ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்கர் (ரழி) அவர்களும் பனூ சலமா (குடியிருப்பில்) இருந்த என்னை (நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில்) நலம் விசாரிப்பதற்காக நடந்தே வந்தார்கள். அப்போது நான் சுயநினைவின்றி இருப்பதைக் கண்டார்கள். நபியவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி உளூச் செய்தார்கள். பிறகு (அந்த உளூவின்) தண்ணீரிலிருந்து என் மீது தெளித்தார்கள். நான் தெளிவடைந்து (சுயநினைவு பெற்றேன்). நான், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! எனது சொத்து (பங்கீடு) விஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டேன். அப்போது, "யூஸீகுமுல்லாஹு ஃபீ அவ்லாதி(க்)கும் லித்(த்)தகரி மிஸ்லு ஹழ்ழி ல்உன்ஸயைனி" (பொருள்: "அல்லாஹ் உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்: ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களின் பங்கிற்குச் சமமான பங்கு உண்டு") எனும் (திருக்குர்ஆன் 4:11) இறைவசனம் அருளப்பட்டது.