அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா (உடன்படிக்கை நடைபெற்ற) ஆண்டிற்கு அடுத்த ஆண்டான (ஹிஜ்ரி) ஏழாம் ஆண்டு துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்பவராகப் புறப்பட்டார்கள். அது (கடந்த ஆண்டு) முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) அவர்களை மஸ்ஜிதுல் ஹராமிற்குச் செல்லவிடாமல் தடுத்த அதே மாதமாகும். அவர்கள் 'யஃஜஜ்' என்ற இடத்தை அடைந்தபோது, தங்களுக்கு முன்பாக ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களை, மைமூனா பின்த் அல்ஹாரிஸ் பின் ஹஸ்ன் அல்ஆமிரிய்யா (ரழி) அவர்களிடம் (திருமணப்) பெண் கேட்க அனுப்பி வைத்தார்கள். மைமூனா (ரழி) அவர்கள் தமது (திருமண) விவகாரத்தை அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரழி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். (மைமூனா (ரழி) அவர்களின் சகோதரியான) உம்முல் ஃபழ்ல் (ரழி) அவர்கள் அவருக்கு (அப்பாஸ் ரழி அவர்களுக்கு) மனைவியாக இருந்தார்கள். எனவே, அப்பாஸ் (ரழி) அவர்கள் மைமூனா (ரழி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தார்கள்.
பின்னர் நபி (ஸல்) அவர்கள் 'ஸரிஃப்' என்ற இடத்தில் சிறிது காலத்திற்குப் பிறகு தங்கினார்கள். மைமூனா (ரழி) அவர்கள் (அங்கு) வந்ததும், நபி (ஸல்) அவர்கள் ஸரிஃபில் அவர்களுடன் இல்லற வாழ்வைத் தொடங்கினார்கள். அதன்பின்னர், மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரழி) அவர்களின் மரணம் (அங்கு) நிகழ வேண்டும் என்று அல்லாஹ் விதியமைத்திருந்தான். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கு அவர்களுடன் இல்லற வாழ்வைத் தொடங்கினார்களோ அதே இடத்தில் (ஸரிஃபில்) அவர்கள் மரணமடைந்தார்கள்.