"மக்கள் தொடர்ந்து (கேள்வி கேட்டுக்கொண்டே) இருப்பார்கள்..." (என்று தொடங்கும் இந்த ஹதீஸ்,) அப்துல் வாரிஸ் அவர்கள் அறிவித்த ஹதீஸைப் போன்றே உள்ளது. ஆனால் இவர் (அறிவிப்பாளர் தொடரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் குறிப்பிடவில்லை. எனினும் ஹதீஸின் இறுதியில், "அல்லாஹ்வும் அவனது தூதரும் உண்மையையே உரைத்தனர்" என்று குறிப்பிட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "அபூஹுரைராவே! 'இதை அல்லாஹ் (படைத்தான்); அப்படியென்றால் அல்லாஹ்வை யார் படைத்தது?' என்று மக்கள் கூறும் வரை உன்னிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள்" என்று கூறினார்கள்.
(மேலும்) அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்: "நான் பள்ளவாசலில் இருந்தபோது, கிராமப்புற அரபியர்களில் சிலர் என்னிடம் வந்து, 'அபூஹுரைராவே! இதை அல்லாஹ் (படைத்தான்); அப்படியென்றால் அல்லாஹ்வை யார் படைத்தது?' என்று கேட்டனர். (இதைக்கேட்ட) நான், ஒரு கைப்பிடி சிறுகற்களை எடுத்து அவர்கள் மீது வீசினேன். பிறகு, 'எழுந்து செல்லுங்கள்! எழுந்து செல்லுங்கள்! என் உற்ற தோழர் (நபி (ஸல்) அவர்கள்) உண்மையே உரைத்தார்கள்' என்று கூறினேன்."
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மக்கள் உங்களிடம் எல்லாவற்றையும் பற்றி நிச்சயமாகக் கேட்பார்கள். அவர்கள், 'அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் படைத்தான்; அப்படியாயின் அவனைப் படைத்தது யார்?' என்று கூறும் வரை."