அபூ மூஸா (ரழி) அவர்கள் உமர் (ரழி) அவர்களின் வீட்டு வாசலுக்கு வந்து (நுழைய) அனுமதி கேட்டார்கள். உமர் (ரழி) அவர்கள், "இது ஒரு முறை" என்றார்கள். பிறகு இரண்டாவது முறையாக அனுமதி கேட்டார்கள். உமர் (ரழி) அவர்கள், "இது இரண்டு முறை" என்றார்கள். பிறகு மூன்றாவது முறையாக அனுமதி கேட்டார்கள். உமர் (ரழி) அவர்கள், "இது மூன்று முறை" என்றார்கள்.
பிறகு அவர் (அபூ மூஸா) திரும்பிச் சென்றார்கள். உடனே உமர் (ரழி) அவரைப் பின்தொடர்ந்து (ஆளனுப்பி) அவரைத் திருப்பியழைத்து, "இது நீர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனப்பாடம் செய்த விஷயம் என்றால் சரி (நிரூபியும்); இல்லையெனில் உம்மை நான் (பிறருக்கு) ஒரு படிப்பினையாக ஆக்குவேன்" என்று கூறினார்கள்.
அபூ ஸயீத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: பிறகு அவர் (அபூ மூஸா) எங்களிடம் வந்து, "அனுமதி (கேட்பது) மூன்று முறைதான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் அறியவில்லையா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் சிரிக்கலாயினர். (அப்போது) நான், "உங்கள் முஸ்லிம் சகோதரர் திடுக்கிட்ட நிலையில் உங்களிடம் வந்திருக்க, நீங்கள் சிரிக்கிறீர்களா? (அபூ மூஸாவே!) வாருங்கள்! (உமக்குக் கிடைக்கவிருக்கும்) இந்தத் தண்டனையில் நானும் உமக்குக் கூட்டாளிதான்" என்று சொன்னேன்.
அவ்வாறே அவர் (உமர் அவர்களிடம்) சென்று, "இதோ அபூ ஸயீத் (வந்துள்ளார்)" என்று கூறினார்.