ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘பனூ முஸ்தலிக்’ குலத்தாரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது என்னை (ஒரு காரியமாக) அனுப்பினார்கள். நான் (திரும்பி) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தம்முடைய ஒட்டகத்தின் மீது (அமர்ந்தபடி) தொழுதுகொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம் பேசினேன். அவர்கள் தம் கையால் எனக்குச் சைகை செய்தார்கள். (இதை அறிவிக்கும்போது அறிவிப்பாளர்) ஸுஹைர், தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். பிறகு நான் (மீண்டும்) அவர்களிடம் பேசினேன். அப்போதும் அவர்கள் எனக்குச் சைகை செய்தார்கள். – ஸுஹைர் (இம்முறை) பூமியை நோக்கிக் கையைக் காண்பித்துச் சைகை செய்தார்கள். – அவர்கள் (குர்ஆன்) ஓதுவதை நான் செவியுற்றேன்; அவர்கள் தம் தலையால் சைகை செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் (தொழுகையை) முடித்ததும், "நான் உன்னை எதற்காக அனுப்பினேனோ அந்தக் காரியம் என்னவானது? நான் தொழுதுகொண்டிருந்த காரணத்தால்தான் உன்னிடம் பேச முடியவில்லை" என்று கூறினார்கள்.
ஸுஹைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அபூஸுபைர் (ரஹ்) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவிக்கும்போது) கஅபாவை முன்னோக்கி அமர்ந்திருந்தார்கள். (அப்போது) அபூஸுபைர் அவர்கள், பனூ முஸ்தலிக் குலத்தார் இருந்த திசையைத் தம் கையால் சுட்டிக்காட்டினார்கள். அவர்கள் கை சுட்டிய திசை கஅபாவை நோக்கியதாக இருக்கவில்லை.
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம், அவர்கள் என்னை ஒரு அலுவல் நிமித்தம் அனுப்பினார்கள், நான் திரும்பி வந்தபோது அவர்கள் தமது வாகனத்தின் மீது தொழுதுகொண்டிருந்ததை (நான் கண்டேன்), அவர்களது முகம் கிப்லாவை நோக்கி இருக்கவில்லை. நான் அவர்களுக்கு ஸலாம் கூறினேன், ஆனால் அவர்கள் எனக்கு பதிலளிக்கவில்லை. அவர்கள் தொழுகையை முடித்ததும், அவர்கள் கூறினார்கள்: நான் தொழுதுகொண்டிருந்தேன் என்பதே தவிர, உமது ஸலாமுக்கு பதிலளிப்பதிலிருந்து வேறு எதுவும் என்னைத் தடுக்கவில்லை.