அப்துல்லாஹ் பின் மாலிக் பின் புஹைனா அல்-அஸ்தி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது, அவர்களின் அக்குள்களை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தங்களின் கைகளை மிகவும் அகலமாக விரித்து வைப்பார்கள். (இதன் கீழ் அறிவிப்பாளர் இப்னு புகைய்ர் அவர்கள், "அவர்களின் அக்குள்களின் வெண்மை" என்று கூறினார்கள்.)
அப்துல்லாஹ் இப்னு மாலிக் இப்னு புஹைனா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தொழும்போது, அவர்களின் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவுக்குத் தமது கைகளை விரித்து வைப்பார்கள்.
பனூ அப்துல் முத்தலிப் குலத்தாரின் ஒப்பந்த நண்பரான அப்துல்லாஹ் பின் புஹைனா அல்அஸதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் (இரண்டாவது ரக்அத்தில்) அமருவதற்குப் பதிலாக எழுந்துவிட்டார்கள். தொழுகையை நிறைவு செய்தபோது, ஸலாம் கொடுப்பதற்கு முன்னால் அமர்ந்தவாறே இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள். ஒவ்வொரு ஸஜ்தாவிலும் தக்பீர் கூறினார்கள். மக்களும் அவர்களுடன் ஸஜ்தாச் செய்தார்கள். தாம் மறந்த அந்த அமர்வுக்குப் பகரமாக (இந்த ஸஜ்தாக்களை)ச் செய்தார்கள்.