நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம் ஏதேனும் விசாரிப்பதற்காக வந்தேன். அவர்கள், "நீங்கள் யாரைச் சேர்ந்தவர்?" என்று கேட்டார்கள். நான், "எகிப்து வாசிகளைச் சேர்ந்த ஒருவன்" என்று கூறினேன். அவர்கள், "உங்களுடைய இந்தப் போரில் உங்கள் தோழர் (தலைவர்) உங்களிடம் எப்படி நடந்துகொண்டார்?" என்று கேட்டார்கள்.
அதற்கு நான், "நாங்கள் அவரிடம் குறை காணும்படி எதுவும் இருக்கவில்லை. எங்களில் ஒருவருடைய ஒட்டகம் இறந்துவிட்டால், அவர் அவருக்கு ஒரு ஒட்டகத்தைக் கொடுப்பார்; அடிமை இறந்துவிட்டால், ஓர் அடிமையைக் கொடுப்பார்; வாழ்க்கைச் செலவுக்குத் தேவையேற்பட்டால், அதற்கான செலவுத் தொகையை வழங்குவார்" என்று கூறினேன்.
அவர்கள் கூறினார்கள்: "அறிந்துகொள்! என்னுடைய சகோதரர் முஹம்மது இப்னு அபூபக்கர் விஷயத்தில் அவர் செய்த செயல், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த வீட்டில் கூறியதை உனக்குச் சொல்வதிலிருந்து என்னைத் தடுக்காது. அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்தார்கள்:
(இதன் பொருள்): 'அல்லாஹ்வே! என் உம்மத்தினரின் காரியங்களில் எதையேனும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று, அவர்களிடம் சிரமமாக (கடுமையாக) நடந்துகொள்கிறாரோ, அவர் மீது நீயும் சிரமத்தை ஏற்படுத்துவாயாக! என் உம்மத்தினரின் காரியங்களில் எதையேனும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று, அவர்களிடம் மென்மையாக நடந்துகொள்கிறாரோ, அவர் மீது நீயும் மென்மையாக நடப்பாயாக!'"