ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் (பசியால்) வாடுகிறேன்" என்றார்.
நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரில் ஒருவரிடம் (உணவு கேட்டு) ஆளனுப்பினார்கள். அதற்கு அவர், "உங்களைச் சத்தியத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! என்னிடம் தண்ணீரைத் தவிர வேறு எதுவுமில்லை" என்று கூறினார்.
பிறகு மற்றொருவரிடம் ஆளனுப்பினார்கள். அவரும் அதையே கூறினார். இப்படியே மனைவியர் அனைவரும், "இல்லை; உங்களைச் சத்தியத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! என்னிடம் தண்ணீரைத் தவிர வேறு எதுவுமில்லை" என்று அதையே கூறினர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "இன்றிரவு இவருக்கு யார் விருந்தளிப்பாரோ, அவருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!" என்று கூறினார்கள்.
அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் (விருந்தளிக்கிறேன்)" என்றார்.
அவர் அந்த மனிதரைத் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்று, தம் மனைவியிடம், "உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார். அதற்கு அவர், "இல்லை; என் குழந்தைகளுக்குரிய உணவைத் தவிர (வேறில்லை)" என்றார்.
அதற்கு அவர், "அவர்களை எதையாவது காட்டித் திசைதிருப்பிவிடு. நம் விருந்தினர் உள்ளே வந்தால் விளக்கை அணைத்துவிடு; நாம் சாப்பிடுவது போல் அவருக்குக் காட்டு. அவர் சாப்பிடுவதற்குத் (தம் கையை) நீட்டும்போது, விளக்கை நோக்கி எழுந்து சென்று அதை அணைத்துவிடு" என்று கூறினார்.
அவர்கள் அவ்வாறே அமர்ந்தனர்; விருந்தினரும் சாப்பிட்டார்.
விடிந்ததும் அந்த அன்சாரி நபி (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், "இன்றிரவு உங்கள் விருந்தினரிடம் நீங்கள் இருவரும் நடந்து கொண்ட முறையைக் கண்டு அல்லாஹ் வியப்படைந்தான்" என்று கூறினார்கள்.