அபூ ஸலமா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்தார். அப்போது அபூ ஹுரைரா (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தார்கள். வந்தவர், "தன் கணவர் இறந்த நாற்பது இரவுகளுக்குப் பிறகு பிரசவித்த ஒரு பெண்ணைப் பற்றி எனக்கு (மார்க்கத்) தீர்ப்பளியுங்கள்" என்று கேட்டார்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), "(அப்பெண்ணின் இத்தாவுக்குரிய) இரண்டு காலக்கெடுவில் பிந்தியதாகும்" என்று கூறினார்கள்.
நான் (அபூ ஸலமா), (அல்குர்ஆன் 65:4 வசனத்தை ஓதி), "கர்ப்பம் தரித்திருப்போர் தங்கள் குழந்தையைப் பிரசவிப்பதே அவர்களுக்கான காலக்கெடுவாகும்" என்று கூறினேன்.
அபூ ஹுரைரா (ரலி), "நானும் என் சகோதரர் மகனுடனே (அபூ ஸலமாவுடனே) இருக்கிறேன்" என்று கூறினார்கள்.
பிறகு இப்னு அப்பாஸ் (ரலி) தம் அடிமை குரைபை, உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் அனுப்பி (இது குறித்துக்) கேட்டு வரச் சொன்னார்கள்.
அதற்கு உம்மு ஸலமா (ரலி), "ஸுபைஆ அல்-அஸ்லமிய்யா (ரலி) கர்ப்பமாக இருந்தபோது அவரின் கணவர் கொல்லப்பட்டார். அவர் இறந்த நாற்பது இரவுகளுக்குப் பின் ஸுபைஆ பிரசவித்தார். அப்பெண்ணுக்குப் பெண் பேசப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்குத் திருமணம் முடித்து வைத்தார்கள். அப்பெண்ணைப் பெண் பேசியவர்களில் அபூ அஸ்-ஸனாபில் (ரலி) அவர்களும் ஒருவர்" என்று பதிலளித்தார்கள்.