حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَقَطَنُ بْنُ نُسَيْرٍ، - وَاللَّفْظُ لِيَحْيَى - أَخْبَرَنَا جَعْفَرُ،
بْنُ سُلَيْمَانَ عَنْ سَعِيدِ بْنِ إِيَاسٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ حَنْظَلَةَ الأُسَيِّدِيِّ،
قَالَ - وَكَانَ مِنْ كُتَّابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ - لَقِيَنِي أَبُو بَكْرٍ فَقَالَ كَيْفَ
أَنْتَ يَا حَنْظَلَةُ قَالَ قُلْتُ نَافَقَ حَنْظَلَةُ قَالَ سُبْحَانَ اللَّهِ مَا تَقُولُ قَالَ قُلْتُ نَكُونُ عِنْدَ رَسُولِ
اللَّهِ صلى الله عليه وسلم يُذَكِّرُنَا بِالنَّارِ وَالْجَنَّةِ حَتَّى كَأَنَّا رَأْىَ عَيْنٍ فَإِذَا خَرَجْنَا مِنْ عِنْدِ
رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَافَسْنَا الأَزْوَاجَ وَالأَوْلاَدَ وَالضَّيْعَاتِ فَنَسِينَا كَثِيرًا قَالَ
أَبُو بَكْرٍ فَوَاللَّهِ إِنَّا لَنَلْقَى مِثْلَ هَذَا . فَانْطَلَقْتُ أَنَا وَأَبُو بَكْرٍ حَتَّى دَخَلْنَا عَلَى رَسُولِ اللَّهِ
صلى الله عليه وسلم قُلْتُ نَافَقَ حَنْظَلَةُ يَا رَسُولَ اللَّهِ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم " وَمَا ذَاكَ " . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ نَكُونُ عِنْدَكَ تُذَكِّرُنَا بِالنَّارِ وَالْجَنَّةِ حَتَّى كَأَنَّا
رَأْىَ عَيْنٍ فَإِذَا خَرَجْنَا مِنْ عِنْدِكَ عَافَسْنَا الأَزْوَاجَ وَالأَوْلاَدَ وَالضَّيْعَاتِ نَسِينَا كَثِيرًا .
فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنْ لَوْ تَدُومُونَ عَلَى مَا تَكُونُونَ
عِنْدِي وَفِي الذِّكْرِ لَصَافَحَتْكُمُ الْمَلاَئِكَةُ عَلَى فُرُشِكُمْ وَفِي طُرُقِكُمْ وَلَكِنْ يَا حَنْظَلَةُ سَاعَةً
وَسَاعَةً " . ثَلاَثَ مَرَّاتٍ .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எழுத்தர்களில் ஒருவரான ஹன்ளலா அல்-உஸய்யிதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னை அபூபக்ர் (ரலி) அவர்கள் சந்தித்தார்கள். "ஹன்ளலாவே! எப்படி இருக்கிறீர்?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "ஹன்ளலா நயவஞ்சகனாகிவிட்டான்" என்று கூறினேன். அவர்கள், "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)! நீர் என்ன சொல்கிறீர்?" என்று கேட்டார்கள்.
நான் கூறினேன்: "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருக்கும்போது சொர்க்கம், நரகத்தைப் பற்றி அவர்கள் எங்களுக்கு நினைவூட்டுகிறார்கள். எந்த அளவிற்கென்றால் அவற்றை நாங்கள் நேரில் காண்பதைப் போன்று (உணர்கிறோம்). ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நாங்கள் வெளியேறி வந்துவிட்டால், மனைவியர், குழந்தைகள் மற்றும் சொத்து சுகங்களில் (உலக விவகாரங்களில்) கலந்து விடுகிறோம். இதனால் (அந்நினைவுகள்) பலவற்றையும் மறந்து விடுகிறோம்."
(அதைக் கேட்ட) அபூபக்ர் (ரலி), "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்களும் இத்தகைய நிலையைத்தான் சந்திக்கிறோம்" என்று கூறினார்கள்.
எனவே, நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான், "அல்லாஹ்வின் தூதரே! ஹன்ளலா நயவஞ்சகனாகிவிட்டான்" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்ன விஷயம்?" என்று கேட்டார்கள்.
நான் கூறினேன்: "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தங்களுடன் இருக்கும்போது சொர்க்கம், நரகத்தைப் பற்றித் தாங்கள் எங்களுக்கு நினைவூட்டுகிறீர்கள். அவற்றை நாங்கள் நேரில் காண்பதைப் போன்று (உணர்கிறோம்). ஆனால், தங்களிடமிருந்து நாங்கள் வெளியேறி வந்துவிட்டால், மனைவியர், குழந்தைகள் மற்றும் சொத்து சுகங்களில் கலந்து விடுகிறோம். இதனால் (அந்நினைவுகள்) பலவற்றையும் மறந்து விடுகிறோம்."
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! என்னிடம் நீங்கள் இருக்கும்போதும், (இறை)நினைவிலும் நீங்கள் இருக்கும் அந்த நிலை (எப்போதும்) நீடித்திருந்தால், வானவர்கள் உங்கள் படுக்கைகளிலும் உங்கள் பாதைகளிலும் உங்களைச் சந்தித்து கைக்குலுக்குவார்கள். ஆயினும் ஹன்ளலாவே! (இறைவனுக்காக) ஒரு நேரம்; (உலகத்திற்காக) ஒரு நேரம் (என்று இருப்பீராக!)" என்று மூன்று முறை கூறினார்கள்.