`அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
பத்ரு போரின்போது நான் அணிவகுப்பில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது என் வலப்புறமும் இடப்புறமும் பார்த்தேன். அங்கே இளவயதுடைய அன்சாரிச் சிறுவர்கள் இருவர் நிற்பதைக் கண்டேன். "இவர்களைவிடப் பலசாலிகளுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா?" என்று நான் ஆசைப்பட்டேன்.
அப்போது அவர்களில் ஒருவர் என்னை மெதுவாக இடித்து, "என் பெரிய தந்தையே! உங்களுக்கு அபூஜஹ்லைத் தெரியுமா?" என்று கேட்டார். அதற்கு நான், "ஆம்; என் சகோதரரின் மகனே! அவனிடம் உனக்கு என்ன வேலை?" என்று கேட்டேன்.
அதற்கு அவர், "அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஏசுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவனை நான் கண்டால், நம்மில் யாருக்கு மரணம் முந்துகிறதோ அவர் மடியும் வரை எனது உடல் (நிழல்) அவன் உடலை (நிழலை) விட்டுப் பிரியாது" என்று கூறினார். இதைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன். பிறகு மற்றவரும் என்னை மெதுவாக இடித்து, இதையே என்னிடம் கூறினார்.
சிறிது நேரத்திற்குள், அபூஜஹ்ல் மக்கள் மத்தியில் சுற்றித் திரிவதை நான் கண்டேன். உடனே நான் (அவர்களிடம்), "இதோ! இவர்தாம் நீங்கள் என்னிடம் விசாரித்த உங்கள் ஆள்" என்று கூறினேன்.
உடனே அவர்கள் இருவரும் தங்கள் வாள்களால் அவனை நோக்கிப் பாய்ந்து, அவனை வெட்டிக் கொன்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (இச்செய்தியைத்) தெரிவித்தார்கள். அப்போது அவர், "உங்களில் யார் அவனைக் கொன்றது?" என்று கேட்டார். அவர்கள் இருவரும், "நான்தான் அவனைக் கொன்றேன்" என்று கூறினர்.
அவர், "உங்கள் வாள்களை நீங்கள் துடைத்துவிட்டீர்களா?" என்று கேட்டார். அவர்கள் "இல்லை" என்றனர். இவ்விரு வாள்களையும் அவர் உற்றுநோக்கிவிட்டு, "நீங்கள் இருவருமே அவனைக் கொன்றுள்ளீர்கள்" என்று கூறினார். (கொல்லப்பட்ட) அவனது உடைமைகளை முஆத் பின் அம்ர் பின் அல்ஜமூஹ் (ரலி) அவர்களுக்கு அளித்தார். அந்த இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி) அவர்களும், முஆத் பின் அம்ர் பின் அல்ஜமூஹ் (ரலி) அவர்களும் ஆவர்.