அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“ஒருவர் ஜமாஅத்துடன் (கூட்டாக) தொழும் தொழுகையானது, அவர் தனியாகத் தொழும் தொழுகையை விட இருபத்தேழு மடங்கு கூடுதலானதாகும்.”
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்:
ஒருவர் ஜமாஅத்துடன் (கூட்டாக) தொழும் தொழுகையானது, அவர் தமது இல்லத்திலும் தமது வியாபார ஸ்தலத்திலும் (தனியாகத்) தொழும் தொழுகையை விட இருபதுக்கும் மேற்பட்ட பாகங்கள் அதிக சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், ஒருவர் உளூவை நல்லமுறையில் செய்துவிட்டு, தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமுமின்றி, (கூட்டுத்) தொழுகைக்காகவே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் செல்வாரானால், அவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் வரையில், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவருக்காக ஒரு அந்தஸ்து உயர்த்தப்பட்டு, ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது. அவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்து தொழுகையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவர் தொழுத இடத்திலேயே இருக்கும் வரை, மலக்குகள் அவருக்காக, “யா அல்லாஹ்! இவருக்குக் கருணை புரிவாயாக, இவரை மன்னிப்பாயாக! இவரது தவ்பாவை ஏற்றுக்கொள்வாயாக!” என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கிறார்கள். அவர் அங்கே எந்தத் தீங்கும் செய்யாமலும், அல்லது அவரது உளூ முறியாமலும் இருக்கும் காலமெல்லாம் (மலக்குகள் அவருக்காக இவ்வாறு பிரார்த்திக்கிறார்கள்).