அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது ஓரிடத்தில் தங்கினோம். அப்போது ஒரு பணிப்பெண் வந்து, “இந்தக் கூட்டத்தின் தலைவர் (விஷ ஜந்துவால்) தீண்டப்பட்டுள்ளார். எங்களில் ஆண்கள் யாரும் இங்கில்லை. உங்களில் மந்திரிப்பவர் (ருக்யா செய்பவர்) எவரேனும் உண்டா?” என்று கேட்டார்.
எங்களுள் ஒருவர் அவருடன் சென்றார். அவருக்கு மந்திரிக்கத் தெரியும் என்று நாங்கள் (இதற்கு முன்) எண்ணியிருக்கவில்லை. அவர் (தலைவருக்கு) மந்திரித்தார்; அவர் குணமடைந்தார். ஆகவே, அவருக்கு முப்பது ஆடுகளைக் (கொடுக்குமாறு) அ(த் தலை)வர் உத்தரவிட்டார். மேலும் எங்களுக்குப் பாலைக் குடிக்கத் தந்தார்.
அவர் திரும்பியதும் நாங்கள் அவரிடம், “உமக்கு (நன்றாக) மந்திரிக்கத் தெரியுமா? அல்லது (முன்பே) மந்திரிப்பவராக இருந்தீரா?” என்று கேட்டோம். அவர், “இல்லை, ‘உம்முல் கிதாப்’ (அல்-ஃபாத்திஹா அத்தியாயத்தைக்) கொண்டே தவிர (வேறெதையும் கொண்டு) நான் மந்திரிக்கவில்லை” என்றார்.
நாங்கள் (எங்களுக்கிடையில்), “நபி (ஸல்) அவர்களிடம் நாம் செல்லும் வரை - அல்லது கேட்கும் வரை - (இந்த ஆடுகள் விஷயத்தில்) எதையும் செய்யாதீர்கள்” என்று பேசிக்கொண்டோம். நாங்கள் மதீனாவை அடைந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றிக் கூறினோம்.
அதற்கு அவர்கள், “அது ஒரு மந்திரிப்பு (ருக்யா) என்று அவருக்கு எப்படித் தெரியும்? (அந்த ஆடுகளைப்) பங்கிடுங்கள்; எனக்கும் அதில் ஒரு பங்கை ஒதுக்குங்கள்” என்று கூறினார்கள்.