ஆமிர் இப்னு சஅத் அவர்கள் அறிவிக்கிறார்கள்: சஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அவர்களுடைய ஒட்டகங்களுக்கு மத்தியில் இருந்தார்கள். அப்போது அவர்களுடைய மகன் உமர் அவர்களிடம் வந்தார்கள். சஅத் (ரழி) அவர்கள் அவரைக் கண்டதும் கூறினார்கள்:
இந்த வாகனத்தில் வருபவரின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். உமர் கீழே இறங்கியதும், சஅத் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்: நீங்கள் உங்களுடைய ஒட்டகங்கள் மற்றும் ஆடுகளுடன் மும்முரமாக இருக்கிறீர்கள். மேலும், ஆட்சிப் பொறுப்புக்காக தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் மக்களை நீங்கள் கைவிட்டுவிட்டீர்கள். சஅத் (ரழி) அவர்கள் தம் மார்பில் தட்டிவிட்டு கூறினார்கள்: அமைதியாக இருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: அல்லாஹ் இறையச்சமுள்ள, தன்னிறைவு பெற்றவராகவும், (மக்களின் பார்வையிலிருந்து) மறைந்திருப்பவராகவும் உள்ள அடியானை நேசிக்கிறான்.