முஆவியா பின் அல்-ஹகம் அஸ்-சுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்த ஒரு மனிதர் தும்மினார். உடனே நான், 'யர்ஹமுகல்லாஹ்' (அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!) என்று கூறினேன். மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான், "என் தாய் என்னை இழக்கட்டும்! உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?" என்று கேட்டேன்.
அவர்கள் தங்கள் கைகளால் தங்கள் தொடைகள் மீது அடித்தார்கள். அவர்கள் என்னை அமைதிப்படுத்துகிறார்கள் என்பதை நான் உணர்ந்தபோது, நான் மௌனமானேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் - என் தந்தையும் தாயும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களை விடச் சிறந்ததொரு ஆசிரியரை நான் கண்டதேயில்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னைக் கடிந்து கொள்ளவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை - அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக இந்தத் தொழுகையானது, மனிதர்களின் உலகப் பேச்சுக்களுக்குத் தகுதியானதல்ல; இது தஸ்பீஹ் (துதித்தல்), தக்பீர் (பெருமைப்படுத்துதல்) மற்றும் குர்ஆன் ஓதுதல் ஆகியவற்றுக்கே உரியதாகும்" (அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது போன்று).
நான் கூறினேன்: "அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்திற்கு (ஜாஹிலிய்யா) மிக நெருக்கமானவன்; அல்லாஹ் இஸ்லாத்தை (எங்களுக்குக்) கொண்டு வந்தான். எங்களில் சிலர் சோதிடர்களிடம் (கஹின்கள்) செல்கின்றனர்."
அதற்கு அவர்கள், "அவர்களிடம் நீர் செல்ல வேண்டாம்" என்றார்கள்.
"எங்களில் சிலர் சகுனம் பார்க்கின்றனர்" என்று நான் கூறினேன். அதற்கு அவர்கள், "அது அவர்கள் தங்கள் மனங்களில் உணரும் (வெறும்) எண்ணமேயாகும். அது அவர்களை (செயல்களிலிருந்து) தடுத்துவிட வேண்டாம்" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் இப்னுஸ் ஸப்பாஹ் (ரஹ்), "உங்களைத் தடுத்துவிட வேண்டாம்" என்று அறிவிக்கிறார்கள்).
"எங்களில் சிலர் கோடுகள் கிளிக்கின்றனர் (குறி பார்க்கின்றனர்)" என்று கூறினேன். அதற்கு அவர்கள், "(முன்னொரு காலத்தில்) இறைத்தூதர்களில் ஒருவர் கோடு கிழிப்பவராக இருந்தார்; எவருடைய குறி (அந்த இறைத்தூதரின்) குறியோடு ஒத்துப்போகிறதோ அது (அனுமதிக்கப்)படும்" என்று கூறினார்கள்.
மேலும் நான் கூறினேன்: "எனக்கொரு அடிமைப் பெண் இருக்கிறாள்; அவள் உஹுத் மற்றும் ஜவ்வானிய்யா (மலைப்) பகுதிகளில் என் ஆடுகளை மேய்த்து வந்தாள். ஒருநாள் அங்கு நான் சென்றபோது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடு ஒன்றை (பிடித்துக்) கொண்டு சென்றிருந்ததைக் கண்டேன். நானும் ஆதமுடைய மக்களில் ஒருவன்தானே! அவர்கள் கோபப்படுவதைப் போன்றே நானும் (வருத்தப்பட்டு) கோபப்படுவேன்; (அந்தக் கோபத்தில்) அவளை அறைந்துவிட்டேன். பின்னர் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள் இச்செயலை என்மீது பெரும் குற்றமாக கருதினார்கள்."
நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை உரிமை விட்டுவிடலாமா?" என்று கேட்டேன். அவர்கள், "அவளை என்னிடம் அழைத்து வாரும்" என்றார்கள். நான் அவளை அவர்களிடம் அழைத்துச் சென்றேன்.
அவர்கள் அவளிடம், "அல்லாஹ் எங்கே இருக்கிறான்?" என்று கேட்டார்கள். அவள், "வானத்தில்" (ஃபிஸ் ஸமாஃ) என்று பதிலளித்தாள்.
அவர்கள், "நான் யார்?" என்று கேட்டார்கள். அவள், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர்" என்று கூறினாள்.
உடனே அவர்கள், "அவளை விடுதலை செய்துவிடுவீராக! ஏனெனில் அவள் ஓர் இறைநம்பிக்கையாளர் (மூமினா)" என்று கூறினார்கள்.
முஆவியா பின் அல்-ஹகம் அஸ்-சுலமீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நான் கூறினேன்: 'அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்திற்கு (ஜாஹிலிய்யாவிற்கு) மிக நெருக்கமான காலத்தில் இருக்கிறோம். பிறகு அல்லாஹ் இஸ்லாத்தைக் கொண்டு வந்தான். எங்களில் சிலர் சகுனம் பார்க்கிறார்கள்.' அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: 'அது அவர்கள் தங்கள் உள்ளங்களில் உணரும் ஒரு விஷயமாகும். அது அவர்களை (செயல்படுவதிலிருந்து) தடுத்துவிட வேண்டாம்.' நான் கூறினேன்: 'மேலும், எங்களில் சிலர் குறி சொல்பவர்களிடம் செல்கிறார்கள்.' அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: 'அவர்களிடம் செல்லாதீர்கள்.' நான் கூறினேன்: 'எங்களில் சிலர் கோடுகள் போடுகிறார்கள் (குறி பார்க்கிறார்கள்).' அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: 'நபிமார்களில் ஒருவர் கோடுகள் போடுபவராக இருந்தார். எனவே, எவருடைய கோடு போடுதல் அவருடைய கோடு போடுதலுடன் ஒத்துப்போகிறதோ, அது (அனுமதிக்கப்பட்டதாக) இருக்கும்.'"
அவர் (ரழி) கூறினார்: "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்த ஒரு மனிதர் தும்மினார். நான் 'யர்ஹமுகல்லாஹ்' (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று கூறினேன். மக்கள் என்னை வெறித்துப் பார்த்தார்கள். நான், 'என் தாய் என்னை இழக்கட்டும்! உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?' என்று கேட்டேன். மக்கள் தங்கள் கைகளால் தங்கள் தொடைகள் மீது தட்டினார்கள். அவர்கள் என்னை அமைதிப்படுத்துகிறார்கள் என்பதை நான் கண்டபோது, நான் அமைதியானேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையை) முடித்ததும் - என் தந்தையும் தாயும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்; அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களை விடச் சிறந்த ஓர் ஆசிரியரை நான் கண்டதே இல்லை - அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் என்னை அடிக்கவுமில்லை; கடிந்து கொள்ளவுமில்லை; என்னைத் திட்டவுமில்லை. அவர்கள் (ஸல்) கூறினார்கள்: 'நிச்சயமாக நமது இந்தத் தொழுகையானது, மனிதர்களின் பேச்சுகள் எதற்கும் தகுதியானதல்ல. இது தஸ்பீஹ் (துதித்தல்), தக்பீர் (பெருமைப்படுத்துதல்) மற்றும் குர்ஆன் ஓதுவதற்கு உரியதாகும்.'
பிறகு (நான் கூறினேன்): 'உஹுத் மற்றும் அல்-ஜவ்வானிய்யா (பகுதிகளுக்கு) நேரே எனக்குச் சொந்தமான ஆடுகள் சிலவற்றை என்னுடைய அடிமைப்பெண் ஒருத்தி மேய்த்துக் கொண்டிருந்தாள். நான் அங்கு சென்று பார்த்தபோது, ஓநாய் அந்த ஆடுகளில் ஒன்றை கொண்டு சென்றிருந்ததைக் கண்டேன். நானும் ஆதமுடைய மக்களில் ஒரு மனிதன் தான்; அவர்கள் கோபப்படுவது போன்றே நானும் கோபப்படுவேன். எனவே (கோபத்தில்) நான் அவளை அறைந்துவிட்டேன். பிறகு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன் (நடந்ததைத் தெரிவித்தேன்). அவர்கள் அதை என் மீது பெரும் குற்றமாகக் கருதினார்கள். நான் கூறினேன்: 'அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை செய்துவிடட்டுமா?' அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: 'அவளை அழையுங்கள்.'
(அவள் வந்ததும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளிடம், 'கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் எங்கே இருக்கிறான்?' என்று கேட்டார்கள். அவள் கூறினாள்: 'வானத்தில்.' அவர்கள் (ஸல்) கேட்டார்கள்: 'நான் யார்?' அவள் கூறினாள்: 'நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்).' அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: 'இவளை விடுதலை செய்துவிடுங்கள்; நிச்சயமாக இவள் ஒரு இறைநம்பிக்கையாளர் (முஃமினா) ஆவாள்.'"