக மாறும். அதன் உரிமையாளர் அதை விட்டும் வெருண்டோடுவார். ஆனால் அது, "நான் தான் உன் பதுக்கப்பட்ட புதையல்," என்று கூறியவாறு அவரைப் பின்தொடரும். அவர் தன் விரலை அது விழுங்குவதற்காகக் கொடுக்கும் வரை அது அவரைத் துரத்திக் கொண்டே இருக்கும்.'