நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பனீ இஸ்ராயீல் சமுதாயத்தில் ஒரு மனிதர் இருந்தார். அவர் தொண்ணூற்று ஒன்பது மனிதர்களைக் கொன்றிருந்தார். பிறகு அவர் (பாவமன்னிப்புக் குறித்து) விசாரிக்கப் புறப்பட்டார். அவர் ஒரு துறவியிடம் வந்து அவரிடம், ‘(எனக்கு) பாவமன்னிப்பு உண்டா?’ என்று கேட்டார். அதற்கு அத்துறவி ‘இல்லை’ என்றார். உடனே அவரையும் அவர் கொன்றுவிட்டார்.
பிறகு அவர் விசாரிக்கத் தொடங்கினார். அப்போது ஒரு மனிதர் அவரிடம், ‘இன்ன ஊருக்குச் செல்வீராக’ என்றார். (அவர் செல்லும் வழியில்) மரணம் அவரை அடைந்தது. அப்போது அவர் தனது நெஞ்சை அந்த (நல்ல) ஊரின் பக்கம் சாய்த்தார்.
ஆகவே, கருணையின் வானவர்களும் வேதனையின் வானவர்களும் அவர் விஷயத்தில் தர்க்கித்துக்கொண்டனர். அப்போது அல்லாஹ் இந்த (நல்ல) ஊருக்கு ‘நெருங்கி வா’ என்றும், அந்த (தீய) ஊருக்கு ‘தூரமாகச் செல்’ என்றும் வஹி (கட்டளை) அறிவித்தான். மேலும், ‘அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட தூரத்தை அளவிடுங்கள்’ என்று கூறினான். (அளக்கும்போது) அந்த (நல்ல) ஊருக்கு ஒரு சாண் அளவு அவர் நெருக்கமாக இருப்பது காணப்பட்டது. ஆகவே அவர் மன்னிக்கப்பட்டார்.”