நான் குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஒரு சபையினருடன் அமர்ந்திருந்தேன். அப்போது தலைமுடி, உடை மற்றும் தோற்றத்தில் கரடுமுரடான ஒரு மனிதர் வந்து, அவர்கள் முன் நின்று சலாம் கூறினார். பிறகு, "செல்வத்தைச் சேமித்து வைப்பவர்களிடம், நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்ட பாறாங்கற்களைக் கொண்டு (அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என) நற்செய்தி கூறுவீராக! அது அவர்களின் முலைக் காம்பின் மீது வைக்கப்பட்டு, தோள்பட்டை எலும்பு வழியாக வெளியேறும். (பிறகு) அவர்களின் தோள்பட்டை எலும்பின் மீது வைக்கப்பட்டு, முலைக் காம்பு வழியாக வெளியேறும். அது (உடலுக்குள்) ஆடிக்கொண்டிருக்கும்" என்று கூறினார்.
பிறகு அவர் திரும்பிச் சென்று ஒரு தூணின் அருகே அமர்ந்தார். நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவர் அருகே அமர்ந்தேன். அவர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. நான் அவரிடம், "நீங்கள் கூறியதை அந்த மக்கள் வெறுத்ததாகவே நான் கருதுகிறேன்" என்றேன்.
அதற்கு அவர், "இவர்களுக்கு எதுவும் விளங்கவில்லை" என்று கூறிவிட்டு, "என்னுடைய உற்ற நண்பர் என்னிடம் கூறினார்" என்றார்.
நான், "யார் உங்கள் உற்ற நண்பர்?" என்று கேட்டேன்.
அதற்கு அவர், "நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), 'ஓ அபூ தர்! உஹுத் மலையை நீர் பார்க்கிறீரா?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னை ஏதேனும் வேலைக்கு அனுப்பப் போகிறார்கள் என நான் எண்ணியவனாய், பகலில் இன்னும் எவ்வளவு நேரம் எஞ்சியிருக்கிறது என்று சூரியனைப் பார்த்தவாறே, 'ஆம் (பார்க்கிறேன்)' என்றேன்.
அவர்கள், 'மூன்று தீனார்களைத் தவிர, என்னிடம் உஹுத் மலையளவு தங்கம் இருந்து, அதை நான் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்வதையே விரும்புவேன்' என்று கூறினார்கள். (ஆனால்) இவர்களோ எதையும் விளங்குவதில்லை; உலகச் செல்வத்தையே சேகரிக்கின்றனர். இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை நான் இவர்களிடம் உலக (ஆதாயத்)தைக் கேட்கவும் மாட்டேன்; இவர்களிடம் மார்க்கத் தீர்ப்பைக் கேட்கவும் மாட்டேன்" என்று கூறினார்.