حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ رَأَى عُمَرُ حُلَّةً عَلَى رَجُلٍ تُبَاعُ فَقَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم ابْتَعْ هَذِهِ الْحُلَّةَ تَلْبَسْهَا يَوْمَ الْجُمُعَةِ وَإِذَا جَاءَكَ الْوَفْدُ. فَقَالَ " إِنَّمَا يَلْبَسُ هَذَا مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ ". فَأُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْهَا بِحُلَلٍ فَأَرْسَلَ إِلَى عُمَرَ مِنْهَا بِحُلَّةٍ. فَقَالَ عُمَرُ كَيْفَ أَلْبَسُهَا وَقَدْ قُلْتَ فِيهَا مَا قُلْتَ قَالَ " إِنِّي لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا، تَبِيعُهَا أَوْ تَكْسُوهَا ". فَأَرْسَلَ بِهَا عُمَرُ إِلَى أَخٍ لَهُ مِنْ أَهْلِ مَكَّةَ قَبْلَ أَنْ يُسْلِمَ.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
உமர் (ரழி) அவர்கள், ஒரு மனிதர் விற்பனைக்கு வைத்திருந்த ஓர் அங்கியைப் பார்த்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்களிடம், "இந்த அங்கியை விலைக்கு வாங்குங்கள்; வெள்ளிக்கிழமையிலும், தங்களிடம் தூதுக் குழுவினர் வரும்போதும் இதை நீங்கள் அணிந்துகொள்ளலாம்" என்று கூறினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(ஆண்களுக்குத் தடை செய்யப்பட்ட) இதை மறுமையில் (நற்பாக்கியத்தில்) எந்தப் பங்கும் இல்லாதவரே அணிவார்" என்று கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அதுபோன்ற பல அங்கிகள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் ஒன்றை உமர் (ரழி) அவர்களுக்கு அவர்கள் கொடுத்தனுப்பினார்கள்.
உமர் (ரழி) அவர்கள், "(இதைப்பற்றி) தாங்கள் கூறியதைக் கூறியிருக்க, நான் எப்படி இதை அணிவது?" என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இதை நீர் அணிந்துகொள்வதற்காக உமக்கு நான் அளிக்கவில்லை; இதை நீர் விற்றுவிடலாம்; அல்லது (பிறருக்கு) அணியக் கொடுக்கலாம்" என்று கூறினார்கள்.
ஆகவே, உமர் (ரழி) அவர்கள், மக்காவிலிருந்த தம் சகோதரர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு அவருக்கு அதை அனுப்பிவைத்தார்கள்.
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ ـ رضى الله عنه ـ رَأَى حُلَّةً سِيَرَاءَ تُبَاعُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَوِ ابْتَعْتَهَا، تَلْبَسُهَا لِلْوَفْدِ إِذَا أَتَوْكَ وَالْجُمُعَةِ. قَالَ " إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ ". وَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ بَعْدَ ذَلِكَ إِلَى عُمَرَ حُلَّةَ سِيَرَاءَ حَرِيرٍ، كَسَاهَا إِيَّاهُ فَقَالَ عُمَرُ كَسَوْتَنِيهَا وَقَدْ سَمِعْتُكَ تَقُولُ فِيهَا مَا قُلْتَ فَقَالَ " إِنَّمَا بَعَثْتُ إِلَيْكَ لِتَبِيعَهَا أَوْ تَكْسُوَهَا ".
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
உமர் (ரழி) அவர்கள் ஒரு சீராய்ப் பட்டு அங்கி (கோடிட்ட பட்டு ஆடை) விற்கப்படுவதைக் கண்டார்கள். எனவே அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! தாங்கள் இதை ஏன் வாங்கக்கூடாது? தங்களிடம் தூதுக்குழுவினர் வரும்போதும், மேலும் வெள்ளிக்கிழமைகளிலும் தாங்கள் இதை அணிந்துகொள்வதற்காக (இது அழகாக இருக்குமே)?" நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "மறுமையில் எவருக்கு எந்தப் பங்கும் இல்லையோ அவரே இதை அணிவார்." அதன்பிறகு நபி (ஸல்) அவர்கள் உமர் (ரழி) அவர்களுக்கு ஒரு சீராய்ப் பட்டு அங்கியினை (பரிசாக) அனுப்பினார்கள். உமர் (ரழி) அவர்கள் (ஆச்சரியத்துடன்) கூறினார்கள், "தாங்கள் இதை எனக்கு (அணிவதற்காக) வழங்கியுள்ளீர்கள், ஆயினும், இதைப்பற்றி தாங்கள் (முன்னர்) கூறியதை நான் கேட்டுள்ளேனே?" நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நீங்கள் இதை விற்றுவிடுவதற்காகவோ அல்லது வேறு எவருக்காவது அணிவிப்பதற்காகவோதான் நான் உங்களுக்கு இதை அனுப்பினேன்."
உமர் (ரழி) அவர்கள், 'ஸியரா' (ஒரு வகை பட்டு ஆடை) ஒன்று விற்கப்படுவதைக் கண்டு, "அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் விலைக்கு வாங்கி, வெள்ளிக்கிழமைகளிலும், தங்களிடம் தூதுக் குழுவினர் வரும்போதும் அணிந்து கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "மறுமையில் எவருக்கு (நற்பேறு) இல்லையோ அவரே இதை அணிவார்" என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்களுக்கு அது போன்ற சில ஆடைகள் (அன்பளிப்பாக) வந்தன. அவற்றில் ஒன்றை அவர்கள் உமர் (ரழி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். அதற்கு உமர் (ரழி), "இதைக் குறித்து தாங்கள் கூறியதைக் கூறிய நிலையில், நான் எவ்வாறு இதை அணிவேன்?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "நான் இதை நீங்கள் அணிவதற்காக உங்களுக்குத் தரவில்லை; மாறாக, இதை நீங்கள் விற்பதற்கோ அல்லது வேறொருவர் அணிவதற்காகக் கொடுப்பதற்கோதான் கொடுத்தேன்" என்று கூறினார்கள்.
ஆகவே, உமர் (ரழி) அவர்கள், மக்கா வாசிகளில் ஒருவராக இருந்த - இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் நிலையிலிருந்த - தன் சகோதரர் ஒருவருக்கு அதை அனுப்பி வைத்தார்கள்.
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ مَلِكَ الرُّومِ، أَهْدَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مُسْتَقَةً مِنْ سُنْدُسٍ فَلَبِسَهَا فَكَأَنِّي أَنْظُرُ إِلَى يَدَيْهِ تَذَبْذَبَانِ ثُمَّ بَعَثَ بِهَا إِلَى جَعْفَرٍ فَلَبِسَهَا ثُمَّ جَاءَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنِّي لَمْ أُعْطِكَهَا لِتَلْبَسَهَا . قَالَ فَمَا أَصْنَعُ بِهَا قَالَ أَرْسِلْ بِهَا إِلَى أَخِيكَ النَّجَاشِيِّ .
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ரோமப் பேரரசர், நபி (ஸல்) அவர்களுக்குச் சிறந்த பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அதை அவர்கள் அணிந்தார்கள். (அதை அணிந்திருந்தபோது) அவர்களின் கைகள் அசைந்தாடுவதை நான் பார்ப்பது போன்றுள்ளது. பின்னர் அதை ஜஃபர் (ரழி) அவர்களுக்கு அனுப்பினார்கள். அவர்கள் அதை அணிந்துகொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "இதை நீங்கள் அணிவதற்காக உங்களுக்கு நான் கொடுக்கவில்லை" என்று கூறினார்கள். அவர்கள், "நான் இதை என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இதை உங்கள் சகோதரர் நஜ்ஜாஷிக்கு அனுப்பிவிடுங்கள்" என்று கூறினார்கள்.