அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வாசலில் சச்சரவிட்டுக் கொண்டிருந்த இருவரின் குரல்களைக் கேட்டார்கள்; அவ்விருவரின் குரல்களும் உயர்ந்திருந்தன. அவர்களில் ஒருவர் மற்றவரிடம் (கடனைக்) குறைக்குமாறும், (தன்னிடம்) மென்மையாக நடக்குமாறும் கோரிக் கொண்டிருந்தார். ஆனால் மற்றவர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் (அவ்வாறு) செய்யமாட்டேன்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரிடமும் வெளியே வந்து, "நன்மை செய்யமாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டவர் எங்கே?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அது. அவருக்கு (கடன் பட்டவருக்கு) எது விருப்பமோ அது அவருக்கு உண்டு" என்று கூறினார்.