அல்-முகீரா பின் ஷுஃபா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூஸா (அலை) அவர்கள் தம் இறைவனிடம், "என் இறைவா! சொர்க்கவாசிகளில் மிகக் குறைந்த அந்தஸ்து உடையவர் யார்?" என்று கேட்டார்கள்.
அதற்கவன் (அல்லாஹ்) கூறினான்: "அவர் ஒரு மனிதர்; சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைக்கப்பட்ட பிறகு அவர் வருவார். அவரிடம், 'சொர்க்கத்தில் நுழைவீராக!' என்று கூறப்படும். அதற்கு அவர், 'என் இறைவா! மக்கள் தங்கள் இருப்பிடங்களில் தங்கி, தங்கள் பங்குகளைப் பெற்றுக்கொண்ட பிறகு நான் எவ்வாறு (நுழைவது)?' என்று கேட்பார்.
அவரிடம், 'இவ்வுலக அரசர்களில் ஒரு அரசனுடைய இராஜ்ஜியத்தைப் போன்று உமக்குக் கிடைப்பதை நீர் விரும்புகிறீரா?' என்று கேட்கப்படும். அதற்கு அவர், 'என் இறைவா! நான் திருப்தி அடைகிறேன்' என்று கூறுவார்.
அப்போது இறைவன், 'உமக்கு அதுவும், அதைப் போன்றதும், அதைப் போன்றதும், அதைப் போன்றதும், அதைப் போன்றதும் உண்டு' என்று கூறுவான். ஐந்தாவது முறை அவர், 'என் இறைவா! நான் திருப்தி அடைகிறேன்' என்று கூறுவார்.
இறைவன் கூறுவான்: 'இது உமக்கு உண்டு; இதைப் போன்று பத்து மடங்கும் உண்டு. மேலும், உமது மனம் விரும்புவதும், உமது கண் இன்புறுவதும் உமக்கு உண்டு.' அதற்கு அவர், 'என் இறைவா! நான் திருப்தி அடைகிறேன்' என்று கூறுவார்."
(மூஸா (அலை) அவர்கள்), "இறைவா! அவர்களில் மிக உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் யார்?" என்று கேட்டார்கள்.
இறைவன் கூறினான்: "அவர்கள் நான் தேர்ந்தெடுத்தவர்கள் ஆவார்கள். அவர்களின் கண்ணியத்தை என் கரத்தாலேயே நட்டேன். அதன் மீது முத்திரையிட்டேன். எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றிராத (இன்பங்களை அவர்களுக்காகத் தயார் செய்து வைத்துள்ளேன்)."
இதற்குச் சான்று, கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது:
"ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களுக்குக் கூலியாக அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறியாது" (திருக்குர்ஆன் 32:17).