நானும் அல்-காசிமும் ஆயிஷா (ரழி) அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தோம். அல்-காசிம் பேச்சில் (இலக்கணப்) பிழை செய்பவராகவும், ஓர் 'உம்மு வுலத்'தின் (எஜமானருக்குக் குழந்தை பெற்ற அடிமைப் பெண்ணின்) மகனாகவும் இருந்தார். ஆயிஷா (ரழி) அவரிடம், "உனக்கு என்ன நேர்ந்தது? என் சகோதரரின் மகனான இவர் (இப்னு அபீ அதீக்) பேசுவதைப் போன்று நீ பேசுவதில்லையே? உனக்கு எங்கிருந்து இந்தக்குறை வந்தது என்பதை நான் அறிவேன். இவரை இவருடைய தாய் (நன்றாக) வளர்த்தார்; உன்னை உன் தாய் (அவ்வாறுதான்) வளர்த்தார்" என்று கூறினார்கள்.
இதனால் காசிம் கோபமடைந்தார்; ஆயிஷா (ரழி) மீது மனக்கசப்பு கொண்டார். ஆயிஷா (ரழி) அவர்களுக்கு உணவுத் தட்டு கொண்டு வரப்பட்டதைக் கண்டதும் காசிம் எழுந்தார். ஆயிஷா (ரழி), "எங்கே செல்கிறாய்?" என்று கேட்டார்கள். அவர், "நான் தொழப் போகிறேன்" என்றார். ஆயிஷா (ரழி), "அமர்" என்றார்கள். அவர் "நான் தொழ வேண்டும்" என்றார். அதற்கு ஆயிஷா (ரழி), "(சொன்ன பேச்சை மீறும்) துரோகியே! அமர். ஏனெனில், 'உணவு முன்னே இருக்கும்போதும், இரு மலஜலங்கள் ஒருவரை நெருக்கிக் கொண்டிருக்கும்போதும் தொழுகை இல்லை' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்று கூறினார்கள்.