அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்: "நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்), எனது தடாகத்திலிருந்து நான் (தண்ணீர்) இறைத்து மக்களுக்குப் புகட்டிக் கொண்டிருப்பதாக எனக்குக் காட்டப்பட்டது. அப்போது என்னிடம் அபூபக்ர் வந்தார். எனக்கு ஓய்வு தருவதற்காக என் கையிலிருந்து வாளியை வாங்கிக்கொண்டார். அவர் இரண்டு வாளிகள் இறைத்தார்; அவர் இறைப்பதில் சிறிது பலவீனம் இருந்தது. அல்லாஹ் அவரை மன்னிப்பானாக! பின்னர் இப்னு கத்தாப் (உமர்) வந்தார். அவர் அதை (அபூபக்ரிடமிருந்து) வாங்கிக்கொண்டார். மக்கள் (தாகம் தீர்ந்து) திரும்பிச் செல்லும் வரையிலும், தடாகம் (நீர் நிரம்பி) வழிந்தோடும் வரையிலும், அவரை விட வலிமையாக (தண்ணீர்) இறைக்கும் ஒரு மனிதரை நான் ஒருபோதும் கண்டதில்லை."