அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"தொழுகை நிறைவுபெறும் இறுதி அமர்வில் (அதாவது, இறுதி அத்தஹிய்யாத்தில்) நபி (ஸல்) அவர்கள் இருந்தால், தங்களின் இடது காலை (வலது காலுக்குக் கீழ்) வெளியேற்றி, தமது இடது புட்டத்தின் மீது 'முதவரிக்கன்' (இடது காலை வலது காலுக்குக் கீழ் நீட்டி அமரும்) நிலையில் அமர்வார்கள்; பின்னர் அவர்கள் ஸலாம் கொடுப்பார்கள்."
அபூ ஹுமைத் அஸ்-ஸாஇதீ (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பத்துத் தோழர்கள் மத்தியில் இருந்தபோது (பின்வருமாறு) கூறினார்கள். அ(ந்தப் பத்துத் தோழர்களான)வர்களில் அபூ கதாதா பின் ரிப்ஈ (ரலி) அவர்களும் ஒருவராவார்.
(அபூ ஹுமைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி உங்களில் நானே அதிகம் அறிந்தவன். நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றபோது, நேராக நின்றுகொண்டு, தம் கைகளைத் தோள்களுக்கு இணையாக உயர்த்தினார்கள்; பின்னர் ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறினார்கள். அவர்கள் ருகூஉ செய்ய நாடியபோது, தம் கைகளைத் தோள்களுக்கு இணையாக உயர்த்தினார்கள். ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதாஹ்’ (தன்னைப் புகழ்வோரை அல்லாஹ் செவியேற்கிறான்) என்று கூறியபோது, தம் கைகளை உயர்த்தி நேராக நின்றார்கள். இரண்டு ரக்அத்துகளிலிருந்து (அத்தஹிய்யாத் இருப்பை முடித்து) எழுந்தபோது, தொழுகையைத் தொடங்கியபோது செய்தது போலவே, ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறி, தம் கைகளைத் தோள்களுக்கு இணையாக உயர்த்தினார்கள்.”