அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மக்களின் வாழ்க்கையில் மிகச் சிறந்தது, அல்லாஹ்வின் பாதையில் தனது குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதரின் வாழ்க்கையாகும். அவர் (பீதியூட்டும்) கூச்சலையோ அபாயக் குரலையோ செவியுறும் போதெல்லாம், அதன் (குதிரையின்) முதுகில் பாய்ந்தேறி, கொல்லப்படுவதையோ மரணத்தையோ எதிர்பார்த்து அதற்குரிய இடங்களை நோக்கி விரைகிறார். அல்லது (மற்றொருவர்), இந்த மலை உச்சிகளில் ஒன்றிலோ அல்லது இந்தப் பள்ளத்தாக்குகளில் ஒன்றிலோ தனது ஆட்டு மந்தையுடன் வசிக்கிறார். அவர் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத் வழங்கி, ‘யகீன்’ (எனும் மரணம்) தம்மிடம் வரும்வரை தம் இறைவனை வணங்கிக் கொண்டிருக்கிறார். அவர் மக்களிடத்தில் நன்மையில் மட்டுமே இருக்கிறார்."