அப்துல்லாஹ் இப்னு புரைதா (ரலி) அவர்கள் தம் தந்தையிடமிருந்து அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் அமர்ந்திருந்தபோது, ஒரு பெண்மணி அவர்களிடம் வந்து, "நான் என் தாயாருக்கு ஓர் அடிமைப் பெண்ணைத் தர்மமாகக் கொடுத்திருந்தேன். இப்போது என் தாயார் இறந்துவிட்டார்கள்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உனக்குரிய நற்கூலி உறுதியாகிவிட்டது; வாரிசுரிமை அந்த அடிமைப் பெண்ணை உனக்கே திருப்பி அளித்துவிட்டது" என்று கூறினார்கள்.
அப்பெண்மணி, "அல்லாஹ்வின் தூதரே! அவர்மீது ஒரு மாத நோன்பு (கடமையாக) உள்ளது. அவருக்காக நான் நோன்பு நோற்கலாமா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவருக்காக நீ நோன்பு நோற்பாயாக!" என்றார்கள்.
அப்பெண்மணி, "அவர்கள் ஒருபோதும் ஹஜ் செய்யவில்லை. அவருக்காக நான் ஹஜ் செய்யலாமா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவருக்காக நீ ஹஜ் செய்வாயாக!" என்றார்கள்.