அபு ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதர் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தபோது, பாதையில் ஒரு முள் கிளையைக் கண்டு அதை அகற்றினார். அல்லாஹ் அவருடைய செயலை அங்கீகரித்து அவரை மன்னித்தான்.” பிறகு அவர்கள் கூறினார்கள்: “ஷஹீத்கள் (உயிர்த்தியாகிகள்) ஐவர் ஆவர்: பிளேக் (கொள்ளை) நோயால் இறந்தவர், வயிற்று நோயால் இறந்தவர், நீரில் மூழ்கி இறந்தவர், இடிபாடுகளில் சிக்கி இறந்தவர் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்.” மேலும் அவர்கள் கூறினார்கள்: “தொழுகை அறிவிப்புச் செய்வதிலும் (பாங்கு), (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையில் நிற்பதிலும் உள்ள நன்மையை மக்கள் அறிந்திருந்து, சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் சீட்டுக் குலுக்கியும் பார்ப்பார்கள். (நண்பகல்)த் தொழுகைக்கு (வெயிலிலேயே) முன்னதாகவே செல்வதிலுள்ள நன்மையை அவர்கள் அறிந்திருந்தால், அதற்காக அவர்கள் விரைந்து செல்வார்கள். இஷா மற்றும் சுப்ஹ் (ஃபஜ்ர்) தொழுகைகளில் உள்ள நன்மையை அவர்கள் அறிந்திருந்தால், தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு வந்து சேர்வார்கள்.”