அப்துல்லாஹ் பின் அபூ கத்தாதா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்; அவர்களுடைய தந்தை (அபூ கத்தாதா (ரழி)) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டார்கள்; (அவருடன்) மக்களும் புறப்பட்டார்கள். (வழியில்) நபி (ஸல்) அவர்கள் தங்களில் ஒரு சாராரைத் திருப்பி (வேறொரு பாதையில் செல்லுமாறு) அனுப்பினார்கள். அவர்களில் அபூ கத்தாதா (ரழி) அவர்களும் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "நாம் (மீண்டும்) சந்திக்கும் வரை நீங்கள் கடற்கரை ஓரமாகச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் கடற்கரைப் பாதையை மேற்கொண்டார்கள்.
அவர்கள் (நபி (ஸல்) அவர்களை விட்டுப்) பிரிந்தபோது, அபூ கத்தாதா (ரழி) அவர்களைத் தவிர மற்ற அனைவரும் இஹ்ராம் அணிந்திருந்தார்கள்; (ஆனால்) அவர் இஹ்ராம் அணியவில்லை. அவர்கள் சென்று கொண்டிருந்தபோது காட்டுக்கழுதைக் கூட்டத்தைக் கண்டார்கள். அபூ கத்தாதா (ரழி) அக்கழுதைகள் மீது பாய்ந்து, அவற்றில் ஒரு பெண் காட்டுக்கழுதையை (வேட்டையாடி) வீழ்த்தினார்கள். தோழர்கள் இறங்கி அதன் இறைச்சியைச் சாப்பிட்டார்கள். (பிறகு) "நாம் இஹ்ராம் நிலையில் இருக்கும்போது வேட்டைப் பிராணியின் இறைச்சியை உண்ணலாமா?" என்று பேசிக்கொண்டார்கள். ஆகவே, அப்பெண் கழுதையின் இறைச்சியில் எஞ்சியதைச் சுமந்து கொண்டார்கள்.
அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இஹ்ராம் அணிந்திருந்தோம். அபூ கத்தாதா இஹ்ராம் அணியவில்லை. நாங்கள் காட்டுக்கழுதைகளைக் கண்டோம். அபூ கத்தாதா அவற்றின் மீது பாய்ந்து, அவற்றில் ஒரு பெண் காட்டுக்கழுதையை (வேட்டையாடி) வீழ்த்தினார். நாங்கள் இறங்கி அதன் இறைச்சியிலிருந்து சாப்பிட்டோம். பிறகு, 'நாம் இஹ்ராம் நிலையில் இருக்கும்போது வேட்டைப் பிராணியின் இறைச்சியை உண்ணலாமா?' என்று (பேசிக்) கொண்டோம். ஆகவே, அதன் இறைச்சியில் எஞ்சியதைச் சுமந்து வந்துள்ளோம்" என்று கூறினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதை வேட்டையாடும்படி உங்களில் எவரேனும் அவருக்குக் கட்டளையிட்டீர்களா? அல்லது அதைச் சுட்டிக்காட்டினீர்களா?" என்று கேட்டார்கள். அவர்கள் "இல்லை" என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால், அதன் இறைச்சியில் எஞ்சியதை உண்ணுங்கள்" என்று கூறினார்கள்.