அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக, உயர்ந்தவனும் மகிமை மிக்கவனுமாகிய அல்லாஹ் மறுமை நாளில் கூறுவான்: ஆதமுடைய மகனே, நான் நோயுற்றிருந்தேன், ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை.
அவன் கூறுவான்: என் இறைவனே; நீ அகிலங்களின் அதிபதியாக இருக்க, நான் உன்னை எப்படி நலம் விசாரிக்க முடியும்?
அப்போது அல்லாஹ் கூறுவான்: என்னுடைய இன்ன அடியான் நோயுற்றிருந்தான் என்பதும், நீ அவனை நலம் விசாரிக்க வரவில்லை என்பதும் உனக்குத் தெரியாதா? மேலும், நீ அவனை நலம் விசாரித்திருந்தால், என்னை அவனிடம் கண்டிருப்பாய் என்பதும் உனக்குத் தெரியாதா?
ஆதமுடைய மகனே, நான் உன்னிடம் உணவு கேட்டேன், ஆனால் நீ எனக்கு உணவளிக்கவில்லை.
அவன் கூறுவான்: என் இறைவனே, நீ அகிலங்களின் அதிபதியாக இருக்க, நான் உனக்கு எப்படி உணவளிக்க முடியும்?
அல்லாஹ் கூறினான்: என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் உணவு கேட்டான் என்பதும், நீ அவனுக்கு உணவளிக்கவில்லை என்பதும் உனக்குத் தெரியாதா? மேலும், நீ அவனுக்கு உணவளித்திருந்தால், அவனை என் பக்கத்தில் கண்டிருப்பாய் என்பதும் உனக்குத் தெரியாதா?
(மீண்டும் இறைவன் கூறுவான்: ) ஆதமுடைய மகனே, நான் உன்னிடம் குடிநீர் கேட்டேன், ஆனால் நீ எனக்குக் கொடுக்கவில்லை.
அவன் கூறுவான்: என் இறைவனே, நீ அகிலங்களின் அதிபதியாக இருக்க, நான் உனக்கு எப்படி கொடுக்க முடியும்?
அப்போது அல்லாஹ் கூறுவான்: என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் குடிநீர் கேட்டான், ஆனால் நீ அவனுக்குக் கொடுக்கவில்லை. நீ அவனுக்குக் குடிநீர் கொடுத்திருந்தால், அவனை என் அருகில் கண்டிருப்பாய்.