அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யார் ஓர் இறைநம்பிக்கையாளரின் இம்மைத் துன்பங்களில் ஒன்றை நீக்குகிறாரோ, அல்லாஹ் அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை நீக்குகிறான். யார் சிரமப்படுபவருக்கு (நெருக்கடியை) இலகுவாக்குகிறாரோ, அல்லாஹ் அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் (காரியங்களை) இலகுவாக்குவான். மேலும், யார் ஒரு முஸ்லிமின் (குறைகளை) மறைக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய குறைகளை இம்மையிலும் மறுமையிலும் மறைப்பான். ஓர் அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் காலமெல்லாம், அல்லாஹ் அந்த அடியானுக்கு உதவி செய்துகொண்டிருக்கிறான்.
மேலும், யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் செல்கிறாரோ, அல்லாஹ் அவருக்குச் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை எளிதாக்குகிறான். மக்கள் அல்லாஹ்வின் இல்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும், தங்களுக்கிடையே அதை ஆழ்ந்து கற்றுக்கொண்டும் இருந்தால், அவர்கள் மீது அமைதி இறங்குகிறது; அவர்களைக் கருணை சூழ்ந்துகொள்கிறது; வானவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்கிறார்கள்; மேலும் அல்லாஹ் தம்மிடமுள்ளவர்களிடத்தில் அவர்களைப் பற்றி(ச் சிறப்பித்து)க் கூறுகிறான். மேலும், யாருடைய செயல் அவரைப் பின்தங்கச் செய்கிறதோ, அவருடைய வம்சம் அவரை முந்திச் செல்ல வைக்காது.”