இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2333ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ بَيْنَمَا ثَلاَثَةُ نَفَرٍ يَمْشُونَ أَخَذَهُمُ الْمَطَرُ، فَأَوَوْا إِلَى غَارٍ فِي جَبَلٍ، فَانْحَطَّتْ عَلَى فَمِ غَارِهِمْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ فَانْطَبَقَتْ عَلَيْهِمْ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ انْظُرُوا أَعْمَالاً عَمِلْتُمُوهَا صَالِحَةً لِلَّهِ فَادْعُوا اللَّهَ بِهَا لَعَلَّهُ يُفَرِّجُهَا عَنْكُمْ‏.‏ قَالَ أَحَدُهُمُ اللَّهُمَّ إِنَّهُ كَانَ لِي وَالِدَانِ شَيْخَانِ كَبِيرَانِ، وَلِي صِبْيَةٌ صِغَارٌ كُنْتُ أَرْعَى عَلَيْهِمْ، فَإِذَا رُحْتُ عَلَيْهِمْ حَلَبْتُ، فَبَدَأْتُ بِوَالِدَىَّ أَسْقِيهِمَا قَبْلَ بَنِيَّ، وَإِنِّي اسْتَأْخَرْتُ ذَاتَ يَوْمٍ فَلَمْ آتِ حَتَّى أَمْسَيْتُ، فَوَجَدْتُهُمَا نَامَا، فَحَلَبْتُ كَمَا كُنْتُ أَحْلُبُ، فَقُمْتُ عِنْدَ رُءُوسِهِمَا، أَكْرَهُ أَنْ أُوقِظَهُمَا، وَأَكْرَهُ أَنْ أَسْقِيَ الصِّبْيَةَ، وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ قَدَمَىَّ، حَتَّى طَلَعَ الْفَجْرُ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُهُ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا فَرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ‏.‏ فَفَرَجَ اللَّهُ فَرَأَوُا السَّمَاءَ‏.‏ وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنَّهَا كَانَتْ لِي بِنْتُ عَمٍّ أَحْبَبْتُهَا كَأَشَدِّ مَا يُحِبُّ الرِّجَالُ النِّسَاءَ، فَطَلَبْتُ مِنْهَا فَأَبَتْ حَتَّى أَتَيْتُهَا بِمِائَةِ دِينَارٍ، فَبَغَيْتُ حَتَّى جَمَعْتُهَا، فَلَمَّا وَقَعْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتْ يَا عَبْدَ اللَّهِ اتَّقِ اللَّهَ، وَلاَ تَفْتَحِ الْخَاتَمَ إِلاَّ بِحَقِّهِ، فَقُمْتُ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُهُ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فَرْجَةً‏.‏ فَفَرَجَ‏.‏ وَقَالَ الثَّالِثُ اللَّهُمَّ إِنِّي اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقِ أَرُزٍّ، فَلَمَّا قَضَى عَمَلَهُ قَالَ أَعْطِنِي حَقِّي‏.‏ فَعَرَضْتُ عَلَيْهِ، فَرَغِبَ عَنْهُ، فَلَمْ أَزَلْ أَزْرَعُهُ حَتَّى جَمَعْتُ مِنْهُ بَقَرًا وَرَاعِيهَا فَجَاءَنِي فَقَالَ اتَّقِ اللَّهَ‏.‏ فَقُلْتُ اذْهَبْ إِلَى ذَلِكَ الْبَقَرِ وَرُعَاتِهَا فَخُذْ‏.‏ فَقَالَ اتَّقِ اللَّهَ وَلاَ تَسْتَهْزِئْ بِي‏.‏ فَقُلْتُ إِنِّي لاَ أَسْتَهْزِئُ بِكَ فَخُذْ‏.‏ فَأَخَذَهُ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ مَا بَقِيَ، فَفَرَجَ اللَّهُ ‏ ‏‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ ابْنُ عُقْبَةَ عَنْ نَافِعٍ فَسَعَيْتُ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(முன் காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது மழை பிடித்தது. உடனே அவர்கள் மலையிலுள்ள ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். அப்போது மலையிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து அவர்களது குகைவாசலை அடைத்துவிட்டது. அவர்கள் (தங்களுக்குள்), 'நீங்கள் அல்லாஹ்வுக்காகச் செய்த நற்செயல்களைச் சிந்தித்துப் பார்த்து, அவற்றைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; அவன் அதை (பாறையை) உங்களை விட்டும் அகற்றிவிடக் கூடும்' என்று பேசிக்கொண்டனர்.

அவர்களில் ஒருவர் கூறினார்: 'யா அல்லாஹ்! எனக்கு வயது முதிர்ந்த தாய், தந்தையர் இருந்தனர். எனக்குச் சிறிய குழந்தைகளும் இருந்தனர். அவர்களுக்காக நான் (கால்நடைகளை) மேய்த்து வருவேன். நான் மாலையில் திரும்பியதும் பால் கறந்து, என் குழந்தைகளுக்கு முன்பாக என் தாய் தந்தையருக்கே (முதலில்) புகட்டுவேன். ஒரு நாள் நான் (மேய்ச்சல் நிலத்தில்) வெகுதூரத்திற்குச் சென்றுவிட்டதால் மாலை நேரம் வரும் வரை என்னால் திரும்ப முடியவில்லை. (நான் வந்தபோது) அவர்கள் இருவரும் உறங்கிவிட்டிருந்தனர். நான் வழக்கம்போல் பால் கறந்து, பால் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் தலைமாட்டில் நின்றேன். அவர்களை எழுப்புவதை நான் வெறுத்தேன்; அவர்களுக்கு முன் குழந்தைகளுக்குப் புகட்டவும் நான் விரும்பவில்லை. என் காலடியில் குழந்தைகள் (பசியால்) அழுதுகொண்டிருந்தனர். இப்படியே வைகறைப் பொழுது (ஃபஜ்ர்) வந்தது. (யா அல்லாஹ்!) உனது முகத்தை (திருப்பொருத்தத்தை) நாடியே நான் இதைச் செய்தேன் என்று நீ அறிந்திருந்தால், வானம் தெரியும் அளவுக்கு எங்களுக்கு ஒரு இடைவெளியை ஏற்படுத்துவாயாக!' உடனே அல்லாஹ் (பாறையைச் சிறிது) விலக்கினான்; அதிலிருந்து அவர்கள் வானத்தைப் பார்த்தார்கள்.

மற்றொருவர் கூறினார்: 'யா அல்லாஹ்! என் தந்தையின் சகோதரர் மகள் (அத்தை மகள்) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை நேசிப்பதிலேயே மிகக் கடுமையான அளவுக்கு நான் அவளை நேசித்தேன். அவளை அடைய நான் விரும்பினேன். ஆனால், அவளிடம் நூறு பொற்காசுகள் (தீனார்) கொண்டு வரும் வரை அவள் என்னிடம் மறுத்துவிட்டாள். ஆகவே நான் உழைத்து (பொருள் ஈட்டி), அந்த நூறு பொற்காசுகளைத் திரட்டினேன். (அவளிடம் வந்து கொடுத்து) அவளுடைய கால்களுக்கு இடையே நான் அமர்ந்தபோது, 'அல்லாஹ்வின் அடியாரே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய (திருமண) உரிமையின்றி முத்திரையை உடைக்காதீர்' என்று அவள் கூறினாள். உடனே நான் எழுந்துவிட்டேன். (யா அல்லாஹ்!) உனது முகத்தை (திருப்பொருத்தத்தை) நாடியே நான் இதைச் செய்தேன் என்று நீ அறிந்திருந்தால், எங்களுக்கு (இன்னும் சிறிது) வழி விடுவாயாக!' உடனே (பாறை இன்னும் கொஞ்சம்) விலகியது.

மூன்றாமவர் கூறினார்: 'யா அல்லாஹ்! நான் ஒருவரை ஒரு 'ஃபரக்' அளவு அரிசிக்காகக் கூலிக்கு அமர்த்தினேன். அவர் தமது வேலையை முடித்த பின், 'எனது உரிமையை (கூலியை)க் கொடு' என்று கேட்டார். நான் அதை அவருக்கு எடுத்துக் கொடுத்தபோது, அவர் (அற்பமாகக் கருதி) அதைப் புறக்கணித்துச் சென்றுவிட்டார். நான் அந்தப் பயிரைத் தொடர்ந்து விவசாயம் செய்து பெருக்கினேன். அதிலிருந்து பல மாடுகளையும், அதை மேய்ப்பவரையும் நான் சம்பாதித்துவிட்டேன். (நீண்ட காலத்திற்குப் பின்) அவர் என்னிடம் வந்து, 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! (எனது கூலியைத் தா)' என்று கேட்டார். நான், 'அந்த மாடுகளிடமும், அதை மேய்ப்பவரிடமும் நீர் செல்லும்; அவற்றை எடுத்துக்கொள்ளும்' என்றேன். அதற்கு அவர், 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! என்னைக் கேலி செய்யாதீர்' என்றார். நான், 'உம்மை நான் கேலி செய்யவில்லை; அவற்றை எடுத்துக்கொள்ளும்' என்றேன். அவர் அவற்றை ஓட்டிச் சென்றார். (யா அல்லாஹ்!) உனது முகத்தை (திருப்பொருத்தத்தை) நாடியே நான் இதைச் செய்தேன் என்று நீ அறிந்திருந்தால், எஞ்சியிருக்கும் பகுதியையும் விலக்குவாயாக!' உடனே அல்லாஹ் அந்தப் பாறையை (முழுமையாக) விலக்கினான்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3465ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ بَيْنَمَا ثَلاَثَةُ نَفَرٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ يَمْشُونَ إِذْ أَصَابَهُمْ مَطَرٌ، فَأَوَوْا إِلَى غَارٍ، فَانْطَبَقَ عَلَيْهِمْ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ إِنَّهُ وَاللَّهِ يَا هَؤُلاَءِ لاَ يُنْجِيكُمْ إِلاَّ الصِّدْقُ، فَلْيَدْعُ كُلُّ رَجُلٍ مِنْكُمْ بِمَا يَعْلَمُ أَنَّهُ قَدْ صَدَقَ فِيهِ‏.‏ فَقَالَ وَاحِدٌ مِنْهُمُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ كَانَ لِي أَجِيرٌ عَمِلَ لِي عَلَى فَرَقٍ مِنْ أَرُزٍّ، فَذَهَبَ وَتَرَكَهُ، وَأَنِّي عَمَدْتُ إِلَى ذَلِكَ الْفَرَقِ فَزَرَعْتُهُ، فَصَارَ مِنْ أَمْرِهِ أَنِّي اشْتَرَيْتُ مِنْهُ بَقَرًا، وَأَنَّهُ أَتَانِي يَطْلُبُ أَجْرَهُ فَقُلْتُ اعْمِدْ إِلَى تِلْكَ الْبَقَرِ‏.‏ فَسُقْهَا، فَقَالَ لِي إِنَّمَا لِي عِنْدَكَ فَرَقٌ مِنْ أَرُزٍّ‏.‏ فَقُلْتُ لَهُ اعْمِدْ إِلَى تِلْكَ الْبَقَرِ فَإِنَّهَا مِنْ ذَلِكَ الْفَرَقِ، فَسَاقَهَا، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ مِنْ خَشْيَتِكَ، فَفَرِّجْ عَنَّا‏.‏ فَانْسَاحَتْ عَنْهُمُ الصَّخْرَةُ‏.‏ فَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ، فَكُنْتُ آتِيهِمَا كُلَّ لَيْلَةٍ بِلَبَنِ غَنَمٍ لِي، فَأَبْطَأْتُ عَلَيْهِمَا لَيْلَةً فَجِئْتُ وَقَدْ رَقَدَا وَأَهْلِي وَعِيَالِي يَتَضَاغَوْنَ مِنَ الْجُوعِ، فَكُنْتُ لاَ أَسْقِيهِمْ حَتَّى يَشْرَبَ أَبَوَاىَ، فَكَرِهْتُ أَنْ أُوقِظَهُمَا، وَكَرِهْتُ أَنْ أَدَعَهُمَا، فَيَسْتَكِنَّا لِشَرْبَتِهِمَا، فَلَمْ أَزَلْ أَنْتَظِرُ حَتَّى طَلَعَ الْفَجْرُ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ مِنْ خَشْيَتِكَ، فَفَرِّجْ عَنَّا‏.‏ فَانْسَاحَتْ عَنْهُمُ الصَّخْرَةُ، حَتَّى نَظَرُوا إِلَى السَّمَاءِ‏.‏ فَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ كَانَ لِي ابْنَةُ عَمٍّ مِنْ أَحَبِّ النَّاسِ إِلَىَّ، وَأَنِّي رَاوَدْتُهَا عَنْ نَفْسِهَا فَأَبَتْ إِلاَّ أَنْ آتِيَهَا بِمِائَةِ دِينَارٍ، فَطَلَبْتُهَا حَتَّى قَدَرْتُ، فَأَتَيْتُهَا بِهَا فَدَفَعْتُهَا إِلَيْهَا، فَأَمْكَنَتْنِي مِنْ نَفْسِهَا، فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا، فَقَالَتِ اتَّقِ اللَّهَ وَلاَ تَفُضَّ الْخَاتَمَ إِلاَّ بِحَقِّهِ‏.‏ فَقُمْتُ وَتَرَكْتُ الْمِائَةَ دِينَارٍ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ مِنْ خَشْيَتِكَ فَفَرِّجْ عَنَّا‏.‏ فَفَرَّجَ اللَّهُ عَنْهُمْ فَخَرَجُوا ‏ ‏‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தில் மூன்று மனிதர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது மழை பிடித்தது. உடனே அவர்கள் (மலையிலிருந்த) ஒரு குகையில் தஞ்சம் புகுந்தனர். குகைவாசல் அவர்கள் மீது அடைத்துக்கொண்டது.

அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர், ‘இங்கிருப்பவர்களே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! (இறைவனுக்காகச் செய்த) வாய்மையானச் செயலைத் தவிர வேறெதுவும் உங்களைக் காப்பாற்றாது. எனவே, உங்களில் ஒவ்வொருவரும் தாம் (இறைவனுக்காக) வாய்மையுடன் செய்த காரியத்தைக் கூறிப் பிரார்த்தியுங்கள்’ என்று பேசிக்கொண்டனர்.

அவர்களில் ஒருவர் கூறினார்: ‘இறைவா! என்னிடம் ஒரு கூலியாள் ஒரு ’ஃபரக்’ அளவு அரிசிக்கு வேலை செய்தார் என்பதை நீ அறிவாய். அவர் (கூலியைப் பெறாமல்) அதை விட்டுச் சென்றுவிட்டார். நான் அந்த ஒரு ’ஃபரக்’ அரிசியை விவசாயம் செய்தேன். அதிலிருந்து நான் மாடுகளை வாங்கினேன். பின்னர் அவர் தம் கூலியைக் கேட்க என்னிடம் வந்தார். நான் அவரிடம், ‘அந்த மாடுகளிடம் செல்லுங்கள்; அவற்றை ஓட்டிச் செல்லுங்கள்’ என்றேன். அவர் என்னிடம், ‘எனக்குச் சேர வேண்டியது ஒரு ’ஃபரக்’ அரிசி மட்டும்தானே?’ என்று கேட்டார். அதற்கு நான், ‘அந்த மாடுகளிடம் செல்லுங்கள்; ஏனெனில் அவை அந்த ஒரு ’ஃபரக்’ அரிசியி(ன் வருமானத்தி)லிருந்து வந்தவைதான்’ என்று கூறினேன். அவரும் அவற்றை ஓட்டிச் சென்றுவிட்டார். (இறைவா!) உனக்குப் பயந்து நான் இதைச் செய்தேன் என்று நீ அறிந்தால், எங்களை விட்டும் (இத்துன்பத்தை) நீக்குவாயாக!’ என்றார். உடனே, அவர்களிடமிருந்து அந்தப் பாறை (சிறிது) விலகியது.

மற்றொருவர் கூறினார்: ‘இறைவா! எனக்கு மிகவும் வயதான பெற்றோர் இருந்தனர் என்பதை நீ அறிவாய். நான் என் ஆடுகளின் பாலைக் கறந்து ஒவ்வொரு இரவும் அவர்களுக்குக் கொடுத்து வந்தேன். ஓர் இரவில் (வீடு திரும்ப) எனக்குத் தாமதமாகிவிட்டது. நான் வந்தபோது என் பெற்றோர் உறங்கிவிட்டனர். என் மனைவி மக்களோ பசியால் அழுது கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். என் பெற்றோர் அருந்துவதற்கு முன் என் குடும்பத்தாரை அருந்தச் செய்ய நான் விரும்பவில்லை. (அதே சமயம்) அவர்களை எழுப்பவும் எனக்கு மனமில்லை; அவர்கள் பருகாமலேயே விட்டுவிடவும் எனக்கு மனமில்லை (அவர்கள் தங்கள் பானத்தை இழக்க நேரிடும் என்பதால்). அவர்கள் விழித்து (பாலைப்) பருகுவதற்காக விடியும் வரை நான் காத்திருந்தேன். (இறைவா!) உனக்குப் பயந்து நான் இதைச் செய்தேன் என்று நீ அறிந்தால், எங்களை விட்டும் (இத்துன்பத்தை) நீக்குவாயாக!’ என்றார். உடனே அந்தப் பாறை (மேலும்) விலகியது; அவர்கள் வானத்தைப் பார்த்தார்கள்.

மற்றொருவர் கூறினார்: ‘இறைவா! எனக்குச் சிறிய தந்தையின் மகள் ஒருத்தி இருந்தாள். மக்களில் அவளைத்தான் நான் அதிகமாக நேசித்தேன் என்பதை நீ அறிவாய். நான் அவளை அடைய விரும்பினேன். ஆனால், நான் அவளிடம் நூறு தீனார்கள் கொண்டுவந்தாலன்றி அவள் அதற்கு இணங்க மறுத்துவிட்டாள். நான் அதற்காக முயன்று (பணம் திரட்டி), அவளிடம் அதைக் கொண்டுவந்து கொடுத்தேன். அவளும் தன்னை என்னிடம் ஒப்படைக்க இணங்கினாள். நான் அவள் கால்களுக்கு இடையே அமர்ந்தபோது, அவள் ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிமையின்றி (சட்டப்படியானத் திருமண பந்தமின்றி) முத்திரையை உடைக்காதே!’ என்று கூறினாள். உடனே நான் எழுந்துவிட்டேன்; அந்த நூறு தீனார்களையும் விட்டுவிட்டேன். (இறைவா!) உனக்குப் பயந்து நான் இதைச் செய்தேன் என்று நீ அறிந்தால், எங்களை விட்டும் (இத்துன்பத்தை) நீக்குவாயாக!’ என்றார். உடனே அல்லாஹ் அவர்களை (முழுமையாக) விடுவித்தான்; அவர்கள் வெளியேறினார்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5974ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ بَيْنَمَا ثَلاَثَةُ نَفَرٍ يَتَمَاشَوْنَ أَخَذَهُمُ الْمَطَرُ، فَمَالُوا إِلَى غَارٍ فِي الْجَبَلِ، فَانْحَطَّتْ عَلَى فَمِ غَارِهِمْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ، فَأَطْبَقَتْ عَلَيْهِمْ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ انْظُرُوا أَعْمَالاً عَمِلْتُمُوهَا لِلَّهِ صَالِحَةً، فَادْعُوا اللَّهَ بِهَا لَعَلَّهُ يَفْرُجُهَا‏.‏ فَقَالَ أَحَدُهُمُ اللَّهُمَّ إِنَّهُ كَانَ لِي وَالِدَانِ شَيْخَانِ كَبِيرَانِ، وَلِي صِبْيَةٌ صِغَارٌ كُنْتُ أَرْعَى عَلَيْهِمْ، فَإِذَا رُحْتُ عَلَيْهِمْ فَحَلَبْتُ بَدَأْتُ بِوَالِدَىَّ أَسْقِيهِمَا قَبْلَ وَلَدِي، وَإِنَّهُ نَاءَ بِيَ الشَّجَرُ فَمَا أَتَيْتُ حَتَّى أَمْسَيْتُ، فَوَجَدْتُهُمَا قَدْ نَامَا، فَحَلَبْتُ كَمَا كُنْتُ أَحْلُبُ، فَجِئْتُ بِالْحِلاَبِ فَقُمْتُ عِنْدَ رُءُوسِهِمَا، أَكْرَهُ أَنْ أُوقِظَهُمَا مِنْ نَوْمِهِمَا، وَأَكْرَهُ أَنْ أَبْدَأَ بِالصِّبْيَةِ قَبْلَهُمَا، وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ قَدَمَىَّ، فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمْ حَتَّى طَلَعَ الْفَجْرُ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ لَنَا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ، فَفَرَجَ اللَّهُ لَهُمْ فُرْجَةً حَتَّى يَرَوْنَ مِنْهَا السَّمَاءَ‏.‏ وَقَالَ الثَّانِي اللَّهُمَّ إِنَّهُ كَانَتْ لِي ابْنَةُ عَمٍّ، أُحِبُّهَا كَأَشَدِّ مَا يُحِبُّ الرِّجَالُ النِّسَاءَ، فَطَلَبْتُ إِلَيْهَا نَفْسَهَا، فَأَبَتْ حَتَّى آتِيَهَا بِمِائَةِ دِينَارٍ، فَسَعَيْتُ حَتَّى جَمَعْتُ مِائَةَ دِينَارٍ، فَلَقِيتُهَا بِهَا، فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتْ يَا عَبْدَ اللَّهِ اتَّقِ اللَّهَ، وَلاَ تَفْتَحِ الْخَاتَمَ‏.‏ فَقُمْتُ عَنْهَا، اللَّهُمَّ فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي قَدْ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا مِنْهَا فَفَرَجَ لَهُمْ فُرْجَةً‏.‏ وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنِّي كُنْتُ اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقِ أَرُزٍّ فَلَمَّا قَضَى عَمَلَهُ قَالَ أَعْطِنِي حَقِّي‏.‏ فَعَرَضْتُ عَلَيْهِ حَقَّهُ، فَتَرَكَهُ وَرَغِبَ عَنْهُ، فَلَمْ أَزَلْ أَزْرَعُهُ حَتَّى جَمَعْتُ مِنْهُ بَقَرًا وَرَاعِيَهَا، فَجَاءَنِي فَقَالَ اتَّقِ اللَّهَ وَلاَ تَظْلِمْنِي، وَأَعْطِنِي حَقِّي‏.‏ فَقُلْتُ اذْهَبْ إِلَى ذَلِكَ الْبَقَرِ وَرَاعِيهَا‏.‏ فَقَالَ اتَّقِ اللَّهَ وَلاَ تَهْزَأْ بِي‏.‏ فَقُلْتُ إِنِّي لاَ أَهْزَأُ بِكَ، فَخُذْ ذَلِكَ الْبَقَرَ وَرَاعِيَهَا‏.‏ فَأَخَذَهُ فَانْطَلَقَ بِهَا، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ مَا بَقِيَ، فَفَرَجَ اللَّهُ عَنْهُمْ ‏ ‏‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மூன்று நபர்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது மழை பிடித்தது. அவர்கள் மலையிலுள்ள ஒரு குகையில் ஒதுங்கினர். மலையிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து அவர்களது குகை வாசலை மூடிக்கொண்டது. அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர், 'நீங்கள் அல்லாஹ்விற்காகச் செய்த நற்செயல்களை நினைத்துப்பாருங்கள். அவற்றைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் (இக்கஷ்டத்தை) உங்களை விட்டு நீக்கக்கூடும்' என்று பேசிக்கொண்டனர்.

அவர்களில் ஒருவர் கூறினார்: 'இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். எனக்குச் சிறிய குழந்தைகளும் இருந்தனர். அவர்களுக்காக நான் (கால்நடைகளை) மேய்த்து வருவேன். நான் (மேய்ச்சலிலிருந்து) திரும்பினால் பால் கறப்பேன்; என் குழந்தைகளுக்கு முன்பாக என் பெற்றோருக்கே (பாலை) புகட்டுவேன். ஒரு நாள் மேய்ச்சல் என்னைத் வெகுதூரம் கொண்டு சென்றுவிட்டது. மாலை நேரம் வரை நான் திரும்பவில்லை. (நான் வந்தபோது) அவர்கள் இருவரும் உறங்கிவிட்டிருந்தனர். நான் எப்போதும் போல் பால் கறந்து, பாத்திரத்துடன் அவர்கள் தலைமாட்டில் நின்றேன். அவர்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பவும் எனக்கு மனமில்லை; அவர்களுக்கு முன் குழந்தைகளுக்குக் கொடுக்கவும் மனமில்லை. என் காலடியில் குழந்தைகள் (பசியால்) அழுதுகொண்டிருந்தனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது. (இறைவா!) இதை நான் உனது திருப்பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால், வானம் தெரியும் அளவிற்கு எங்களுக்கு ஒரு இடைவெளியை ஏற்படுத்துவாயாக!' (என்று வேண்டினார்). அல்லாஹ் அவர்களுக்கு வானம் தெரியும் அளவிற்கு ஒரு இடைவெளியை ஏற்படுத்தினான்.

இரண்டாமவர் கூறினார்: 'இறைவா! என் தந்தையின் சகோதரர் மகள் (என் மாமன் மகள்) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை நேசிப்பதிலேயே மிகக் கடுமையான நேசத்தை அவள் மீது நான் கொண்டேன். நான் அவளை அடைய விரும்பினேன். ஆனால் நான் நூறு தீனார்கள் கொண்டுவரும் வரை அவள் மறுத்துவிட்டாள். நான் (கடுமையாக) உழைத்து நூறு தீனார்களைச் சேகரித்து அவளிடம் கொண்டு சென்றேன். அவள் கால்களுக்கு இடையே நான் (உறவாட) அமர்ந்தபோது, 'அல்லாஹ்வின் அடியாரே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிமையின்றி முத்திரையை உடைக்காதே' என்று அவள் கூறினாள். உடனே நான் அவளை விட்டு விலகினேன். (இறைவா!) இதை நான் உனது திருப்பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால், இதிலிருந்து எங்களுக்கு விடுதலையளிப்பாயாக!' (என்று வேண்டினார்). அல்லாஹ் அவர்களுக்கு (பாறையை இன்னும் சற்று) விலக்கினான்.

மற்றவர் கூறினார்: 'இறைவா! நான் ஒரு பணியாளரை ஒரு 'ஃபரக்' (அளவை) நெல்லுக்குக் கூலியாக அமர்த்தினேன். அவர் வேலையை முடித்துத் தன் கூலியைக் கேட்டார். நான் அவருக்குரியதை அவரிடம் கொடுத்தபோது, அவர் (அற்பமெனக் கருதி) அதை விட்டுவிட்டு, வெறுத்துச் சென்றுவிட்டார். நான் அப்பயிரைத் தொடர்ந்து பயிரிட்டு (விளைச்சலைப் பெருக்கி), அதிலிருந்து மாடுகளையும் அதற்கென ஒரு இடையனையும் வாங்கினேன். பின்னர் அவர் என்னிடம் வந்து, 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! எனக்கு அநீதி இழைக்காதே! என் கூலியைத் தந்துவிடு' என்றார். நான், 'அந்த மாடுகளையும் அதன் இடையனையும் எடுத்துக்கொள்' என்றேன். அவர், 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! என்னைக் கேலி செய்யாதே' என்றார். நான், 'உன்னை நான் கேலி செய்யவில்லை; அந்த மாடுகளையும் இடையனையும் எடுத்துக்கொள்' என்றேன். அவர் அதை ஓட்டிச் சென்றார். (இறைவா!) இதை நான் உனது திருப்பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால், எஞ்சியிருக்கும் பகுதியையும் விலக்குவாயாக!' (என்று வேண்டினார்). அல்லாஹ் அவர்களை (முழுமையாக) விடுவித்தான்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2743 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْمُسَيَّبِيُّ، حَدَّثَنِي أَنَسٌ، - يَعْنِي ابْنَ عِيَاضٍ أَبَا ضَمْرَةَ
- عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه
وسلم أَنَّهُ قَالَ ‏"‏ بَيْنَمَا ثَلاَثَةُ نَفَرٍ يَتَمَشَّوْنَ أَخَذَهُمُ الْمَطَرُ فَأَوَوْا إِلَى غَارٍ فِي جَبَلٍ فَانْحَطَّتْ
عَلَى فَمِ غَارِهِمْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ فَانْطَبَقَتْ عَلَيْهِمْ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ انْظُرُوا أَعْمَالاً
عَمِلْتُمُوهَا صَالِحَةً لِلَّهِ فَادْعُوا اللَّهَ تَعَالَى بِهَا لَعَلَّ اللَّهَ يَفْرُجُهَا عَنْكُمْ ‏.‏ فَقَالَ أَحَدُهُمُ اللَّهُمَّ
إِنَّهُ كَانَ لِي وَالِدَانِ شَيْخَانِ كَبِيرَانِ وَامْرَأَتِي وَلِيَ صِبْيَةٌ صِغَارٌ أَرْعَى عَلَيْهِمْ فَإِذَا أَرَحْتُ
عَلَيْهِمْ حَلَبْتُ فَبَدَأْتُ بِوَالِدَىَّ فَسَقَيْتُهُمَا قَبْلَ بَنِيَّ وَأَنَّهُ نَأَى بِي ذَاتَ يَوْمٍ الشَّجَرُ فَلَمْ آتِ
حَتَّى أَمْسَيْتُ فَوَجَدْتُهُمَا قَدْ نَامَا فَحَلَبْتُ كَمَا كُنْتُ أَحْلُبُ فَجِئْتُ بِالْحِلاَبِ فَقُمْتُ عِنْدَ رُءُوسِهِمَا
أَكْرَهُ أَنْ أُوقِظَهُمَا مِنْ نَوْمِهِمَا وَأَكْرَهُ أَنْ أَسْقِيَ الصِّبْيَةَ قَبْلَهُمَا وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ
قَدَمَىَّ فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمْ حَتَّى طَلَعَ الْفَجْرُ فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ
وَجْهِكَ فَافْرُجْ لَنَا مِنْهَا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ ‏.‏ فَفَرَجَ اللَّهُ مِنْهَا فُرْجَةً فَرَأَوْا مِنْهَا السَّمَاءَ
‏.‏ وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنَّهُ كَانَتْ لِيَ ابْنَةُ عَمٍّ أَحْبَبْتُهَا كَأَشَدِّ مَا يُحِبُّ الرِّجَالُ النِّسَاءَ وَطَلَبْتُ
إِلَيْهَا نَفْسَهَا فَأَبَتْ حَتَّى آتِيَهَا بِمِائَةِ دِينَارٍ فَتَعِبْتُ حَتَّى جَمَعْتُ مِائَةَ دِينَارٍ فَجِئْتُهَا بِهَا
فَلَمَّا وَقَعْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتْ يَا عَبْدَ اللَّهِ اتَّقِ اللَّهَ وَلاَ تَفْتَحِ الْخَاتَمَ إِلاَّ بِحَقِّهِ ‏.‏ فَقُمْتُ عَنْهَا
فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا مِنْهَا فُرْجَةً ‏.‏ فَفَرَجَ لَهُمْ ‏.‏ وَقَالَ
الآخَرُ اللَّهُمَّ إِنِّي كُنْتُ اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقِ أَرُزٍّ فَلَمَّا قَضَى عَمَلَهُ قَالَ أَعْطِنِي حَقِّي ‏.‏
فَعَرَضْتُ عَلَيْهِ فَرَقَهُ فَرَغِبَ عَنْهُ فَلَمْ أَزَلْ أَزْرَعُهُ حَتَّى جَمَعْتُ مِنْهُ بَقَرًا وَرِعَاءَهَا فَجَاءَنِي
فَقَالَ اتَّقِ اللَّهَ وَلاَ تَظْلِمْنِي حَقِّي ‏.‏ قُلْتُ اذْهَبْ إِلَى تِلْكَ الْبَقَرِ وَرِعَائِهَا فَخُذْهَا ‏.‏ فَقَالَ اتَّقِ
اللَّهَ وَلاَ تَسْتَهْزِئْ بِي ‏.‏ فَقُلْتُ إِنِّي لاَ أَسْتَهْزِئُ بِكَ خُذْ ذَلِكَ الْبَقَرَ وَرِعَاءَهَا ‏.‏ فَأَخَذَهُ فَذَهَبَ
بِهِ فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا مَا بَقِيَ ‏.‏ فَفَرَجَ اللَّهُ مَا بَقِيَ
‏.‏
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"மூன்று நபர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது மழை பிடித்தது. அவர்கள் மலையிலுள்ள ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். அப்போது மலையிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து குகையின் வாசலை மூடிக்கொண்டது. அவர்கள் ஒருவருக்கொருவர், 'நீங்கள் அல்லாஹ்வுக்காகச் செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; அல்லாஹ் அதைக்கொண்டு உங்களுக்கு (வழியைத்) திறக்கக்கூடும்' என்று பேசிக்கொண்டனர்.

அவர்களில் ஒருவர் கூறினார்: 'யா அல்லாஹ்! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர்கள் இருந்தார்கள்; என் மனைவியும், சிறிய குழந்தைகளும் இருந்தார்கள். நான் அவர்களுக்காக (கால்நடைகளை) மேய்த்து வருவேன். நான் (மேய்த்துவிட்டு) திரும்பி வந்தால், பால் கறந்து, என் பிள்ளைகளுக்கு முன்பு என் பெற்றோர்களுக்கு (முதலில்) புகட்டுவேன். ஒரு நாள் (கால்நடைகளை மேய்க்கச் சென்றபோது) மேய்ச்சல் நிலம் என்னைத் தொலைதூரம் அழைத்துச் சென்றுவிட்டதால், (திரும்பி வர) எனக்குத் தாமதமாகிவிட்டது. நான் மாலையில் வந்தபோது அவர்கள் இருவரும் உறங்கிவிட்டிருந்தனர். நான் எப்போதும் போல் பால் கறந்து, பாத்திரத்தைக் கொண்டு வந்து அவர்கள் தலைமாட்டில் நின்றேன். உறக்கத்திலிருந்து அவர்களை எழுப்புவதை நான் வெறுத்தேன்; அவர்களுக்கு முன்பாகப் பிள்ளைகளுக்குப் புகட்டுவதையும் நான் வெறுத்தேன். என் காலடியில் குழந்தைகள் (பசியால்) அழுதுகொண்டிருந்தனர். வைகறை உதயமாகும் வரை என்னுடைய நிலையும் அவர்களின் நிலையும் இப்படியே இருந்தது. (யா அல்லாஹ்!) நான் இதை உனது திருப்பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால், வானம் தெரியும் அளவுக்கு எங்களுக்கு ஒரு திறப்பை ஏற்படுத்துவாயாக!' என்று வேண்டினார். அல்லாஹ் அவர்களுக்கு ஒரு திறப்பை ஏற்படுத்தினான்; அதிலிருந்து அவர்கள் வானத்தைப் பார்த்தார்கள்.

மற்றவர் கூறினார்: 'யா அல்லாஹ்! எனக்கு என் தந்தையின் சகோதரரின் மகள் (அதாவது, என் ஒன்றுவிட்ட சகோதரி) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை நேசிப்பதிலேயே மிகக் கடுமையாக நான் அவளை நேசித்தேன். நான் அவளை அடைய விரும்பினேன்; ஆனால் நூறு தீனார்கள் நான் அவளிடம் கொண்டு வரும் வரை அவள் மறுத்துவிட்டாள். நான் (கடுமையாக) உழைத்து நூறு தீனார்களைச் சேகரித்தேன். அதை அவளிடம் கொண்டு வந்தேன். நான் அவள் கால்களுக்கு இடையே அமர்ந்தபோது, 'அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வை அஞ்சு! உரிய முறையிலன்றி (திருமணமின்றி) முத்திரையை உடைக்காதே!' என்று அவள் கூறினாள். உடனே நான் அவளை விட்டு எழுந்துவிட்டேன். (யா அல்லாஹ்!) நான் இதை உனது திருப்பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால், எங்களுக்கு (இன்னும்) ஒரு திறப்பை ஏற்படுத்துவாயாக!' என்று வேண்டினார். அல்லாஹ் அவர்களுக்கு (மேலும்) ஒரு திறப்பை ஏற்படுத்தினான்.

மற்றொருவர் கூறினார்: 'யா அல்லாஹ்! நான் ஒருவரை ஒரு 'ஃபரக்' (எனும் அளவு) அரிசி கூலிக்கு வேலைக்கு அமர்த்தினேன். அவர் தனது வேலையை முடித்ததும், 'என் கூலியை எனக்குத் தா!' என்று கேட்டார். நான் அவருக்குரிய (அந்த ஒரு ஃபரக்) கூலியை எடுத்துக் கொடுத்தேன். ஆனால் அவர் அதைப் புறக்கணித்துச் சென்றுவிட்டார். நான் அதை (விதையாகப்) பயிரிட்டேன்; அதிலிருந்து மாடுகளையும் அதை மேய்ப்பவர்களையும் நான் சம்பாதிக்கும் வரை (செல்வம் பெருகியது). பின்னர் அவர் என்னிடம் வந்து, 'அல்லாஹ்வை அஞ்சு! எனக்கு அநீதி இழைக்காதே (என் கூலியைத் தா)!' என்று கேட்டார். நான், 'அந்த மாடுகளிடமும் அதை மேய்ப்பவர்களிடமும் சென்று அவற்றை எடுத்துக்கொள்!' என்று கூறினேன். அவர், 'அல்லாஹ்வை அஞ்சு! என்னைக் கேலி செய்யாதே!' என்றார். நான், 'உன்னைக் கேலி செய்யவில்லை; அந்த மாடுகளையும் அதை மேய்ப்பவர்களையும் எடுத்துக்கொள்!' என்றேன். அவர் அவற்றை (ஓட்டிச்) சென்றார். (யா அல்லாஹ்!) நான் இதை உனது திருப்பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால், எஞ்சியிருப்பதையும் எங்களுக்குத் திறந்துவிடுவாயாக!' என்று வேண்டினார். அல்லாஹ் எஞ்சியிருந்த (பகுதியையும்) திறந்தான்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
12ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن أبي عبد الرحمن عبد الله بن عمر بن الخطاب، رضي الله عنهما قال‏:‏ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول‏:‏ ‏"‏ انطلق ثلاثة نفر ممن كان قبلكم حتى آواهم المبيت إلى غار فدخلوه، فانحدرت صخرة من الجبل فسدت عليهم الغار، فقالوا‏:‏ إنه لا ينجيكم من هذه الصخرة إلا أن تدعوا الله بصالح أعمالكم‏.‏ قال رجل منهم‏:‏ اللهم كان لي أبوان شيخان كبيران، وكنت لا أغبق قبلهما أهلاً ولا مالاً‏.‏ فنأى بى طلب الشجر يوماً فلم أرح عليهما حتى ناما فحلبت لهما غبوقهما فوجدتهما نائمين فكرهت أن أوقظهما وأن أغبق قبلهما أهلاً أو مالاً، فلبثت- والقدح على يدى- أنتظر استيقاظهما حتى برق الفجر والصبية يتضاغون عند قدمى- فاستيقظا فشربا غبوقهما‏.‏ اللهم إن كنت فعلت ذلك ابتغاء وجهك ففرج عنا ما نحن فيه من هذه الصخرة، فانفرجت شيئاً لا يستطيعون الخروج منه‏.‏ قال الآخر‏:‏ اللهم إنه كانت لي ابنة عم كانت أحب الناس إلىّ ‏"‏ وفى رواية‏:‏ ‏"‏كنت أحبها كأشد ما يحب الرجال النساء، فأردتها على نفسها فامتنعت منى حتى ألمّت بها سنة من السنين فجاءتنى فأعطيتها عشرين ومائة دينار على أن تخلى بينى وبين نفسها ففعلت، حتى إذا قدرت عليها‏"‏ وفى رواية‏:‏ ‏"‏فلما قعدت بين رجليها، قالت‏:‏ اتق الله ولا تفض الخاتم إلا بحقه، فانصرفت عنها وهى أحب الناس إلى وتركت الذهب الذى أعطيتها، اللهم إن كنت فعلت ذلك ابتغاء وجهك فافرج عنا ما نحن فيه، فانفرجت الصخرة غير أنهم لا يستطيعون الخروج منها‏.‏ وقال الثالث‏:‏ اللهم استأجرت أجراء وأعطيتهم أجرهم غير رجل واحد ترك الذى له وذهب، فثمرت أجره حتى كثرت منه الأموال، فجاءنى بعد حين فقال‏:‏ يا عبد الله أدّ إلى أجرى، فقلت‏:‏ كل ما ترى من أجرك‏:‏ من الإبل والبقر والغنم والرقيق‏.‏ فقال‏:‏ يا عبد الله لا تستهزئ بى‏!‏ فقلت‏:‏ لا أستهزئ بك، فأخذه كله فاستاقه فلم يترك منه شيئاً، اللهم إن كنتُ فعلت ذلك ابتغاء وجهك فافرج عنا ما نحن فيه، فانفرجت الصخرة فخرجوا يمشون‏"‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக: "உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று நபர்கள் ஒரு பயணம் சென்றனர். (இரவு நேரம் வந்ததும்,) அவர்கள் ஒரு குகையை அடைந்து அதற்குள் நுழைந்தனர். மலையிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து குகையின் நுழைவாயிலை அடைத்துவிட்டது. அவர்கள், 'நீங்கள் செய்த ஒரு நல்ல செயலின் பொருட்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு எதுவும் உங்களை இதிலிருந்து காப்பாற்றாது' என்று பேசிக்கொண்டனர்.

அப்போது, அவர்களில் ஒருவர் கூறினார்: 'யா அல்லாஹ்! எனக்கு வயதான பெற்றோர்கள் இருந்தனர். என் பிள்ளைகளுக்கோ அல்லது அடிமைகளுக்கோ (மாலை நேர) பால் கொடுப்பதற்கு முன்பு அவர்களுக்குத்தான் நான் (பால்) கொடுப்பது வழக்கம். ஒரு நாள், நான் (என் கால்நடைகளுக்கான) மேய்ச்சலுக்காக வெகுதூரம் சென்றுவிட்டதால், அவர்கள் உறங்கும் வரை என்னால் திரும்பி வர முடியவில்லை. நான் வழக்கம் போல் பால் கறந்து (அவர்களுக்கான) பானத்தைக் கொண்டு வந்தபோது, அவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை, மேலும் அவர்களுக்கு முன்பு என் பிள்ளைகளுக்கோ அல்லது அடிமைகளுக்கோ பால் கொடுப்பதையும் நான் வெறுத்தேன். என் பிள்ளைகள் (பசியால்) என் காலடியில் அழுது கொண்டிருந்தனர், ஆனால் நான் பாத்திரத்தை கையில் ஏந்தியபடி அவர்கள் விழிக்கும் வரை காத்திருந்தேன். விடியற்காலையில் அவர்கள் எழுந்தபோது, பாலைக் குடித்தார்கள். யா அல்லாஹ்! உன்னுடைய திருப்தியை நாடியே நான் இதைச் செய்திருந்தால், இந்தப் பாறையால் ஏற்பட்ட துன்பத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக'. அந்தப் பாறை சற்று நகர்ந்தது, ஆனால் அவர்களால் வெளியேற முடியவில்லை.

அடுத்தவர் கூறினார்: 'யா அல்லாஹ்! எனக்கு ஒரு மாமன் மகள் இருந்தாள். நான் அவளை மற்ற எல்லோரையும் விட அதிகமாக நேசித்தேன் (மற்றொரு அறிவிப்பில், ஒரு ஆண் ஒரு பெண்ணை நேசிப்பது போல என்று உள்ளது). நான் அவளுடன் (தாம்பத்திய) உறவு கொள்ள விரும்பினேன், ஆனால் அவள் மறுத்துவிட்டாள். ஒரு (பஞ்ச காலத்தில் வறுமையால் வாடிய) அவள், என்னிடம் வந்தாள். அவள் எனக்கு இணங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நான் அவளுக்கு நூற்று இருபது தீனார்களைக் கொடுத்தேன். அவள் ஒப்புக்கொண்டாள், நாங்கள் (தாம்பத்திய உறவுக்காக) ஒன்று சேர்ந்தபோது, அவள், 'அல்லாஹ்வுக்கு அஞ்சு, சட்டவிரோதமாக முத்திரையை உடைக்காதே' என்று கூறினாள். நான் அவளை மிகவும் ஆழமாக நேசித்த போதிலும் அவளிடமிருந்து விலகிவிட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த பணத்தையும் அவளிடமே விட்டுவிட்டேன். யா அல்லாஹ்! உன்னுடைய திருப்தியை நாடியே நான் இதைச் செய்திருந்தால், நாங்கள் இருக்கும் இந்தத் துன்பத்தை நீக்குவாயாக'. பாறை இன்னும் சற்று நகர்ந்தது, ஆனால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.

மூன்றாமவர் கூறினார்: 'யா அல்லாஹ்! நான் சில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களில் ஒருவர் தனது கூலியைப் பெறாமல் சென்றுவிட்டதைத் தவிர மற்ற அனைவருக்கும் கூலியைக் கொடுத்துவிட்டேன். அவருடைய கூலியை நான் (ஒரு வியாபாரத்தில் முதலீடு செய்து) வளர்த்தேன், (அந்த வியாபாரம் பெரிதும் செழித்தது) அதனால் பெரும் செல்வமாக மாறியது. நீண்ட காலத்திற்குப் பிறகு, அவர் என்னிடம் வந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! எனக்குச் சேர வேண்டியதைக் கொடுங்கள்' என்றார். நான், 'நீங்கள் பார்க்கும் இவை அனைத்தும் - ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள் மற்றும் அடிமைகள் - உங்களுடையதுதான்' என்றேன். அவர், 'அல்லாஹ்வின் அடியாரே! என்னைக் கேலி செய்யாதீர்கள்' என்றார். நான் கேலி செய்யவில்லை என்று அவருக்கு உறுதியளித்தேன். எனவே அவர் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அவர் எதையும் விட்டுவைக்கவில்லை. யா அல்லாஹ்! உன்னுடைய திருப்தியை நாடியே நான் இதைச் செய்திருந்தால், எங்கள் துன்பத்திலிருந்து எங்களை விடுவிப்பாயாக'. அந்தப் பாறை விலகியது, அவர்கள் (சுதந்திரமாக) நடந்து வெளியேறினார்கள்".