உபாதா பின் அஸ்-ஸாமித் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் இருந்து (மார்க்கக் கல்வியை) பெற்றுக்கொள்ளுங்கள், என்னிடம் இருந்து (மார்க்கக் கல்வியை) பெற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ் அந்தப் பெண்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தியிருக்கிறான். திருமணமாகாத ஓர் ஆண், திருமணமாகாத ஒரு பெண்ணுடன் விபச்சாரம் செய்தால், (அவர்களுக்கு) நூறு கசையடிகளும், ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தலும் (தண்டனையாக விதிக்கப்படும்). திருமணமான ஓர் ஆண், திருமணமான ஒரு பெண்ணுடன் விபச்சாரம் செய்தால், அவர்களுக்கு நூறு கசையடிகளும், கல்லெறிந்து கொல்லப்படும் தண்டனையும் (நிறைவேற்றப்படும்).
உபாதா பின் அஸ்ஸாமித் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) அருளப்பெறும்போதெல்லாம் அவர்கள் அதனால் சிரமத்திற்குள்ளாவார்கள்; மேலும் அவர்களின் முகம் (அதனால்) நிறம் மாறிவிடும். ஒரு நாள் அவர்கள் மீது வஹீ அருளப்பெற்றது; (வழக்கம் போல்) அந்நிலைக்கு அவர்கள் ஆளானார்கள். அவர்கள் மீதிருந்த அந்த நிலை நீங்கியதும் அவர்கள் கூறினார்கள்:
"என்னிடமிருந்து (இச்சட்டத்தை) அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் அப்பெண்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளான். திருமணமானவர் திருமணமானவருடனும், திருமணமாகாதவர் திருமணமாகாதவருடனும் (விபச்சாரம் செய்தால்); திருமணமானவருக்கு நூறு கசையடிகளும் பின்னர் கல்லெறிந்து கொல்லுதலும் (தண்டனையாகும்). திருமணமாகாதவருக்கு நூறு கசையடிகளும் பின்னர் ஓராண்டு நாடு கடத்தலும் (தண்டனையாகும்)."