பக்கம் - 280 -
மலைகளைவிட உறுதியும் வலுவும் நிறைந்த இறைநம்பிக்கையின் ஆற்றலுக்கு முன் இந்த முயற்சி என்ன பலனளிக்கும்? அபூ ஸுஃப்யானின் இந்தப் பேரத்திற்கு மிகக் கடுமையாக பதிலளித்ததுடன், அவருக்கு வெறுப்பூட்டும் வார்த்தைகளையும் மதீனா முஸ்லிம்கள் கூறினர்.
நேரம் நெருங்கியது. இரு கூட்டத்தினரும் ஒருவரை ஒருவர் நெருங்கினர். இந்நேரத்திலும் மேற்கூறப்பட்ட அதே நோக்கத்திற்காக குறைஷிகள் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்தனர். அதாவது, ‘அபூ ஆமிர்’ என்று அழைக்கப்படும் ஒருவன் இருந்தான். இவனது இயற்பெயர் ‘அப்து அம்ர் இப்னு ஸைஃபி“. இவனை மக்கள் ‘ராப்’ துறவி என்று புகழ்ந்தனர். ஆனால், நபி (ஸல்) அவர்களோ இவனை ‘அல் ஃபாஸிக்’ (பெரும்பாவி) என்று இகழ்ந்தார்கள். இவன் அறியாமைக் காலத்தில் மதீனாவில் அவ்ஸ் கிளையினரின் தலைவனாக இருந்தவன். இஸ்லாமிய மார்க்கம் வந்தவுடன் அதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நபியவர்களுடன் வெளிப்படையாக பகைமைக் கொண்டான்.
இவன் மதீனாவில் இருந்து வெளியேறி மக்காவிற்குச் சென்றான். அங்கு நபியவர்களுக்கு எதிராக போர் புரிய குறைஷிகளைத் தூண்டினான். இப்போரில் முதல் அணிகளில் பலதரப்பட்ட வமிசத்தைச் சேர்ந்த வாலிபர்களும் மக்கா நகர அடிமைகளும் இருந்தனர். இவனும் அவர்களுடன் இணைந்து கொண்டு அணியின் முதல் வரிசைக்கு வந்தான். மதீனாவாசிகள் தன்னைப் பார்த்தால் தனக்குத்தான் கட்டுப்படுவார்கள். நபியவர்களை விட்டு விலகிக் கொள்வார்கள் என்று குறைஷிகளுக்கு வாக்களித்தான். பிறகு முஸ்லிம்களை முன்னோக்கி அவர்களில் தனது கூட்டத்தினரைக் கூவி அழைத்து, “அவ்ஸ் கிளையினரே! நான்தான் அபூ ஆமிர்!” என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்தினான். அதற்கு முஸ்லிம்கள் “பாவியே! அல்லாஹ் உனக்கு அருள்புரிய மாட்டான் உன்னிடம் பேசுவதை நாங்கள் விரும்பவில்லை!” என்று பதில் கூறினார்கள். அதற்கவன் “எனது கூட்டத்தினருக்கு நான் வந்த பின்பு ஏதோ தீங்கு நிகழ்ந்துவிட்டது” என்று கூறி தொடர்ந்து பேசுவதை நிறுத்திக் கொண்டான். (இவன் போரில் கடுமையாக முஸ்லிம்களிடம் சண்டையிட்டான். அவர்களைக் கல்லால் எறிந்து தாக்கினான்.)
இறைநம்பிக்கையாளர்களின் அணிகளில் பிரிவினையை ஏற்படுத்த குறைஷிகள் மேற்கொண்ட இரண்டாவது முயற்சியும் தோல்வியைத் தழுவியது. எதிரிகளிடம் போர் வீரர்களும் அதிகம் இருந்தனர். போர் சாதனங்களும் அதிகமாக இருந்தன. எனினும், முஸ்லிம்களைப் பற்றிய பயமும் அச்சமும் அவர்களின் உள்ளங்களில் நிறைந்திருந்த காரணத்தினால்தான் இவ்வாறு குறுக்கு வழியை அவர்கள் கையாண்டனர். ஆனால், அதுவும் அவர்களுக்குப் பலனைத் தரவில்லை.
குறைஷிப் பெண்கள் வெறியூட்டுகின்றனர்
குறைஷிப் பெண்களும் போரில் தங்களால் முடிந்த பங்காற்றினர். இப்பெண்களுக்கு ஹிந்த் பின்த் உத்பா (அபூ ஸுஃப்யானின் மனைவி) தலைமையேற்று வழி நடத்தினார். தமது படை வீரர்களிடையே சென்று மேளங்களை அடித்து பாட்டுப் பாடி உணர்வுகளைத் தூண்டினர். அம்பெறியும் வீரர்கள், ஈட்டியால் தாக்கும் வீரர்கள், வாள் வீசும் வீரர்கள், கொடியேந்தியிருந்த வீரர்கள் என படையினர் அனைவரையும் கவர்ந்து அவர்களை ஆவேசப்படுத்தினர்.
கொடியேந்தியிருந்த வீரர்களைப் பார்த்து பின்வருமாறு கவிபாடினர்.
“அப்துத் தார் வமிசத்தினரே பாருங்கள்!
படையின் பிற்பகுதி பாதுகாவலர்களே பாருங்கள்!
வாளை வீசி நன்றாகப் போரிடுங்கள்!”