"வ அன்ழிர் அஷீரத(க்)கல் அக்ரபீன்" (மேலும், உமது நெருங்கிய உறவினர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!) எனும் இறைவசனம் அருளப்பட்டபோது, நபி (ஸல்) அவர்கள் ஸஃபா (மலை) மீது ஏறி, "யா பனீ ஃபிஹ்ர்! யா பனீ அதி!" என்று குறைஷிக் குலத்தாரை அவர்கள் ஒன்று கூடும் வரை அழைக்கலானார்கள். (அப்போது ஒருவரால்) வெளியே செல்ல முடியாவிட்டால், அது என்னவென்று பார்த்து வரத் தன் தூதரை அனுப்பினார். அபூலஹபும் குறைஷியரும் வந்தனர்.
நபி (ஸல்) அவர்கள், "நான் உங்களிடம், இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப்படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் நடத்தக் காத்திருக்கிறது என்று தெரிவித்தால், நீங்கள் என்னை நம்புவீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "ஆம்; உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் கண்டதில்லை" என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால், கடுமையான வேதனை ஒன்று (வருவதற்கு) முன்னால், நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்பவன் ஆவேன்" என்று கூறினார்கள்.
அப்போது அபூலஹப், "தப்பன் லக்க ஸாஇரல் யவ்ம்" (உனக்கு இந்நாள் முழுவதும் கேடு உண்டாகட்டும்!) இதற்காகவா எங்களை ஒன்று திரட்டினாய்?" என்று கூறினான். அப்போது, "தப்பத் யதா அபீ லஹபிவ் வதப்ப * மா அக்னா அன்ஹு மாலுஹு வமா கஸப்" (அபூலஹபின் இரு கரங்களும் நாசமடையட்டும்; அவனும் நாசமடைந்தான். அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படாது) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலையின் மீது ஏறி, "யா ஸபாஹாஹ்!" என்று கூறினார்கள்.
குறைஷிகள் அவரிடம் ஒன்று கூடி, "உமக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் கூறுங்கள்! காலையிலோ அல்லது மாலையிலோ எதிரி உங்களைத் தாக்கப் போகிறான் என்று நான் உங்களிடம் சொன்னால், நீங்கள் என்னை நம்புவீர்களா?" என்று கேட்டார்கள்.
அவர்கள், "ஆம்" என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக நான் ஒரு கடுமையான வேதனைக்கு முன்னால் உங்களுக்கு எச்சரிக்கை செய்பவன் ஆவேன்" என்று கூறினார்கள்.
அப்போது அபூ லஹப், "நீ நாசமாகப் போ! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?" என்று கூறினான்.
எனவே அல்லாஹ் அருளினான்: '{தப்பத் யதா அபீ லஹப்}' (அபூ லஹபின் இரு கைகளும் நாசமாகட்டும்).
{வ அன்ழிர் அஷீரத்கல் அக்ரபீன்} "(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை நீர் எச்சரிப்பீராக!" (26:214) எனும் வசனமும், "உம்முடைய கூட்டத்தாரில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும் (எச்சரிப்பீராக)" (எனும் வாசகமும்) அருளப்பெற்றபோது,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டை விட்டு) வெளியேறி, "அஸ்-ஸஃபா" குன்றின் மீது ஏறினார்கள்; பிறகு "யா ஸபாஹா!" (ஆபத்து! ஆபத்து!) என்று சப்தமிட்டார்கள்.
(மக்கள்) "யார் இது?" என்று வினவினர். உடனே அவர்கள் நபியவர்களைச் சுற்றி ஒன்று கூடினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "சொல்லுங்கள்! இந்த மலையின் அடிவாரத்திலிருந்து ஒரு குதிரைப்படை புறப்பட்டு (உங்களைத் தாக்க) வருகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்புவீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "உம்மிடம் நாங்கள் பொய்யை அனுபவித்ததில்லை" என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால், கடுமையான வேதனை ஒன்று (வருவதற்கு) முன்பாக, நான் உங்களை எச்சரிப்பவனாக இருக்கிறேன்" என்று கூறினார்கள்.
அபூலஹப், "நீ நாசமாகப் போ! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?" என்று கூறினான்.
பிறகு அவன் எழுந்து சென்றான். அப்போது, {தப்பத் யதா அபீ லஹபிவ் வதப்ப} "அபூலஹபின் இரு கைகளும் நாசமாகட்டும்; அவனும் நாசமாகட்டும்" (எனும் 111-வது அத்தியாயம்) அருளப்பெற்றது.
(அறிவிப்பாளர்) அஃமஷ் அவர்கள் அந்நாளில் (இவ்வசனத்தை) ஓதும்போது "வ கத் தப்ப" (அவன் நாசமாகிவிட்டான்) என்று ஓதினார்கள்.