அப்துல்லாஹ் பின் கஅப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
கஅப் பின் மாலிக் (ரழி) அவர்களின் புதல்வர்களில், அவர்களுக்குப் பார்வைத்திறன் மங்கியபோது அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் அப்துல்லாஹ் பின் கஅப் ஆவார். அவர் அறிவிப்பதாவது:
தபூக் போரில் கலந்து கொள்ளாமல் தாம் பின்தங்கி விட்டதைப் பற்றி கஅப் பின் மாலிக் (ரழி) அவர்கள் விவரித்ததை நான் செவியுற்றேன். கஅப் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட எந்தப் போரிலும் நான் கலந்து கொள்ளாமல் பின்தங்கியதில்லை; தபூக் போரைத் தவிர. இருப்பினும் நான் பத்ருப் போரிலும் கலந்து கொள்ளவில்லை. (ஆனால்) பத்ருப் போரில் கலந்து கொள்ளாத எவரையும் நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. ஏனெனில், (அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை நாடியே (மதீனாவிலிருந்து) புறப்பட்டார்கள். ஆனால், எவ்வித முன்னேற்பாடுமின்றியே அவர்களையும் அவர்களுடைய எதிரிகளையும் அல்லாஹ் (பத்ரு களத்தில்) ஒன்று சேர்த்துவிட்டான்.
நாங்கள் இஸ்லாத்தின் மீது உறுதியாக இருப்போம் என்று வாக்குறுதியளித்த ‘அகபா’ இரவில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். பத்ருப் போர் மக்களிடையே இதைவிடப் பிரபலமாக இருந்தாலும், அதற்குப் பகரமாக பத்ருப் போரில் கலந்து கொண்டிருப்பதை நான் விரும்பமாட்டேன்.
(தபூக் போரில்) என்னுடைய செய்தி யாதெனில், அப்போரில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டும் பின்தங்கியிருந்தபோது இருந்ததை விட உடல் வலிமை மிக்கவனாகவும், வசதி படைத்தவனாகவும் வேறெப்போதும் இருந்ததில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்கு முன் என்னிடம் ஒருபோதும் இரண்டு வாகனங்கள் (ஒட்டகங்கள்) சேர்ந்திருந்ததில்லை. அப்போருக்காகத் தயாரானபோதுதான் என்னிடம் இரண்டு வாகனங்கள் சேர்ந்திருந்தன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு போருக்குச் செல்ல நாடினால், வேறொன்றை நாடுவதாகக் கூறி (தம் இலக்கை) மறைக்காமல் இருக்க மாட்டார்கள். ஆனால், இந்தப் போரோ (தபூக் போர்), கடுமையான வெப்பத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட போராகும். மிக நீண்ட பயணத்தையும், பெரும் பாலைவனத்தையும், பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே, முஸ்லிம்கள் தங்களின் போருக்கானத் தயாரிப்புகளைச் செய்துகொள்ளும் பொருட்டு, அவர்களுக்குத் தம் பயணத்தின் நோக்கத்தை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள். அவர்கள் செல்லவிருந்த திசையையும் அவர்களுக்கு அறிவித்துவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களின் பெயர்களைப் பதிவு செய்ய எந்தப் பதிவேடும் (ரிஜிஸ்டர்) இருக்கவில்லை.
(போருக்கு வராமல்) மறைந்து கொள்ள விரும்பும் மனிதர், அல்லாஹ்விடமிருந்து வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டாலே தவிர, தாம் மறைந்து கொள்வது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியப்போவதில்லை என்று கருதிக் கொண்டிருப்பார். பழங்கள் கனிந்து, நிழல்கள் இதமாக இருக்கும் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்போர் பயணத்தை மேற்கொண்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து (பயண) ஏற்பாடுகளைச் செய்வதற்காகச் செல்வேன். ஆனால், எவ்வித ஏற்பாடும் செய்யாமல் திரும்பி விடுவேன். ‘என்னால் நினைத்தவுடன் தயாராகிவிட முடியும்’ என்று என் மனதிற்குள் சொல்லிக் கொள்வேன். இவ்வாறே நான் (காலம் தாழ்த்திக் கொண்டே) இருந்தேன். மக்களும் முழு முயற்சியுடன் பயண ஏற்பாடுகளைச் செய்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் ஒரு காலையில் புறப்பட்டு விட்டார்கள். நானோ எனது பயணத்திற்காக எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை. ‘இன்றோ நாளையோ நான் தயாராகிவிட்டு அவர்களைச் சென்றடைந்து விடுவேன்’ என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
அவர்கள் சென்ற பிறகு பயண ஏற்பாடுகளைச் செய்வதற்காக நான் புறப்பட்டேன். ஆனால், எதுவும் செய்யாமலேயே திரும்பினேன். பிறகு (மறுநாளும்) சென்றேன்; எதுவும் செய்யாமலேயே திரும்பினேன். இப்படியே எனக்குத் தாமதமேற்பட்டுக் கொண்டே இருந்தது. (படை சென்ற) வேகம் அதிகரித்து போரும் கை நழுவிவிட்டது. நான் புறப்பட்டுச் சென்று அவர்களை அடைந்துவிடலாமா என்று நினைத்தேன் – அவ்வாறு செய்திருக்கலாமே! – ஆனால், அது எனக்கு விதியில் எழுதப்படவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற பிறகு நான் மக்களிடையே நடமாடியபோது, நிஃபாக்கின் (நயவஞ்சகத்தின்) முத்திரை குத்தப்பட்டவர் அல்லது பலவீனமானவர்கள் என்று அல்லாஹ் சலுகையளித்தவர்களைத் தவிர வேறு யாரையும் (ஊரில்) பார்க்க முடியாதிருந்தது எனக்குக் கவலையளித்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக்கை அடையும் வரை என்னைப் பற்றி நினைவுகூரவில்லை. தபூக்கில் மக்களிடையே அமர்ந்திருந்தபோது, ‘கஅப் என்ன செய்தார்?’ என்று கேட்டார்கள். பனூ ஸலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர், ‘அல்லாஹ்வின் தூதரே! அவருடைய (அழகிய) இரண்டு ஆடைகளும், அவர் தமது தோற்றத்தை (கர்வம் கொண்டு) பார்த்துக் கொண்டதும் அவரைத் தடுத்துவிட்டன’ என்று கூறினார். உடனே முஆத் பின் ஜபல் (ரழி) அவர்கள், ‘நீர் சொன்னது தவறு! அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறியவில்லை’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.
(கஅப் (ரழி) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தபூக்கிலிருந்து) திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்தபோது எனக்குக் கவலை வந்துவிட்டது. ‘நாளை அவர்களின் கோபத்திலிருந்து நான் எப்படித் தப்பிப்பேன்?’ என்று பொய்யான காரணங்களை ஜோடிக்கலானேன். இது குறித்து என் குடும்பத்தாரில் கருத்த் ஆழமிக்க ஒவ்வொருவரிடமும் நான் உதவி தேடிக் கொண்டிருந்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவை) நெருங்கிவிட்டார்கள் என்று கூறப்பட்டபோது, (நான் கற்பனை செய்து வைத்திருந்த) பொய்யான காரணங்கள் அனைத்தும் என்னை விட்டு அகன்றுவிட்டன. ‘பொய்யைக் கொண்டு ஒருபோதும் அவர்களின் கோபத்திலிருந்து நான் தப்ப முடியாது’ என்பதை நான் உணர்ந்து கொண்டேன். எனவே, உண்மையையே பேசுவதென்று நான் முடிவு செய்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். அவர்கள் ஒரு பயணத்திலிருந்து ஊர் திரும்பினால், முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவதையும், பிறகு மக்களைச் சந்திப்பதற்காக அமருவதையும் வழமையாகக் கொண்டிருந்தார்கள். அதன்படியே அவர்கள் செய்தபோது, போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கியவர்கள் அவர்களிடம் வந்து, (தாம் வராததற்கான) காரணங்களைக் கூறி சத்தியம் செய்யலானார்கள். அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்ட ஆண்களாக இருந்தனர். அவர்கள் வெளிப்படையாகக் கூறிய காரணங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டு, அவர்களிடமிருந்து விசுவாசப் பிரமாணமும் பெற்றுக் கொண்டு, அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். அவர்களின் உள்ளத்தில் உள்ளவற்றை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிட்டார்கள்.
பிறகு நான் அவர்களிடம் சென்றேன். நான் அவர்களுக்கு ‘சலாம்’ சொன்னபோது, கோபத்திலிருப்பவர் புன்னகைப்பதைப் போன்று புன்னகைத்தார்கள். பிறகு, ‘இங்கே வா!’ என்றார்கள். நான் நடந்து சென்று அவர்களுக்கு முன்னால் அமர்ந்தேன். ‘நீர் ஏன் பின்தங்கிவிட்டீர்? உமது வாகனத்தை நீர் வாங்கியிருக்கவில்லையா?’ என்று என்னிடம் கேட்டார்கள்.
அதற்கு நான், ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! தங்களைத் தவிர உலகியல் சார்ந்த வேறொருவரிடம் நான் அமர்ந்திருந்தால், ஏதேனும் காரணத்தைச் சொல்லி அவருடைய கோபத்திலிருந்து தப்பித்திருப்பேன். (வாதிட்டுப் பேசும்) வாக்கு வன்மை எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்று தங்களிடம் நான் பொய்யான காரணத்தைச் சொல்லி, (அதன் மூலம்) தங்களை நான் திருப்திப்படுத்தினாலும்கூட, (உண்மையை அறிவித்து) என் மீது தாங்கள் கோபப்படும்படி அல்லாஹ் செய்துவிடுவான் என்பதை நான் அறிவேன். தங்களிடம் நான் உண்மையைச் சொன்னால், தாங்கள் என் மீது கோபப்படுவீர்கள்; இருப்பினும் (நான் உண்மையைச் சொல்வதன் மூலம்) அல்லாஹ்வின் மன்னிப்பை நான் எதிர்பார்க்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! (போருக்கு வராமல் இருந்ததற்கு) என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. நான் தங்களை விட்டும் பின்தங்கியிருந்த அந்த நேரத்தில் இருந்ததை விட, உடல் வலிமை மிக்கவனாகவும் வசதி படைத்தவனாகவும் நான் ஒருபோதும் இருந்ததில்லை’ என்று கூறினேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இவர் உண்மை பேசினார். நீர் எழுந்து செல்லும்! உமது விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை பொறுத்திரும்’ என்று கூறினார்கள்.
நான் எழுந்தேன். பனூ ஸலிமா குலத்தைச் சேர்ந்த சிலர் என்னைப் பின்தொடர்ந்து வந்து, ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதற்கு முன் நீர் எந்தக் குற்றமும் செய்ததாக நாங்கள் அறியவில்லை. போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கிய மற்றவர்கள் சொன்னது போன்று ஏதேனும் ஒரு காரணத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்வதற்கு உமக்கு என்ன தடையிருந்தது? உமது பாவத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாவமன்னிப்புத் தேடுவதே உமக்குப் போதுமானதாக இருந்திருக்குமே!’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் திரும்பிச் சென்று, (முதலில் நான் சொன்னதை மாற்றி) ‘நான் சொன்னது பொய்’ என்று (நபியவர்களிடம்) சொல்லலாமா என்று நினைக்கும் அளவுக்கு அவர்கள் என்னைக் கண்டித்துக் கொண்டேயிருந்தார்கள்.
பிறகு நான் அவர்களிடம், ‘என்னுடன் சேர்த்து வேறு யாருக்கேனும் இவ்வாறு நேர்ந்துள்ளதா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்! இரண்டு நபர்களுக்கு நீர் சொன்னது போன்றே நேர்ந்தது. உமக்குச் சொல்லப்பட்டது போன்றே அவர்களுக்கும் சொல்லப்பட்டது’ என்றார்கள். ‘அவர்கள் யார்?’ என்று நான் கேட்டேன். ‘முராரா பின் அர்பீஉ அல்-அம்ரீ மற்றும் ஹிலால் பின் உமைய்யா அல்-வாக்கிஃபீ’ என்று அவர்கள் பதிலளித்தார்கள். பத்ருப் போரில் கலந்து கொண்ட இரண்டு நல்ல மனிதர்களின் பெயர்களை என்னிடம் அவர்கள் கூறினார்கள். அவர்கள் இருவரிடமும் (எனக்கு) முன்மாதிரி இருந்தது. அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டதும் நான் (எனது முடிவில்) உறுதியாகிவிட்டேன்.
போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கியவர்களில், எங்களைத் தவிர மற்றவர்களிடம் பேசுவதை விட்டும் முஸ்லிம்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்துவிட்டார்கள். எனவே, மக்கள் எங்களைவிட்டு விலகிக் கொண்டார்கள். அல்லது ‘எங்களிடம் அவர்கள் மாறிவிட்டார்கள்’ என்று கூறினார்கள். எனக்குப் பழக்கமான பூமி அந்நியமாகிவிட்டது போல் எனக்குத் தோன்றியது. அந்த நிலையில் நாங்கள் ஐம்பது இரவுகள் கழித்தோம்.
என் இரு தோழர்களும் தளர்ந்து போய், அழுது கொண்டே தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிவிட்டனர். நானோ, மக்களில் மிகவும் வலுவான இளைஞனாக இருந்தேன். எனவே, நான் (வீட்டை விட்டு) வெளியேறி முஸ்லிம்களுடன் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வேன்; கடைவீதிகளில் சுற்றித் திரிவேன்; ஆனால் என்னுடன் யாரும் பேசமாட்டார்கள். தொழுகைக்குப் பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும்போது அவர்களிடம் சென்று ‘சலாம்’ சொல்வேன். ‘என் சலாமுக்குப் பதில் சொல்வதற்காக அவர்கள் தங்கள் உதடுகளை அசைத்தார்களா இல்லையா?’ என்று எனக்குள் கேட்டுக்கொள்வேன். பிறகு அவர்களுக்கு அருகிலேயே நின்று தொழுவேன். அவர்களை ஓரக்கண்ணால் திருட்டுத்தனமாகப் பார்ப்பேன். நான் தொழுகையில் ஈடுபடும்போது அவர்கள் என்னைப் பார்ப்பார்கள்; நான் அவர்களைப் பார்க்கும்போது என்னை விட்டும் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள்.
மக்களின் புறக்கணிப்பு என் மீது நீடித்தபோது, நான் (என் தோட்டத்தின்) சுவர் ஏறிச் சென்று அபூ கதாதா (ரழி) அவர்களிடம் சென்றேன். அவர் என் தந்தையின் சகோதரர் மகனும், மக்களில் எனக்கு மிக விருப்பமானவரும் ஆவார். அவருக்கு நான் ‘சலாம்’ சொன்னேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் எனக்கு ‘சலாம்’ பதில் சொல்லவில்லை.
‘அபூ கதாதாவே! அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னிடம் கேட்கிறேன்; நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கிறேன் என்பதை நீ அறிவாயா?’ என்று கேட்டேன். அவர் அமைதியாக இருந்தார். மீண்டும் அவரிடம் அவ்வாறே கேட்டேன்; அவர் அமைதியாக இருந்தார். மீண்டும் அவரிடம் அவ்வாறே கேட்டேன். அதற்கு அவர், ‘அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்’ என்று கூறினார். உடனே என் கண்கள் குளமாகின. வந்த வழியே சுவர் ஏறித் திரும்பிவிட்டேன்.
நான் மதீனாவின் கடைவீதியில் நடந்து கொண்டிருந்தபோது, உணவுப் பொருட்களை விற்பதற்காக மதீனாவிற்கு வந்திருந்த ஷாம் நாட்டு விவசாயி ஒருவன், ‘கஅப் பின் மாலிக்கை எனக்கு யார் அடையாளம் காட்டுவது?’ என்று கேட்டான். மக்கள் என்னை அவனுக்குச் சுட்டிக் காட்டினார்கள். அவன் என்னிடம் வந்து, ‘கஸ்ஸான்’ மன்னனிடமிருந்து ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தான்.
அதில், ‘அம்மா பஅத்! உமது தோழர் (முஹம்மத்) உம்மை வெறுத்து ஒதுக்கிவிட்டார் என்ற செய்தி எமக்கு எட்டியது. இழிவு தரும் இடத்திலும், உமது உரிமைகள் பாழாகும் இடத்திலும் அல்லாஹ் உம்மை வைத்திருக்க வேண்டாம். நீர் எம்மிடம் வந்து சேரும்; உமக்கு நாம் ஆறுதல் அளிப்போம்’ என்று எழுதப்பட்டிருந்தது. அதை நான் படித்தபோது, ‘இதுவும் ஒரு சோதனையே’ என்று கூறிவிட்டு, அதை எடுத்துச் சென்று அடுப்பில் போட்டு எரித்துவிட்டேன்.
ஐம்பது இரவுகளில் நாற்பது இரவுகள் கழிந்த நிலையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தூதுவர் என்னிடம் வந்து, ‘நீர் உமது மனைவியை விட்டு விலகி இருக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிடுகிறார்கள்’ என்று கூறினார். ‘நான் அவளை விவாகரத்துச் செய்ய வேண்டுமா? அல்லது நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டேன். ‘இல்லை! அவளை விட்டு விலகி இரும்; அவளை நெருங்கவேண்டாம்’ என்று அவர் கூறினார். என் இரு தோழர்களுக்கும் இது போன்றே ஆளனுப்பிச் செய்தி சொன்னார்கள். எனவே நான் என் மனைவியிடம், ‘அல்லாஹ் இவ்விஷயத்தில் தீர்ப்பளிக்கும் வரை நீ உன் தாய் வீட்டிற்குச் சென்று அவர்களுடன் தங்கியிரு’ என்று சொன்னேன்.
ஹிலால் பின் உமைய்யாவின் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! ஹிலால் பின் உமைய்யா முதியவர்; அவருக்குப் பணிவிடை செய்ய ஆளில்லை. அவருக்கு நான் பணிவிடை செய்வதை வெறுக்கிறீர்களா?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இல்லை! (பணிவிடை செய்யலாம்). ஆனால், அவர் உம்மை நெருங்கக் கூடாது’ என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்கு எதிலும் நாட்டமில்லை. அவருக்கு இந்நிலை ஏற்பட்டது முதல் இன்றுவரை அவர் அழுது கொண்டே இருக்கிறார்’ என்று கூறினார்.
என் குடும்பத்தாரில் சிலர் என்னிடம், ‘ஹிலால் பின் உமைய்யாவின் மனைவி அவருக்குப் பணிவிடை செய்ய நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியது போன்று, நீங்களும் உங்கள் மனைவி உங்களுக்குப் பணிவிடை செய்ய அனுமதி கேட்கக் கூடாதா?’ என்று கேட்டனர். அதற்கு நான், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்க மாட்டேன். நான் ஓர் இளைஞன். நான் அனுமதி கேட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொல்வார்களோ என்று எனக்குத் தெரியாது’ என்று கூறிவிட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் எங்களோடு பேசுவதைத் தடை செய்ததிலிருந்து ஐம்பது இரவுகள் நிறைவடையும் வரை, (மேலும்) பத்து இரவுகள் நான் இவ்வாறே கழித்தேன்.
ஐம்பதாவது இரவின் காலையில், நான் எனது வீடுகளில் ஒன்றின் மாடியில் ஃபஜ்ருத் தொழுகையைத் தொழுதேன். அல்லாஹ் (குர்ஆனில் 9:118) எங்களை வருணித்திருந்தவாறு, பூமி விசாலமாக இருந்தும் எனக்கு அது சுருங்கிப்போய், என் உயிர் எனக்குப் பெரும் சுமையாகிப்போன நிலையில் நான் அமர்ந்திருந்தேன். அப்போது ‘ஸல்உ’ மலை மீது ஏறிய ஒருவர், தமது முழுச் சப்தத்தையும் கூட்டி, ‘கஅப் பின் மாலிக்கே! நற்செய்தி பெறவும்’ என்று கூவி அழைப்பதை நான் செவியுற்றேன். உடனே (நன்றியறிவிப்பாக) சஜ்தாவில் விழுந்தேன். ‘நிம்மதி வந்துவிட்டது’ என்பதை நான் அறிந்து கொண்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுகையைத் தொழுதபோது, அல்லாஹ் எங்கள் தவ்பாவை (பாவமன்னிப்பை) ஏற்றுக்கொண்டதை அறிவித்தார்கள். உடனே மக்கள் எங்களுக்கு நற்செய்தி சொல்ல விரைந்தார்கள். என் இரு தோழர்களை நோக்கி நற்செய்தியாளர்கள் சென்றனர். என்னிடம் ஒரு மனிதர் குதிரையை விரட்டிக் கொண்டு வந்தார். அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓடி வந்து மலை மீது ஏறிக் குரல் கொடுத்தார். குதிரையை விட சப்தம் விரைவாக (என்னை) அடைந்தது. எவருடைய சப்தத்தை நான் கேட்டேனோ அவர் என்னிடம் நற்செய்தி கூறுவதற்காக வந்தபோது, என்னுடைய இரண்டு ஆடைகளையும் கழற்றி அவருக்குப் பரிசளித்தேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்நாளில் அவ்விரண்டைத் தவிர வேறு ஆடை என்னிடமில்லை. பிறகு நான் இரண்டு ஆடைகளை இரவல் வாங்கி அணிந்து கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றேன்.
மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்தனர்; எனது தவ்பா அங்கீகரிக்கப்பட்டதற்காக எனக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். ‘அல்லாஹ் உமது தவ்பாவை ஏற்றுக் கொண்டதற்காக உமக்கு நல்வாழ்த்துக்கள்’ என்று கூறினர். நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீற்றிருந்தார்கள்; அவர்களைச் சுற்றி மக்கள் இருந்தனர். தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரழி) அவர்கள் என்னை நோக்கி ஓடி வந்து, எனக்குக் கைலாகு கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! முஹாஜிர்களில் அவரைத் தவிர வேறு யாரும் (எனக்காக) எழுந்து வரவில்லை. தல்ஹா (ரழி) அவர்கள் செய்ததை நான் மறக்க மாட்டேன்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் மகிழ்ச்சியால் முகம் பிரகாசிக்க, ‘உம்மை உமது தாய் ஈன்றெடுத்த நாள் முதல் உம்மைக் கடந்து சென்ற நாட்களிலேயே மிகச் சிறந்த நாளிது; நற்செய்தி பெற்றுக்கொள்வீராக!’ என்று கூறினார்கள்.
‘அல்லாஹ்வின் தூதரே! இது தங்களிடமிருந்தா? அல்லது அல்லாஹ்விடமிருந்தா?’ என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இல்லை! அல்லாஹ்விடமிருந்து தான்’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியடையும்போது அவர்களுடைய முகம் சந்திரனின் துண்டைப் போன்று பிரகாசிக்கும். அதை நாங்கள் நன்கறிவோம்.
அவர்களுக்கு முன்னால் நான் அமர்ந்தபோது, ‘அல்லாஹ்வின் தூதரே! என் தவ்பா அங்கீகரிக்கப்பட்டதற்கு நன்றியாக, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் (அர்ப்பணமாக) என் செல்வத்தையெல்லாம் தர்மமாக வழங்கி விடுகிறேன்’ என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘உமது செல்வத்தில் சிலவற்றை உமக்காக வைத்துக் கொள்ளும்; அதுவே உமக்குச் சிறந்தது’ என்று கூறினார்கள். நான், ‘கைபரில் எனக்குக் கிடைத்த பங்கை மட்டும் வைத்துக் கொள்கிறேன்’ என்று கூறினேன்.
பிறகு, ‘அல்லாஹ்வின் தூதரே! நான் உண்மை பேசியதால்தான் அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். நான் உயிரோடு இருக்கும் வரை உண்மையே பேசுவேன் என்பது என் தவ்பாவின் (பாவமன்னிப்பின்) ஒரு பகுதியாகும்’ என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதைச் சொன்னது முதல் இன்று வரை, உண்மையைப் பேசியதற்காக அல்லாஹ் எனக்கு அருளியதைப் போன்று முஸ்லிம்களில் வேறு எவருக்கும் அருளியதாக நான் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைச் சொன்னது முதல் இன்று வரை நான் பொய்யே பேசியதில்லை. மீதமுள்ள காலங்களிலும் அல்லாஹ் என்னைப் பாதுகாப்பான் என்று நான் ஆதரவு வைக்கிறேன்” என்று கஅப் (ரழி) கூறினார்.
மேலும், அல்லாஹ் தனது தூதர் (ஸல்) அவர்களுக்கு பின்வரும் வசனங்களை அருளினான்:
لَقَد تَّابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ...
(லக்கத் தாபல்லாஹு அலன்-நபிய்யி வல்-முஹாஜிரீன வல்-அன்ஸாரி...)
“நிச்சயமாக அல்லாஹ் நபியையும், முஹாஜிர்களையும், அன்ஸார்களையும் மன்னித்தான்...” (அல்குர்ஆன் 9:117)
அல்லாஹ்வின் வாக்கு எதுவரை எனில்:
...وَكُونُوا مَعَ الصَّادِقِينَ
(...வ கூனூ மஅஸ்-ஸாதிகீன்)
“...மேலும், உண்மையாளர்களுடன் ஆகிவிடுங்கள்” (அல்குர்ஆன் 9:119) என்பது வரை.
(கஅப் (ரழி) தொடர்ந்தார்:) “அல்லாஹ் எனக்கு இஸ்லாத்திற்கு வழிகாட்டிய பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் பொய் சொல்லாமல் இருந்ததை விடப் பெரிய அருட்கொடை எதையும் என் வாழ்வில் அல்லாஹ் எனக்கு வழங்கியதாக நான் கருதவில்லை. நான் பொய் சொல்லியிருந்தால், பொய் சொன்னவர்கள் அழிந்து போனது போன்று நானும் அழிந்திருப்பேன். ஏனெனில் வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டபோது, பொய் சொன்னவர்களைப் பற்றிக் கூறியது போன்று மிக மோசமாக அல்லாஹ் வேறு யாரைப் பற்றியும் கூறவில்லை.
அல்லாஹ் (அவர்களைப் பற்றிக்) கூறும்போது:
سَيَحْلِفُونَ بِاللَّهِ لَكُمْ إِذَا انقَلَبْتُمْ إِلَيْهِمْ لِتُعْرِضُوا عَنْهُمْ...
(ஸயஹ்லிஃபூன பில்லாஹி லகும் இதன்கலப்தும் இலைஹிம் லிதுஃரிளூ அன்ஹும்...)
“நீங்கள் அவர்களிடம் திரும்பியபோது, அவர்களை நீங்கள் புறக்கணித்துவிட வேண்டும் என்பதற்காக அல்லாஹ்மீது ஆணையிடுவார்கள்...” (அல்குர்ஆன் 9:95)
எதுவரை எனில்:
...فَإِنَّ اللَّهَ لَا يَرْضَىٰ عَنِ الْقَوْمِ الْفَاسِقِينَ
(...ஃபஇன்னல்லாஹ லா யர்ளா அனில்-கவ்மில் ஃபாஸிகீன்)
“...நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான கூட்டத்தாரைப் பற்றித் திருப்தியடைய மாட்டான்” (அல்குர்ஆன் 9:96) என்பது வரை.
கஅப் (ரழி) அவர்கள் (தொடர்ந்து) கூறினார்கள்:
“எங்கள் மூவரின் விவகாரம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சத்தியம் செய்து, அதனை நபியவர்கள் ஏற்றுக்கொண்டு, விசுவாசப் பிரமாணம் பெற்று, பாவமன்னிப்பும் தேடினார்களே... அத்தகையோரின் விவகாரத்தை விட்டும் பிற்படுத்தப்பட்டது. எங்கள் விவகாரத்தை அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிற்படுத்தினார்கள். இதைக் குறித்தே அல்லாஹ்,
وَعَلَى الثَّلَاثَةِ الَّذِينَ خُلِّفُوا...
(வ அலத்-தலாதி தில்லதீன குல்லிஃபூ...)
“இன்னும், (தீர்ப்பு) பிற்படுத்தப்பட்ட அந்த மூன்று நபர்களையும் (அல்லாஹ் மன்னித்தான்)” (அல்குர்ஆன் 9:118) என்று கூறினான்.
இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ள ‘பிற்படுத்தப்பட்டார்கள்’ (குல்லிஃபூ) என்பது, போருக்கு வராமல் பின்தங்கியதைக் குறிக்காது. மாறாக, எங்களுடைய விவகாரத்தை (உடனே முடிவு செய்யாமல்) தாமதப்படுத்தி, பிற்படுத்தியதையே குறிக்கும். சத்தியம் செய்து, காரணங்கள் கூறி, அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்களே... அவர்களின் விஷயத்திற்கு மாற்றமாக (எங்கள் விஷயம் அமைந்தது).”