அப்துர் ரஹ்மான் பின் அபீ அம்ரா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலுக்குள் நுழைந்து தனியாக அமர்ந்தார்கள். நான் அவர்கள் அருகில் சென்று அமர்ந்தேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: "என் சகோதரரின் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்: 'யார் இஷா தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுகிறாரோ, அவர் இரவின் பாதியளவு நேரம் நின்று (வணங்கியவரைப்) போலாவார். மேலும், யார் சுப்ஹ் (ஃபஜ்ர்) தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுகிறாரோ, அவர் இரவு முழுவதும் நின்று (வணங்கியவரைப்) போலாவார்'."
உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் இஷா (தொழுகையை) ஜமாஅத்துடன் (பள்ளிவாசலில்) கலந்துகொள்கிறாரோ, அவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போலாவார். மேலும், யார் இஷாவையும் ஃபஜ்ரையும் ஜமாஅத்துடன் தொழுகிறாரோ, அவர் இரவு முழுவதும் நின்று வணங்கியவரைப் போலாவார்."