حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي سَعِيدٌ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا فُتِحَتْ خَيْبَرُ أُهْدِيَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم شَاةٌ فِيهَا سُمٌّ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اجْمَعُوا إِلَىَّ مَنْ كَانَ هَا هُنَا مِنْ يَهُودَ ". فَجُمِعُوا لَهُ فَقَالَ " إِنِّي سَائِلُكُمْ عَنْ شَىْءٍ فَهَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْهُ ". فَقَالُوا نَعَمْ. قَالَ لَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ أَبُوكُمْ ". قَالُوا فُلاَنٌ. فَقَالَ " كَذَبْتُمْ، بَلْ أَبُوكُمْ فُلاَنٌ ". قَالُوا صَدَقْتَ. قَالَ " فَهَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَىْءٍ إِنْ سَأَلْتُ عَنْهُ " فَقَالُوا نَعَمْ يَا أَبَا الْقَاسِمِ، وَإِنْ كَذَبْنَا عَرَفْتَ كَذِبَنَا كَمَا عَرَفْتَهُ فِي أَبِينَا. فَقَالَ لَهُمْ " مَنْ أَهْلُ النَّارِ ". قَالُوا نَكُونُ فِيهَا يَسِيرًا ثُمَّ تَخْلُفُونَا فِيهَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اخْسَئُوا فِيهَا، وَاللَّهِ لاَ نَخْلُفُكُمْ فِيهَا أَبَدًا ـ ثُمَّ قَالَ ـ هَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَىْءٍ إِنْ سَأَلْتُكُمْ عَنْهُ ". فَقَالُوا نَعَمْ يَا أَبَا الْقَاسِمِ. قَالَ " هَلْ جَعَلْتُمْ فِي هَذِهِ الشَّاةِ سُمًّا ". قَالُوا نَعَمْ. قَالَ " مَا حَمَلَكُمْ عَلَى ذَلِكَ ". قَالُوا أَرَدْنَا إِنْ كُنْتَ كَاذِبًا نَسْتَرِيحُ، وَإِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது, நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் வைக்கப்பட்ட ஓர் ஆடு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "இங்குள்ள யூதர்கள் அனைவரையும் என்னிடம் ஒன்று கூட்டுங்கள்" என்று கூறினார்கள்.
அவர்கள் ஒன்று கூட்டப்பட்டனர். நபி (ஸல்) அவர்கள், "நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப்போகிறேன்; அதைப் பற்றி என்னிடம் உண்மை சொல்வீர்களா?" என்று கேட்டார்கள். அவர்கள் "ஆம்" என்றனர். நபி (ஸல்) அவர்கள், "உங்கள் தந்தை யார்?" என்று கேட்டார்கள். அவர்கள் "இன்னார்" என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் பொய் சொல்கிறீர்கள்; மாறாக உங்கள் தந்தை இன்னார்தான்" என்றார்கள். அவர்கள், "நீங்கள் உண்மை சொன்னீர்கள்" என்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "நான் (வேறொரு) விஷயத்தைப் பற்றிக் கேட்டால் என்னிடம் உண்மை சொல்வீர்களா?" என்று கேட்டார்கள். அவர்கள், "ஆம், அபுல் காசிம் அவர்களே! நாங்கள் பொய் சொன்னால், எங்கள் தந்தையின் விஷயத்தில் (எங்கள் பொய்யை) நீங்கள் அறிந்துகொண்டது போன்று, (இதிலும்) எங்கள் பொய்யை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்" என்றார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "நரகவாசிகள் யார்?" என்று கேட்டார்கள். அவர்கள், "நாங்கள் அதில் சிறிது காலம் இருப்போம்; பிறகு எங்களுக்குப் பகரமாக நீங்கள் அதில் இருப்பீர்கள்" என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், "அதில் இழிவடைந்து தொலைந்து போங்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒருபோதும் நாங்கள் உங்களுக்குப் பகரமாக அதில் இருக்கமாட்டோம்" என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள், "நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டால் என்னிடம் உண்மை சொல்வீர்களா?" என்று கேட்டார்கள். அவர்கள் "ஆம், அபுல் காசிம் அவர்களே!" என்றார்கள். "இந்த ஆட்டில் நீங்கள் விஷம் வைத்தீர்களா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர்கள் "ஆம்" என்றார்கள். "அவ்வாறு செய்ய உங்களைத் தூண்டியது எது?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள், "நீங்கள் பொய்யராக இருந்தால் (உங்கள் தொல்லையிலிருந்து) நாங்கள் நிம்மதி பெறுவோம்; நீங்கள் இறைத்தூதராக இருந்தால் (இவ்விஷம்) உங்களுக்குத் தீங்கு இழைக்காது என்று (கருதியே நாங்கள் இவ்வாறு செய்தோம்)" என்றார்கள்.