"{வ அன்திர் அஷீர தகல் அக்ரபீன்}" ("உமது நெருங்கிய உறவினர்களை எச்சரிக்கை செய்வீராக" - 26:214) என்ற இந்த வசனம் அருளப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியர்களை அழைத்தார்கள். அவர்கள் ஒன்று கூடியபோது, நபி (ஸல்) அவர்கள் (அவ்வழைப்பை) பொதுவாக்கியும் சிறப்பாக்கியும் கூறினார்கள்:
"கஅப் பின் லுஅய்யின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்! முர்ரா பின் கஅபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்! அப்து ஷம்ஸின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்! அப்து மனாஃபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்! ஹாஷிமின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்! அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்! ஃபாத்திமாவே! உன்னை நீ நரக நெருப்பிலிருந்து காத்துக்கொள்! ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு (நன்மை செய்யவோ தீமையைத் தடுக்கவோ) எதற்கும் நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை; ஆயினும், உங்களுக்கு (என்னுடன்) உறவுமுறை உள்ளது; அதை நான் அதற்குரிய ஈரம் கொண்டு நனைப்பேன் (அதாவது உறவை முழுமையாகப் பேணுவேன்)."