அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் (ஒரு செய்தியை) விவரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி (அஃராபி) அவர்களுடன் அமர்ந்திருந்தார். (நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) "சொர்க்கவாசிகளில் ஒருவர் பயிரிடுவதற்குத் தம் இறைவனிடம் அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், 'நீர் விரும்பிய (அனைத்து இன்பகரமான) நிலையில் இருக்கவில்லையா?' என்று கேட்பான். அதற்கு அவர், 'ஆம்! (இருக்கிறேன்.) எனினும், நான் பயிரிடுவதை விரும்புகிறேன்' என்று கூறுவார். (இறைவன் அனுமதித்ததும்) உடனே அவர் விதைகளைத் தூவுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அது முளைத்து, வளர்ந்து சீராகி, அறுவடைக்குத் தயாராகி மலைகளைப் போன்று ஆகிவிடும். அப்போது அல்லாஹ், 'ஆதமின் மகனே! இதோ எடுத்துக்கொள்; நிச்சயமாக எதுவும் உன்னைத் திருப்திப்படுத்தாது (உனது ஆசைகளுக்கு முடிவே இல்லை)' என்று கூறுவான்."
(இதைக் கேட்ட) அந்த கிராமவாசி (அஃராபி), "அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த ஆசை கொண்ட) அவர் குறைஷியாகவோ அல்லது அன்சாரியாகவோதான் இருப்பார். ஏனெனில் அவர்கள்தாம் விவசாயம் செய்பவர்கள். நாங்களோ விவசாயம் செய்பவர்கள் அல்லர்" என்று கூறினார். (இதைக் கேட்டு) நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.